மகளிர்மணி

'கருப்பு'  வந்த நேரம்   வாழ்க்கையில் வெளிச்சம்!

கண்ணம்மா பாரதி

""திருநங்கையாகிப் போனதால் மனசு உடைந்து கண்ணீருடன் மெளனமாக வீட்டை விட்டு வெளியே போகாமல் வீட்டுக்குள்  முடங்கினேன். பள்ளி படிப்பைத் தொடர முடியவில்லை. பிழைப்பிற்காக பசு மாடுகளை வளர்க்க ஆரம்பித்தேன். ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும்  வீரனாகப் பங்கேற்க வேண்டும்'  என்கிற ஆசை,    "ஏறு' தழுவும் களங்களில்  ஆண்கள்  மட்டுமே பங்கேற்க முடியும்... திருநங்கை பங்கேற்க முடியாது  என்று கூறினார்கள்.
நேரடியாக ஜல்லிக்கட்டில்  வீரனாகப்   பங்கேற்க முடியாமல் போனாலும்,   "ஜல்லிக்கட்டில் காளைகளின் உரிமையாளராகப் பங்கேற்கலாம்' என்று  
கடவுள் முடிவு செய்திருக்கவேண்டும். 
2017}இல் ஜல்லிக்கட்டுக்கு  தமிழகத்தில் தடை  இருந்ததால், கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த ஒருவர்  ""எனக்கு சொந்தமான ஜல்லிக்கட்டுக் காளையைப் பராமரிக்க இயலவில்லை... நீயே வைத்துக் கொள்'' என்று  இலவசமாக  என்னிடம் ஒப்படைத்தார். அந்தக் காளையின் பெயர்  கருப்பு. கருப்பு வந்த நேரம்  என் வாழ்க்கையில் வெளிச்சம் பிரவேசித்தது' என்கிறார் சிந்தாமணி .  
ஜல்லிக்கட்டுக்குப் புகழ் பெற்ற அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள கல்லணை கிராமத்தை சேர்ந்த 30 வயது வினோத் குமார் தான்  சிந்தாமணி.  இன்று "வீரத் தமிழச்சி' என்ற  பட்டப்பெயருடன்   அலங்காநல்லூர் வட்டாரத்தில் அறியப்படுகிறார்.   
சிந்தாமணி தொடர்கிறார்:
கருப்பு  எனது உடன் பிறவா தம்பியானான். கருப்புக்கும் எனக்கும் இடையில் இருக்கும் அன்பு, பாசம், நட்பை கிராமத்தினர் ஆச்சரியமாகப்  பார்க்கிறார்கள். 2019-இல் ராமு என்கிற  ஜல்லிக்கட்டு காளையை  ரூ.40,000  கொடுத்து வாங்கினேன். லட்சுமி என்ற பசுவையும்  வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன்.  கருப்பு, ராமு, லட்சுமி  எனது குடும்பம் ஆனது. 
முழு ஊரடங்கு  என்னையும் பாதித்தது.  இந்தக் காலகட்டத்தில் எதிர்பாராத விதமாக பாம்பு  கடித்து   ராமு  இறந்து போனான்.  பொதுவாக ஜல்லிக்கட்டு காளைகள்  இறந்தால்  சவ அடக்கத்தை  படு விமரிசையாக  நடத்துவார்கள். ராணுவ வீரன் இறந்தால் தரும் மரியாதை மாதிரி  இருக்கும். 
 கிராமங்களில் வீட்டில் வளர்க்கும்  மாடுகள் இறந்தால்  உறவுமுறையில் அனைவரையும் அழைத்து மஞ்சள் நீரில் குளிப்பாட்டி  சந்தனம் குங்குமம் பூசி, தாரைதப்பட்டை முழங்க, அடக்கம் செய்வதுடன்  படையல் வைத்து மரியாதையும்  செய்வார்கள். இந்த சடங்குகளை பொதுமுடக்கக் காலத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் இருந்ததால் செய்ய முடியவில்லை. 
ராமுவை இழந்த காரணத்தால் நான் மிகவும் 
கலங்கிப் போனேன். என்னைவிட  அதிகம் பாதிக்கப்பட்டது  கருப்புதான்.  ராமுவைக் காணாமல் சோகத்தில் கருப்பு, கொஞ்ச நாட்கள் சாப்பிடவில்லை.  கருப்புவை தேற்றி  மீண்டும் சாப்பிட வைக்கப் படாதபாடு
பட்டேன். மூன்று ஆண்டுகளாக யாராலும் வெல்ல முடியாத ஜல்லிக்கட்டுக் காளையாக கருப்பு களத்தில் அடக்க  வருபவர்களை  குத்திக் கிழித்துவிடும்  ஆக்ரோஷத்துடன்  நிற்கிறான். ஆனால்  எனது அருகில் இருக்கும் போது  குழந்தை மாதிரி பரமசாதுவாகி
விடுவான். 
காலையில் மாடுகளை மேய்ப்பேன். மாலையில் ஹோட்டலில் வேலை.  அந்த வருமானத்தில்தான்  எனது பிள்ளைகளைப்  பராமரிக்கிறேன்.  பாலமேடு, அவனியாபுரம், திருச்சி உள்பட தமிழகத்தில் 27 வாடிவாசல்களில்  நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளைகள்  கலந்து கொண்டுள்ளன.  ஒரு தடவை  கூட மாடுபிடிக்கும்  வீரர்களிடம்  எனது காளைகள் பிடி கொடுக்கவில்லை. 
என்னுடைய காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விடும்போது, "வீரத்தமிழச்சி காளை வருகிறது' என்று  அறிவிப்பு செய்வார்கள்.  அந்த அங்கீகார அறிவிப்பைக் கேட்டாலே நான்  வானத்தில் பறந்து ஒரு வலம் வருவேன். நான் அனுபவித்த அத்தனை சோகங்களும் மாறி சந்தோஷங்கள் என்னுள் பூக்கும்.  அன்று ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் என்னை ஒதுக்கியவர்கள் இப்போது  "வாங்க  வீர  தமிழச்சி' என்று   வரவேற்று உபசரிக்கிறார்கள். சிறப்பு பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்துகிறார்கள்'' 
என்கிறார் சிந்தாமணி.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT