மகளிர்மணி

பயன் கருதா உதவி!

20th Jan 2021 05:43 PM

ADVERTISEMENT

 

கடல் அலைகள் வேகமாகப் பொங்கிப் புறப்பட்டு வந்து கரையில் மோதிக்கொண்டிருந்தன. ராதையின் மனம் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்து இருந்தது. அப்பா குணசேகரனுக்கு அரசாங்க பொதுமருத்துவமனையில், அவசர சிகிச்சை செய்து, கட்டியை நீக்காவிட்டால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அம்மா மரகதம் இறந்து வருடங்கள் ஐந்து ஓடி மறைந்து விட்டன. திருமண வயதை அடைந்திருந்த மகன் கந்தசாமிக்கு மணம் முடித்தால், வரும் மருமகள் தாயாக இருந்து, பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் மகள் ராதாவைப் பார்த்துக் கொள்வாள், என்று பகல் கனவு கண்டார் குணசேகரன். அதனால், அவசர அவசரமாக, மகன் கந்தசாமிக்கு கனகாவைத் திருமணம் செய்து வைத்தார்.

கல்யாணமான புதிதில் கனகாவும், குடும்பத்தை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டாள். ஆனால் அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்ததும், தன்னுடைய கணவரின் வருமானம் முழுவதும் குணசேகரனின் வைத்தியச்  செலவுக்கும், ராதையின் கல்யாணம் அதுஇது, என்று கரைந்து போய்விடும், தன் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்று பயந்தாள்.

ADVERTISEMENT

விளைவு, சிறுசிறு சண்டைகள் என்று ஆரம்பித்து, ஒருநாள் பூகம்பமாகப் பெரிய சண்டையாகப் போட்டு, கணவரை அழைத்துக்கொண்டு தாம்பரத்திற்கு தன் பெற்றோர் குடியிருப்புக்கு அருகிலேயே வீடு பார்த்துக்கொண்டு சென்று விட்டாள்.

அண்ணன் கந்தசாமி, மாதம்தோறும் வந்து பார்த்து, கொஞ்சம் பணம் கொடுத்துக்கொண்டிருந்தவன் பிறகு எட்டிக் கூட பார்ப்பதில்லை. அந்த சமயத்தில் ராதை பி.எஸ்.ஸி., படிப்பை முடித்திருந்தாள். தட்டெழுத்தில் மேல்நிலையை எட்டியிருந்ததால், ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. கிடைத்த சொற்ப வருமானத்தில் தந்தையும் மகளுமாக வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக்கொண்டிருந்தனர்.

மகளைப் பற்றியே கவலைப்பட்டு கல்யாண வயதில் தன்னைக் காப்பாற்ற இப்படி உழைக்கிறாளே என்று எண்ணி உருகி, கந்தசாமி அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். இதோ, இன்று மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் படுத்திருக்கிறார். தந்தையின் உடல்நிலையை ராதா, தமையனுக்குத் தொலைபேசி மூலம் சொல்லியும், அவன் வந்து எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

இருள் கவியத் தொடங்கியதும் தன் புடவையில் பிடித்திருந்த மணலைத் தட்டிவிட்டபடி எழுந்து ராதா நடக்கத் தொடங்கினாள்.

""ராதா''” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள் அங்கே அவளோடு வேலை பார்க்கும் தோழி மங்கை நின்று கொண்டிருந்தாள்.
""ராதா, நீ ஆபீஸுக்கு ஒரு வாரம் லீவு போட்டிருக்கிறாயாமே, எதனால் என்று தெரிந்துகொள்ளலாமா'' என்றாள் மங்கை.
""இல்லை மங்கை, வந்து...'' என்று இழுத்தாள் ராதா.
""இரண்டு நாட்களாகவே உன்னைக் கவனித்து வருகிறேன், மிகவும் சோகத்துடன் காணப்படுகிறாய், என்ன என்று அறிந்து கொள்ளத்தான் உன்னைப் பின் தொடர்ந்தேன்''.
ராதா, தன் தந்தையின் நிலைமையையும், அண்ணனின் பாராமுகத்தையும் கண்களில் கண்ணீர் வடியச் சொல்லி முடித்தாள்.
""சரி, நேரமாகிவிட்டது நான் கிளம்புகிறேன்'' என்று விடைபெற்றுக் கொண்டாள் மங்கை.
பிறகு நடந்தது எல்லாம், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத, அன்பை வெளிப்படுத்தும் செயல்களாக இருந்தன.  ஆமாம். மங்கை, மருத்துவமனைக்குச் சாப்பாடு கொண்டு வந்தாள். ராதாவை வீட்டுக்கு அனுப்பி அவள் காலைக் கடன்களை முடித்துத் திரும்பும்வரை அவள் தந்தைக்குத் துணையாக இருந்தாள்.
குணசேகரன் வீட்டுக்கு வந்தபிறகும் அவருக்குப் பல பணிவிடைகளைச் செய்தாள். ""அம்மா ராதா, உன்னுடைய சிநேகிதி, பெற்ற பெண்ணைப் போல, எனக்கு இவ்வளவு அன்பைக் காட்டுகிறாளே, தெய்வம் மனித ரூபம் என்று சொல்வார்களே, அதுக்கு இவள் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறாளே'' என்று கண்கலங்கினார்.

""அப்பா, மங்கையோடு நான் அவ்வளவு நெருங்கிப் பழகியது கூட இல்லை. ஆனால் நான் தனித்து கஷ்டப்படுகிறேன் என்று தெரிந்தவுடன் தானாகவே வந்து எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இவ்வளவு உதவிகளை செய்கிறாள்'' என்றாள் ராதை. 

இரண்டு மாதங்கள் ஓடி மறைந்தன. இப்பொழுது குணசேகரன் நன்றாகத் தேறிவிட்டார். பெற்ற பிள்ளை கந்தசாமி ஒருமுறைகூட வந்து தகப்பனைப் பார்க்கவில்லை. தான் செய்த குற்றம்தான் என்ன என்று குணசேகரனுக்குப் புரியவில்லை.

""அம்மா ராதை''
""என்னப்பா?''
""இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே, நான் மார்க்கெட்டுக்குச் சென்று கொஞ்சம் பழங்கள், ஸ்வீட், காரம் எல்லாம் வாங்கி வருகிறேன். நாம ரெண்டு பேரும் மங்கை வீட்டுக்குச் சென்று, நன்றி கூறிவிட்டு வருவோம் அம்மா''.
""சரிப்பா, அப்படியே செய்யலாம்''
ஆட்டோ பிடித்து, மங்கை வீட்டை  அடைந்தனர். ஆபீஸில் அவள் வீட்டு விலாசத்தை அவளுக்குத் தெரியாமல் ராதை வாங்கியிருந்தாள். மங்கைக்கு இன்ப அதிர்ச்சியைத் தரவேண்டும் என்று ராதை இப்படிச் செயல்பட்டாள்.
அழைப்பு மணியை ராதை அழுத்த, சிறிது இடை
வெளிக்குப் பிறகு கதவு படக் என்று திறக்கப்பட்டது. 
ஊன்றுகோல்களின் உதவியோடு ஓர் இளைஞன் நின்றுகொண்டு இருந்தான். புதியவர்களைக் கண்டதனால், முதலில் திடுக்கிட்டுப் பிறகு புன்னகைத்து,
""வாருங்கள்'' என்றான்.
யார் இவன்? என்ற கேள்விக்குறியோடு தந்தையும், மகளும் உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்தனர்.
""அக்கா, உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்'' என்று சொன்னபடி அவன், ஊன்றுகோல்கள் சப்தமிட நடந்து சென்றான்.
ராதையும், குணசேகரனும் உள்ளே நுழையும்பொழுதே, கும்மென்று பினாயிலின் மணம் அவர்கள் மூக்கைத் துளைத்தது.
சிரித்த முகத்துடன், ஒரு சிறு டவலில் கைகளைத் துடைத்தபடி மங்கை வந்தாள்.
""என்ன இப்படி சொல்லாம கொள்ளாம வந்து இருக்கிறீங்க, நீங்க வருவது தெரிந்திருந்தா உங்களுக்கும் சேர்த்து சமையல் செய்திருப்பேனே''  என்றாள் மங்கை.
""இருக்கட்டும்மா, உனக்கு நன்றி சொல்லிட்டுப் போகலாம் என்று வந்தோம்''.
""என்னப்பா இது, எதுக்கு நன்றியெல்லாம், நான் என்ன பெருசா செஞ்சுட்டேன்? தனிமையில் போராடறது எவ்வளவு கஷ்டம் என்று எனக்குத் தெரியும். எனக்கு நாற்பது வயசாகுது. எனக்கே குடும்ப பாரத்தைச் சுமக்கறது எவ்வளவு கஷ்டமா இருக்கு. பாவம் ராதா என்னைவிட பன்னிரெண்டு வயசு சின்னவ, ஒரே துணையான உங்களையும் ஆபத்தான நிலைமையில ஆஸ்பத்திரியிலே சேர்த்துட்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா. அதான், என்கூட வேலை செய்யறவ தவிக்கிறதைப் பார்க்கமுடியாம உதவிக்கு வந்தேன்''.
""அம்மா, கூடப்பொறந்த அண்ணன்கூட உதவிக்கு வராத சமயத்திலே, எனக்கும், என் மகளுக்கும் தேவதையா வந்து நின்னே. அதை எப்படிம்மா மறக்கமுடியும்?''

""சரி, சரி, வாங்க, எங்க அம்மாவை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்'', என்று உள் அறைக்கு கூட்டிச் சென்றாள் மங்கை. 
அங்கே, பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகப் படுத்திருந்தாள் அவளின் அன்னை.

ஐயோ, இப்படிப்பட்ட அன்னை, போலியோ வந்து செயலிழந்த கால்களை உடைய சகோதரன், இவர்களுக்குச் செய்யும் சேவைகள் போதாது என்று மங்கை, ஒரு உதவியும் செய்யாத எங்களுக்கு இப்படி ஓடி, ஓடி சேவகம் செய்தாளே, கலங்கி நின்றார்கள் ராதையும், குணசேகரனும்.
நம்மால் இவளுக்கு என்ன பயன்? என்று யோசிக்காமல், அன்பு செலுத்திய அந்த அன்பு தெய்வத்தை, ராதையும் குணசேகரனும் கைதொழுது நின்றனர்.
ஆர்ப்பரிக்கும் கடலின் முன்னே அமைதியாக ராதை உட்கார்ந்து இருந்தாள். பயன் கருதாமல் ஒருவர் செய்யும் நன்மை கடலைவிடப் பெரிது என்றாரே திருவள்ளுவர். ஆமாம்,  இவ்வளவு பெரிய நன்மை செய்த மங்கையின் குடும்பத்திற்கு நான் ஏதாவது செய்தாகவேண்டும். போலியான உறவுகளும், வஞ்சக நெஞ்சங்களும் நிறைந்த இந்த உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். வீடு திரும்பினாள் ராதை.

""அப்பா'' 
""என்னம்மா..''
""நான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துவிட்டேன்''. 
""என்னம்மா திடீர் என்று..'' முனங்கினார் குணசேகரன்.
""திடீர் முடிவு இல்லை அப்பா, நன்றாக யோசித்து எடுத்த முடிவு''.
""யாரம்மா அந்த அதிர்ஷ்டசாலி?''
""மங்கையின் சகோதரன் மாணிக்கம்''.

பயன்தூக்கார் செய்த உதவிநயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
(குறள் எண்: 103)
பொருள் :
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலைவிடப் பெரிது.
(தொடரும்)
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT