சர்ப்பரைஸ் தந்த நடிகை!
சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியின் "சரவணன் மீனாட்சி' தொடரின் மூலமாக தமிழில் சின்னத்திரை நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. இவர் தற்போது "நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரின் இரண்டாவது சீஸனில் நடித்து வருகிறார்.
இந்தத் தொடரின் மூலம் ரச்சிதாவுக்கு வெறித்தனமான ரசிகர்களும் உருவாகி இருக்கிறார்கள். அப்படி கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளி ஒருவரும் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். அவரது ஒரே ஓர் ஆசை ரச்சிதாவை நேரில் சந்திக்க வேண்டும் என்பது தானாம். இந்நிலையில் சமீபத்தில் அவரை, அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார் ரச்சிதா. அவருடன் இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் விடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், "தம்பி இதை தான் ஆசைப்பட்டார்.. அது நடந்துவிட்டது. என்னை தெரிந்தவர்களுக்கு கார்த்திக்கை என்னுடைய தீவிர ரசிகராக தெரியும். ஒவ்வொரு நாளும் அவர் தவறாமல் வாழ்த்து கூறுவார். அவரது ஒரே ஒரு குறிக்கோள் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்பது தான். அவர் எனக்கு கொடுத்த அன்பு மற்றும் மகிழ்ச்சியை திருப்பி தரவேண்டும் என விரும்பினேன். அதனால் அவரை நேரில் சந்தித்தேன். நீ நல்லா இருக்கனும் தம்பி. மகிழ்ச்சியாக இரு' என ரச்சிதா தனது பதிவில் கூறி இருக்கிறார்.
ரசிகர்களின் வரவேற்பு!
பெரியதிரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து பிரபலமானவர்களில் ரம்யா பாண்டியனும் ஒருவர். பெரியத்திரையில் "டம்மி டப்பாசு', "ஜோக்கர்', "ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சின்னத்திரை பிரபலமாகவும் வலம் வந்தார். இந்நிலையில், "பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.
பிக்பாஸில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ரம்யா 4-வது இடம் பிடித்தார். இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஒரே பெண் போட்டியாளர் இவர்தான்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்ற ரம்யா பாண்டியனுக்கு குடும்பத்தினரும், ரசிகர்களும் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த விடியோவை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு வைரலாகியுள்ளது.