மகளிர்மணி

எனக்கு  பக்கபலமே  என் குடும்பம்தான்!

13th Jan 2021 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT

 

நான்காண்டுகளுக்கு முன்பு கன்னடத் திரையுலகில் புதுமுகமாக அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத், பவன்குமாரின் "யூ டர்ன்' என்ற படத்தில் முதல் முறையாக நடித்த போதே ரசிகர்களிடம் வரவேற்பையும், பாராட்டுதல்களையும் பெற்றார். தொடர்ந்து நான்கு தென்னிந்திய மொழிகளிலும், இந்தியில் "மிலன் டாக்கீஸ்' என்ற படத்திலும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவரது சமீபத்திய கன்னடப்படம் "கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா' ஓடிடியில் வெளியானதைத் தொடர்ந்து, மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்கும் "ஆராட்டு' என்ற படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இது தவிர கன்னடத்தில் "ருத்ர பிரயாகா' , தெலுங்கில் "நருடி பிரதுகு நடனா' தமிழில் விஷாலுடன் "சக்ரா', "மாதவனுடன் மாரா' ஆகிய படங்களில் நடித்துள்ள ஷ்ரத்தாவுக்கு, "யூ டர்ன்' படத்துக்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வரும் "கலியுகம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பது பிடித்திருக்கிறதாம். வழக்கமான பாத்திரங்களில் நடித்து வரும் எனக்கு இது ஒரு மாறுதலாக இருக்கிறது என்று கூறும் ஷ்ரத்தா, நடிக்க வருவதற்கு முன் சட்டம் படித்து வழக்குரைஞர் பயிற்சிப் பெற்றவர்.

""என்னுடைய வாழ்க்கை ஒரு நாவல் போன்றது. ஐந்தாண்டுகள் சட்டம் படித்து வழக்குரைஞர் பயிற்சிப் பெற்றபோது, யாராவது என்னிடம் வந்துநீ ஒரு நடிகையாகப் போகிறாய் என்று கூறியிருந்தால் நிச்சயம் வாய்விட்டு சிரித்திருப்பேன். என்னுடைய விருப்பங்களை எப்படியாவது நிறைவேற்ற வேண்டுமென்பதில் உறுதியாக இருந்த நான், வழக்குரைஞர் தொழில் எனக்கு ஒத்துவராது என்று தோன்றியபோது, உடனே நடிகையாகும் முடிவை துணிவுடன் எடுத்தேன்.

ADVERTISEMENT

இதில் எனக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லாததால் எனக்கு பக்கபலமாக நிற்க என் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதே போன்று பொதுமுடக்கத்தின் போதும் படப்பிடிப்புகள் இல்லாதபோதும் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எனக்கு சத்துள்ள ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். ஆரோக்கியமான உணவில், எதிர்பார்க்கும் ருசி இருக்காது என்றாலும், உடலுக்குத் தேவையான ஊட்டசத்தை அளிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல் ஒரே சீராக இருக்க உதவும். இதுபோன்ற இயற்கை உணவு வகைகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்காக தோழிகளுடன் சேர்ந்து சென்னையில், சாலட்பார் ஒன்றை "பெர்சே' என்ற பெயரில் தொடங்கினேன். இங்குள்ள விலை பட்டியலில் உள்ள உணவுகளை படிப்பவர்களுக்கு நிச்சயம் வீட்டிற்குச் சென்று சாப்பிடலாம் என்ற எண்ணமே தோன்றாது. எதிர்பார்த்தபடி இந்த ஓட்டலுக்கு மக்கள் வரவேற்பு அதிகரித்துள்ளது. வாழ்க்கையில் வழக்குரைஞராக தொடங்கி நடிகையாக மாறி இப்போது தொழில் முனைவோர் ஆவேன் என்பது கூட எதிர்பார்க்காத திருப்பம்தான்'' என்கிறார் ஷ்ரத்தா.

இது மட்டுமின்றி தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து தினசரி வீட்டை சுத்தப்படுத்தி பாதுகாப்பான சுத்திகரிப்பு திரவத்தை இயற்கையான மூலிகைப் பொருள்களை கலந்து பயன்படுத்தி வருகிறார். என்னைப் பொருத்தவரை என்னுடைய குடும்பம் எங்கு இருந்தாலும் எனக்காக பிரார்த்தனை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஒருமுறை நான் பேச்சு வாக்கில் நடிப்புத் துறையிலிருந்து நான் விலகும்போது என்று கூறி முடிப்பதற்குள், என்னுடைய தந்தை குறுக்கிட்டு ""உன் வாழ்நாள் முழுக்க நீ நடிகைதான். இதிலிருந்து விலகுவது பற்றி நினைக்காதே'' என்று கூறினார். என்னுடைய வளர்ச்சியில் என் குடும்பத்தினர் எப்போதுமே ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொடக்கத்தில் என்னுடைய கருத்துகளை முகநூலில் பதிவு செய்தபோது, வந்த எதிர்மறையான விமர்சனங்களால் பாதிக்கப்பட்டதுண்டு. நாளடைவில் அந்த விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை. எதை அடைய வேண்டுமென்று நினைக்கிறேனோ அவை நேர்மையானவை என்பதால், தினசரி வாழ்க்கையை மனிதாபிமானத்தோடு எதிர்கொள்கிறேன். எதற்கெடுத்தாலும் நேர்மறையாக விமர்சிப்பவர்களால் உலகில் எந்த விதமான பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்'' என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT