மகளிர்மணி

கதகளி  நடனம்  பயின்ற  முதல் அமெரிக்கப் பெண்!

27th Jan 2021 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT

 

இந்திய நாட்டிய வரலாற்றில் தனக்கென்று ஓர் இடத்தைப் பெற்றுள்ளவர் ராகினிதேவி. 1896- ஆம் ஆண்டு அமெரிக்காவில் மிச்சிகன் நகரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் எஸ்தர் ஷெர்மன். சிறுவயதிலிருந்தே இந்திய நடனங்கள் மீது ஈடுபாடு கொண்டிருந்த எஸ்தர், சமஸ்கிருத பண்டிதர் மூலம் "அபிநய நாட்டிய சாஸ்த்ரா' என்ற புத்தகத்தை வாங்கி இந்திய நடனம் பற்றிய தகவல்களைப் படித்து தெரிந்து கொண்டார்.

அதன் மூலம் நியூயார்க்கில் வசித்து வந்த இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளை வைத்து, இந்திய இசைக்கருவிகள் துணையுடன் தானே சில நாட்டிய நிகழ்ச்சிகளை தயாரித்து அவ்வப்போது நடத்தி வந்தார்.

இந்த சமயத்தில் டாக்டர் ஜேம்ஸ் கஸின்ஸ் என்பவரின் கதகளி பற்றிய ஸ்லைடு ஷோவை பார்த்த எஸ்தருக்கு அதைப் பற்றி தெரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் ஆர்வமேற்பட்டது. கூடவே முந்தைய பிறவியில் தான் ஓர் இந்தியராக பிறந்திருக்கக் கூடுமென்ற நம்பிக்கையும் வளர்ந்தது. இந்திய மருத்துவர் ராம்லால் பாஜ்பை என்பவரை மணந்த எஸ்தர், தன்னுடைய பெயரை ராகினிதேவி என மாற்றிக் கொண்டார்.

ADVERTISEMENT

நண்பரொருவரின் மதன் தியேட்டர்ஸ் மூலம் இந்தியாவில் தன்னுடைய நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக, கணவரின் எச்சரிக்கையை மீறி கப்பல் மூலம் இந்தியா வந்தார். கர்ப்பமாக இருந்த ராகினிதேவிக்கு கடல் பயணம் ஒத்துக் கொள்ளவில்லை. கடுமையான காய்ச்சலுடன் மெட்ராஸ் ( தற்போது சென்னை) வந்திறங்கியவர், சிநேகிதி வீட்டில் தங்கினார். தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து மயிலாப்பூர் கௌரி அம்மாவிடம் நாட்டிய ம் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

கூடவே ஜதீஸ்வரம் மற்றும் தில்லானா போன்றவைகளையும் கற்றுக் கொண்டார். தனக்குப் பிறந்த பெண்குழந்தைக்கு இந்திராணி என பெயரிட்டு, குழந்தைப் பருவத்திலிருந்தே அவளுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்ததோடு, மேலும் திறமையை வளர்த்துக் கொள்ள சொக்கலிங்கம் பிள்ளையிடம் பயிற்சி பெற வைத்தார். (ஆர்கிடெக்ட் ஹபீப் ரஹ்மான் என்பவரை சிறுவயதிலேயே மணந்து கொண்ட இந்திராணி, அவரது 20-ஆவது வயதில் "மிஸ் இந்தியா' விருது பெற்றது தனிக்கதை).

நடனத்தில் நன்கு தேர்ச்சிப் பெற்ற ராகினிதேவியின் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்த பம்பாய் ராயல் ஓபரா ஹவுஸ், அவரது நிகழ்ச்சிகளை ஒருவார காலம் நடத்த ஏற்பாடு செய்தது. தன் ஐந்துவயது குழந்தை இந்திராணியுடன் பம்பாய் ( தற்போது மும்பை) சென்ற ராகினி தேவி, ஸீகிரின் ஓட்டலில் தங்கி கடுமையான பயிற்சி செய்து நிகழ்ச்சியை நடத்தியபோது பொதுமக்களும் , பத்திரிகைகளும் அவரை பெரிதும் பாராட்டினர். இவரது புகைப்படத்துடன் வந்த விமர்சனங்களில், இந்திய நடனக் கலைஞரை உருவாக்கியதாக பாராட்டி எழுதினர். மேலும் இவரது நிகழ்ச்சிகளை தில்லி, அலகாபாத், கான்பூர், லக்னௌ, புணே போன்ற நகரங்களில் நடத்த ராகினிதேவியின் கணவர் ராம்லால் பாஜ்பையின் நண்பரொருவர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மகாராஷ்டிராவில் நிகழ்ச்சிகளை நடத்தியபோது அங்குள்ள சுற்றுச் சூழல் ராகினி தேவிக்குப் பிடித்துப் போகவே, ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து வேலைக்காரர்கள், பாதுகாவலர் ஆகியோரை அமர்த்திக் கொண்டதோடு, தன்னுடைய நடன நிகழ்ச்சிகளை மக்கள் தெரிந்து கொள்ள

மாட்டு வண்டிகளில் பெரிய போஸ்டர்களை ஒட்டி, வாத்திய குழுவினருடன் நகர்வலம் போகச் சொல்வாராம். இது நல்ல வரவேற்பை பெற்றதோடு. நடன நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூட்டமும் அதிகரித்தது. அடுத்தடுத்து, பல நகரங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தியவர், அகமதாபாத்தில் கண்ணாடி நடனம், பாம்பு நடனம், மார்வாரி நடனம் போன்ற வித்தியாசமான நடனங்களை கற்றுக் கொண்டார்.

கேரளாவுக்குச் சென்று கதகளி நடனம் கற்க வேண்டுமென்ற ராகினி தேவியின் நீண்ட கால கனவு நிறைவேறும் வகையில், திருவாங்கூர் மகாராஜா, இவரது நடன நிகழ்ச்சியை நடத்த அழைப்பு விடுத்தார். கேரளாவில் கவிஞர் வல்லத்தோல் என்பவரை சந்தித்த ராகினிதேவி, கதகளி கற்றுக் கொள்ள வேண்டுமென்ற தன்னுடைய ஆசையை அவரிடம் தெரிவித்தார். ஆண் நடனக் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்கும் கேரள கலா மண்டலத்தில், ராகினி தேவிக்கு கதகளி கற்றுத் தரும்படி சிபாரிசு செய்ய வல்லத்தோல் தயங்கினார். ஆனால் அங்குள்ள குடிசையில் தங்கி, தரையில் படுத்து உறங்கி கேரளப் பெண்களைப் போல் சேலை உடுத்தி, சாதாரண உணவை சாப்பிட்டு பயிற்சிப்பெற உறுதியுடன் இருந்ததால், அவர் மீது இரக்கப்பட்டு கதகளி பயிற்சி பெற சேர்க்கப்பட்டார்.

முறையாக கதகளி பயிற்சிப் பெற்ற ராகினி

தேவி, திருவாங்கூரில் கதகளி நடனத்தில் அனுபவம் மிக்க சிறந்த நடனக் கலைஞரான கோபிநாத் என்பவரை சந்தித்து, அவருடன் இணைந்து நடனமாட வாய்ப்பினைக் கேட்டுப் பெற்றார். அவரது ஆர்வத்தை ஏற்றுக் கொண்ட கோபிநாத் தனக்கும், அவருக்குமான விசேஷ உடைகளை வடிவமைத்து, சிவ தாண்டவம், லட்சுமி நாராயண நிருத்யம், ராதா கிருஷ்ணா நிருத்யா போன்ற நடனங்களை மேடையில் நடத்தினார். இது மக்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இதனால் ராகினி தேவியின் புகழ் உயர்ந்தது. அமெரிக்கப் பெண்மணி ஒருவர் முதன்முதலாக கதகளி பயிற்சி பெற்று மேடையில் ஆடுவது பரபரப்பாக பேசப்பட்டது.

தன்னுடைய நிகழ்ச்சிகளின் போது, கூடவே கல்லூரிகளில் கதகளி பற்றி சொற்பொழிவு ஆற்றுவது, நேரடியாக நடனமாடி விளக்குவது போன்றவை மூலம் பத்திரிகைகளில் பிரபலமடைந்த ராகினிதேவியைப் பற்றி கேள்விப்பட்ட ரவீந்திரநாத் தாகூர், கேரளாவில் உள்ள கலா மண்டலம் நடன கலைஞர்களை சாந்தி நிகேதனுக்கு வரவழைத்து நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டச் சொல்லி அவர்களை கௌரவித்தார்.

மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிய ராகினிதேவி, அங்குள்ள பல கல்லூரிகளில் கதகளி மற்றும் இந்திய நடனங்கள் பற்றி கருத்தரங்கங்கள் நடத்தியும், நடனம் மூலம் விளக்கமளித்தும் பிரபலப்படுத்தினார். 1922- ஆம் ஆண்டு "நாட்டியாஞ்சலி' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்டார். இது இந்திய நடனங்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய முதல் புத்தகமாக முடித்த ராகினி தேவி, பின்னர் லண்டன், பாரிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்திய பின்னர் மீண்டும் இந்தியா திரும்பினார்.

இந்த முறை குச்சிப்புடி மற்றும் ஒடிசி நடனங்களை கற்று தேர்ச்சிப் பெற்றார். இந்திய நடனங்களுக்காகவே தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டதாக கருதிய இவர், போர்டு பவுண்டேஷன் கிராண்ட் உதவியுடன் "டான்ஸ் டயலெக்ட்ஸ் ஆஃப் இந்தியன் டான்ஸ்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்டார். இது இந்திய நடனக் கலை வளர்ச்சியைப் பற்றிய பல அரிய தகவல்களை வெளிப்படுத்திய புத்தகமாக கருதப்படுகிறது.

தன்னுடைய பல கனவுகள் பூர்த்தியடையாமல் இருப்பதாக கருதிய ராகினிதேவி, அவைகளை தன்னுடைய மகள் இந்திராணி மூலம் செயல்படுத்தி வந்தார். மும்பை பாந்த்ராவில் தங்கியிருந்த ராகினிதேவி, வயதான போதிலும் அவ்வப்போது கருத்தரங்கு மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விடவில்லை. சுர்சிங்கர் சம்சுதீன் வருடாந்திர நிகழ்ச்சியின்போது, நடனக் கலைக்கு இவர் ஆற்றிய தொண்டினை பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மகள் இந்திராணியின் ஆதரவில் வாழ்ந்து வந்த ராகினி தேவியின் வயதான காலத்தில் யாரும் கவனிக்காததால், டாக்டர் முல்க்ராஜ் ஆன்ந்த் மற்றும் ஹரீந்தரநாத் சட்டோபாத்யாயா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் உதவியுடன் ராகினிதேவி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு 1882- ஆம் ஆண்டு நியூஜெர்சியில் ஆதரவற்ற நலிவுற்ற கலைஞர்களுக்காக தொடங்கப்பட்ட "ஆக்டர்ஸ் ஹோம்' என்ற விடுதியில் சேர்க்கப்பட்டார். 1981- ஆம் ஆண்டு இவரது உடல் நலிவுற்ற போதிலும், நியூயார்க்கில் உள்ள ஆசியா சொசைட்டி ராகினி தேவியின் இந்திய நடன சேவையைப் பாராட்ட, ராகினிதேவி, அவரது மகள் இந்திராணி, மற்றும் இந்திராணியின் மகள் சுகன்யா என மூன்று தலைமுறையினர் ஒரே சமயத்தில் நடனமாடும் நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி அனைவர் மனதிலும் நீங்காத இடம் பெற்றதோடு. ராகினி தேவியை கௌரவித்த சிறப்பையும் பெற்றது.

1982- ஆம் ஆண்டு ஐனவரி திங்களில் ஆக்டர்ஸ் ஹோமிலேயே 86-ஆவது வயதில் ராகினி தேவி காலமானார். இன்றைய இளம் நடன கலைஞர்களில் பலருக்கு ராகினி தேவியை பற்றியோ, இந்திய நடனங்கள் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவர் எழுதிய "டான்ஸ் டயலெக்டஸ் ஆஃப் இந்தியன் டான்ஸ்' என்ற புத்தகமும், அவரது பேத்தி சுகன்யா எழுதிய "த்ரீ ஜெனரேஷன்ஸ் ஆஃப் டான்சர்ஸ்' என்ற சுயசரிதை புத்தகமும் ராகினி தேவியின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும். ராகினி தேவியைப் பொருத்தவரை இந்திய நாட்டிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர் என்பது மறுக்க இயலாத உண்மை.

ADVERTISEMENT
ADVERTISEMENT