மகளிர்மணி

இலக்கியம் இதயத்திற்கு இனிமை!

27th Jan 2021 06:00 AM | v

ADVERTISEMENT

 

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், ஜாம்பியா, கத்தார், அமெரிக்கா போன்ற நாடுகளில் பேசி தற்போது 2 ஆயிரம் மேடைகளை நெருங்கி உள்ளார் பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர். இலக்கியமும், நகைச்சுவையும் பேச்சில் இரண்டற கலந்திருக்கும் இவரை சந்தித்து பேசியதிலிருந்து:

""என் பூர்வீகம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம். அப்பா சேவுகப்பாண்டியன் ஒரு சைக்கிள் லோடுமேன். அம்மா பாஞ்சாலி, மில்லில் பணியாற்றுபவர். இவர்களுக்கு மூன்றாவது மகள் நான். முதல் தலைமுறை பட்டதாரி. முதுநிலை வணிகவியல் பட்டம் பெற்ற பின்னர், தமிழ் மீது இருந்த தீராக் காதலால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை தமிழ் இலக்கியம் முடித்து தற்போது முதுநிலை முடித்துள்ளேன். தமிழில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பது என் வாழ்நாள் இலக்கு.

பள்ளி மாணவியாக இருந்த காலத்தில் அறிவொளி இயக்க மேடைகளில் கவிதை, நாடகம், பேச்சு போன்றவற்றில் பங்கேற்றுள்ளேன். கல்லூரிப் பருவத்தில் பேச்சுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது போட்டியின் நடுவர்களாகப் பங்கேற்ற அறிஞர்கள் நீங்கள் பட்டிமன்றத்தில் பேசலாமே, அதற்குரிய மொழி நடை உங்களிடம் உள்ளது என்று அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

அதன்பின், எங்கள் ஊரில் உள்ள தமிழ்ப்புலவர் ஆதிமூலம் என்பவர் மூலம் பட்டிமன்ற உலகில் அறிமுகமானேன். பேராசிரியர் இராமச்சந்திரன் அணியில் இருந்தபோது பட்டிமன்ற கலையை என உணர்ந்தேன். கம்பன் கழகங்கள், வள்ளுவர் மன்றம். புத்தகத் திருவிழாக்களில் பேசக் கிடைத்த வாய்ப்புகளின் வாயிலாக நிறைய வாசிக்கத் தொடங்கினேன். வாசிப்பு பயிற்சி இத்துறையில் என்னைத் தக்கவைத்துக் கொள்ள உதவியாய் அமைந்தது.

கோயில்களில் பேசத் தொடங்கிய பின் ஆன்மிகம், இலக்கியங்களின் மேல் இன்னும் ஆர்வம் ஏற்பட்டது. எல்லாக் கலைஞர்களுக்கும் ஏதோ ஒரு நிகழ்வு திருப்பு முனையாக அமையும். அவ்விதத்தில் சுகி.சிவத்தின் தலைமையில் பேசிய "அப்பா' குறித்த பேச்சும், சாலமன் பாப்பையாவின் தலைமையில் பேசிய "தமிழரின் அடையாளம்' எனக்கு அடையாளமாக அமைந்தது.

2019- ஆம் ஆண்டில் "நீயே முளைப்பாய்' எனும் கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அதற்கு நெல்லைப் பொதிகை தமிழ்ச் சங்கத்தின் முதல் பரிசு கிடைத்தது. மேலும் சில மாத, வார இதழ்களில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

பெண் சமூகத்திற்கு நான் சொல்ல விரும்புவது, பல நூறு ஆண்டுகளாக உங்கள் கைகளைப் பிணைத்த விலங்குகள் கட்டவிழ்ந்துவிட்டன. உங்கள் வெற்றிக்கான வாசல் திறந்து இருக்கிறது. அதனால் வரும் காலம் நம் காலம். நம்பிக்கைக் கொண்டு செயல்படுங்கள் தோழியரே. வெற்றி நமதே'' என்று கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT