மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

13th Jan 2021 06:00 AM | - ஸ்ரீ

ADVERTISEMENT


ஆல்பம்வெளியிட்ட டிடி!


சின்னத்திரையில் நட்சத்திர தொகுப்பாளினி அந்தஸ்து பெற்றவர் திவ்யதர்ஷினி. ரசிகர்களால் செல்லமாக டிடி என்று அழைக்கப்படும் இவர், பொதுமுடக்கம் சமயத்தில் காலில் ஏற்பட்ட முறிவினால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் டிடி, சமீபத்தில் ஆல்பம் ஒன்றை இயக்கி, அதில் நடித்து வெளியிட்டிருக்கிறார். அந்த ஆல்பத்துக்கு தற்போது ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இது குறித்து டிடி கூறுகையில், ""மலையாளத்தில் ப்ருத்விராஜ்- பார்வதி இணைந்து நடிச்ச "என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் வரும் "முக்கத்தே பெண்ணே' என்ற பாடல் அது. எனக்கு ரொம்பப் பிடிச்ச அந்தப் பாடலை வித்தியாசமான முறையில் மறுஉருவாக்கம் செய்யலாம்னு யோசனை வந்துச்சு. அதனால் சற்றே மாற்றி மறுஉருவாக்கம் செய்து ஆல்பம் தயார் செய்து அதை நண்பர்கள் உதவியுடன் யூடியூப்பிலும், என் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டேன். ஆரம்பத்தில் மலையாள பாடலை, தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், நானே எதிர்பாராத வகையில் பெரிய அளவில் வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

நான் சின்னத்திரைக்கு வந்து பல வருஷங்கள் ஆனாலும்கூட இப்போதுவரை மக்கள் என்மீது அதிக அன்பு காட்டுவது நெகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஒன்பது மாதங்களாக ஆன் ஸ்கிரீன்ல வராதது வருத்தம்தான். இப்போ கொஞ்சம் காலில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. விரைவில் குணமாகி திரும்பி விடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.


ரசிகர்கள் மனதில் நிற்கவேண்டும்!

ஆதித்யா டிவியில் "வாலு பசங்க', "மாமோய் நீங்க எங்க இருக்கீங்க', நீங்க சொல்லுங்க டியூட் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அகல்யா வெங்கடேசன். தன்னுடைய சின்னத்திரை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:

ADVERTISEMENT

""எனக்கு பூர்வீகம் மன்னார்குடி. ஆனால், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். அம்மா ஆசிரியை, அப்பா டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ஸ்டூடண்ட் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் ஆனா ரூனா அருணாச்சலம் என்னுடைய சின்ன தாத்தா. தமிழ் சங்கத்தில் எல்லாம் அவர் பணியாற்றியுள்ளார். அவருடைய தாக்கம் தான் எனக்கும் தமிழ் மீது ஈடுபாடு ஏற்பட காரணம் என்று கூட சொல்லலாம்.

சின்ன வயதிலிருந்தே மீடியா மீது ஈர்ப்பு இருந்ததால், விஸ்காம் எடுத்து படித்தேன். அப்போது நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டபோது என்னைப் பார்த்த தொலைக்காட்சி சேனல் ஒன்று நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன்.

"மாமோய் நீங்க எங்க இருக்கீங்க' நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டுதான் முத்தையா சார் "தேவராட்டம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து, ஜோதிகாவுடன் "ராட்சசி', "சங்கத்தமிழன்' போன்று இதுவரை பெரியதிரையில் ஆறு படங்களில் நடித்துள்ளேன். படங்களில் குறைவான நேரமே வந்தாலும் மனதில் நிற்கிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையுள்ளது.

நடிப்பது, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது இவை எல்லாம் தாண்டி ரொம்ப பிடிச்சது செல்லப் பிராணிகள் வளர்ப்பது. தற்போது எட்டு நாய்குட்டிகளை வளர் த்து வருகிறேன்'' என்றார்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT