கடுங் கோடைக்காலம் அது. காலை பதினொரு மணிக்கே சூரியன் சுள்ளென்று தகிக்கத் தொடங்கியிருந்தது. ஆறாகப் பெருகிய வியர்வையைப் புடவையின் தலைப்பால் துடைத்தாள் சொக்கம்மா. பெரிய கூடையின் மீது வைக்கப்பட்டிருந்த பலகையின்மீது பல வகையான உயர்ரக மீன்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
வெள்ளன எழுந்து, ஏலத்தில் எடுத்த மீன்கள் இப்படி விற்பனை ஆகாமல் இருப்பது அவள் நெஞ்சைத் துக்கத்தினால் நிரப்பியது.
சற்றுத் தள்ளி கடைவிரித்திருந்த பவானியின் கடையை அவளுடைய கண்கள், வெறுப்போடும், பொறாமையோடும் பார்வையிட்டது.
அங்கே கூட்டம் அலைமோதுதே. அவளுக்கு மட்டும் எப்படி இப்படி வியாபாரம் நடக்குது? சொக்கம்மாவுக்கு வயிறு எரிந்தது.
பவானியின் கூடையிலிருந்த மீன்கள் சர சரவென விற்று, தீர்ந்துகொண்டே வந்தன.
""ஒரு கூறு நெத்திலி எவ்வளவும்மா?'' ஒரு பெரிசு கேட்ட கேள்விக்கு,
""அண்ணா, கூறு ஐம்பது ரூபா'' என்றாள் பவானி.
""ஐயோ, விலை ரொம்ப ஜாஸ்திம்மா. முப்பது ரூபான்னு இரண்டு கூறு கொடு''.
""அண்ணா, முப்பது ரூபான்னு கொடுத்தா, எனக்கு எப்படி கட்டுப்படியாகும்? நானே ஒரு பத்து ரூபா லாபத்துக்குத்தான் இப்படி நாயா, பேயா அலையிறேன். என் குடிசையில் உங்க புண்ணியத்தில் அடுப்பு எரியணும்'' என்றாள் பவானி.
கேட்டவர் மனசு கரைந்தது. ""சரி, சரி இரண்டு கூறு போடு'' என்று வாங்கிச் சென்றார் அந்தப் பெரியவர்.
கொசுறு என்று யார் கேட்டாலும் பவானி தரமாட்டாள். இப்படி ஒவ்வொருத்தருக்கும் கொசுறு கொடுத்தால் என் வியாபாரம் படுத்துரும் என்பாள். இவ்வளவு கறாராக வியாபாரம் பார்த்தாலும் வார்த்தைகளில் இனிமை கலந்து, தன் கஷ்டத்தை எடுத்துரைப்பதனால் அவள் கடையில் கூட்டம் அலைமோதியது.
ஆனால், இந்த சொக்கம்மா இருக்கிறாளே, அவளிடம் பேரம் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா?
""ஆமாம் காலங்காத்தாலே வந்துட்டா, எழவு கொட்ட ! மனுஷி படறபாடு இவளுக்கு என்ன தெரியும்? இதான் விலை, இஷ்டம் இருந்தா வாங்கு, இல்ல நடையைக் கட்டு'' என்று கண்களில் கோபம் தெரிக்கக் கத்துவாள்.
கொஞ்சம் ஏழ்மை உடையவளாக கஸ்டமர் இருந்துவிட்டால் போதும்; ""சக்களத்தி வந்துட்டா, மல்லுக்கட்ட; மீன் வாங்க வந்த மூஞ்சியைப் பாரு, போ, போ, நகரு'' என்பாள்.
இப்படிப் பேசி, பேசியே நாளாவட்டத்தில் வாடிக்கையாளர்களை இழந்து போனாள் சொக்கம்மா. அம்மாடி, இந்த வாயாடிக்கிட்ட போனால் அவ்வளவுதான் என்று ஒதுங்கிப் போனார்கள். தன்னிடம் மீன் வாங்க வருபவர்களுக்கு சொக்கம்மா கொசுறாக கொடுப்பாள் என்றாலும் வார்த்தைகளில் கடுமை இவளுடைய தயாள மனதை மறைத்து விடுகிறது.
அன்று சரியாக வியாபாரம் ஆகாத கவலையில் சொக்கம்மா கலங்கி உட்கார்ந்திருந்தாள். இரவு மணி ஏழு ஆகியும் சோற்றுப்பானையை அடுப்பின் மீது வைக்க மனமின்றி சோர்ந்து கிடந்தாள். தன்னுடைய கஷ்ட நிலையிலும், குடிகார கணவனின் ஒத்துழைப்பில்லாமலேயே தன் ஒரே மகளை நகரத்தின் மிகப் பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறாள். இன்னும் இரண்டு நாட்களில் ஸ்கூலில் பீஸ் கட்டவேண்டும் என்று மகள் வேறு அரித்துக்கொண்டே இருக்கிறாள். பணத்துக்கு எங்கே போவது என்றுதான் தெரியவில்லை.
மகள் மீனா, திருக்குறளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள்.
அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்தின்சொலன் ஆகப் பெறின்.
பிறகு இந்தக் குறளின் அர்த்தத்தையும் சத்தமாகச் சொல்லத் தொடங்கினாள். ஏதோ கவனத்தில் இருந்த சொக்கம்மா திடுக்கிட்டு மகள் இருந்த திசையை நோக்கித் திரும்பினாள். குறளின் பொருளை உள்வாங்கினாள்.
ஆகா! இப்பொழுது அந்தப் பேதைக்குப் புரிந்துபோனது ஏன் தனக்கு வியாபாரம் சுருங்கிப்போனது என்று. எவ்வளவு உண்மையான, விஷயத்தை நான் தொலைத்தேன், முகம் மலர்ந்து இனிமையான பேச்சைப் பேசாததனால்தான் என்னிடம் வாடிக்கையாளர்கள் வருவதில்லை. இனி நான் சொக்கும் மொழி பேசும் சொக்கம்மாவாக இருப்பேன் என்று மனதில் சபதம் செய்தாள்.
மாதங்கள் மூன்று ஓடி மறைந்தன. சொக்கம்மாவின் கடையின் முன் கூட்டம், மழைக்காலக் கருமேகங்களாய் கவிழ்ந்து கிடந்தன.
அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்
தின்சொலன் ஆகப் பெறின்.
( குறள் எண்: 92)
பொருள் : முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
(தொடரும்)