மகளிர்மணி

கட்ச், காஷ்மீரி, லக்னௌ சிக்கன்காரி

13th Jan 2021 06:00 AM | -எஸ். சந்திர மெளலி

ADVERTISEMENT


வேலைக்குப் போகாத குடும்பத்தலைவிகளில் பெரும்பாலானவர்கள், தங்களுடைய நேரத்தை டி.வி. தொடர்களைப் பார்ப்பதிலேயே போக்குகிறார்கள். இதனால், எந்த பிரயோஜனமும் இல்லை என்பது மட்டுமில்லை;  தொலைக்காட்சி தொடர்களில் வருகிற கதாபாத்திரங்களின் வன்மம் நிறைந்த எதிர்மறையான எண்ணங்கள் அவர்களையும் அறியாமல், அவர்கள் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதனால் குடும்பங்களில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இல்லையென்றால், எந்த நேரமும் மொபைல் போனிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்! அதற்கு மாற்றாக, பல பெண்களுக்கு நுட்பமான கைவேலைகளைக் கற்றுக் கொடுத்து, அவர்களுக்கு  வீட்டில் இருந்த
படியே வருவாய் கிடைக்கவும் வழி செய்கிறார் லட்சுமி சுந்தரம். அவருடன் ஒரு சந்திப்பு:

""எனக்கு சொந்த ஊர் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் ஆடுதுறை. சிறு வயதில் இருந்தே எனக்கு தையல் என்றால் ரொம்ப பிடிக்கும். ஐந்து வயது இருக்கும்போதே, வீட்டில் எனக்கு தங்கச் செயின் போட்டபோது, அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கடையிலிருந்து பாசிமணி வாங்கிக்கொடுக்கச் சொல்லி, அவற்றை நானே கோர்த்து மாலையாக்கி அணிந்து கொண்டேன். எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு தையல்கடை இருந்தது. ஓய்வு நேரத்தில், அந்த கடைக்குப் போய் உட்கார்ந்துகொண்டு, டைலர் துணி தைப்பதை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். டைலர் கடையில் வீணாகும் துண்டு துணிகளைக் கொண்டுவந்து, என் மரப்பாச்சி பொம்மைகளுக்கு உடை தைப்பேன். 

ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், என் சித்தி தன் தையல் மிஷினை விற்கப்போகிறார் என்று தெரிந்தபோது, அதை எனக்கு வாங்கிக்கொடுக்கச் சொன்னேன். 500 ரூபாய் கொடுத்து அந்த மிஷினை வாங்கிக் கொடுத்தார்கள். பழைய வேட்டிகளைக் கொண்டு நானே கொஞ்சம் கொஞ்சமாக தையல் கற்றுக் கொண்டேன். பழகியபின், புடவை தலைப்பு அடித்துக் கொடுப்பது, பாவாடை தைத்துக் கொடுப்பது என்று செய்துகொடுத்து கொஞ்சம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தேன். நான்கு ஆண்டுகளில், கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, அந்த தையல் மிஷினுக்குரிய 500 ரூபாயை சேர்த்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை! தையல் மட்டுமில்லை; எனக்கு ஓவியம் வரைவதிலும் ஆர்வம் இருந்தது; தஞ்சாவூர் ஓவியம் வரையவும் கற்றுக் கொண்டேன். எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி எப்போதும் எம்பிராய்டரி செய்துகொண்டே இருப்பார். அவரிடம் எம்பிராய்டரியும் கற்றுக் கொண்டேன். திருமணத்துக்குப் பின் அபுதாபி சென்றது ஒரு திருப்புமுனைதான்.

அபுதாபியில் ஆரம்பத்தில், என் குழந்தைகளுக்கான துணிமணிகளை நானே டிசைன் செய்து, தைத்துக் கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு மற்றவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு டிரஸ் தைத்துக் கொடுக்கச் சொன்னார்கள். அபுதாபி லேடீஸ் கிளப்பில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெண்களுடைய நட்பும் கிடைத்தது. அதைத்தான் திருப்புமுனை என்று சொன்னேன். அந்தப் பெண்களில் சிலருக்கு குஜராத்தி கட்ச், ஆரி ஒர்க்ஸ், காஷ்மீரி, லக்னெள சிக்கன்காரி, வங்காளத்தின் காந்தா எம்பிராய்டரி போன்ற இந்திய பாரம்பரிய எம்பிராய்டரி கைவேலைகளும், தெரிந்திருந்தது. சில பாகிஸ்தானிய பெண்களுக்கு அவர்கள் ஊரின் மராசா எம்பிராய்டரி தெரிந்திருந்தது. அவர்களிடமிருந்து அவற்றை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டேன். அதற்காகவே தினமும் பத்து மணி நேரம் வரை செலவிடுவேன். ஆர்வம், பயிற்சி மற்றும் பழக்கம் காரணமாக அவற்றில் எக்ஸ்பர்ட் ஆனேன். 

ADVERTISEMENT

அபுதாபியில் நடந்த இந்தியப் பொருட்களின் கண்காட்சியில், நான் எம்பிராய்டரி செய்த துணிகளுக்கு நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. அந்த அனுபவத்தில், ஆரபி குடீர் (AARABI COUTURE) என்ற பெயரில் ஒரு முகநூல் பக்கத்தை ஆரம்பித்தேன். அதன் மூலமாக, ஆர்டர்கள் வரத் துவங்கின. அது எனக்கு மேலும் ஊக்கமளித்தது. பத்தொன்பது வருட  அபுதாபி வாழ்க்கைக்குப் பின், சென்னைக்குத் திரும்பினோம். சென்னையில், பெரும்பாலும் உடைகளில் ஆரி வகை எம்பிராய்டரிதான் செய்யப்படுகிறது. மற்ற வகை எம்பிராய்டரிகள் அதிகமில்லை. மிஷின் மூலமாக செய்யப்படும் எம்பிராய்டரி வேலைகள் நாள்பட்டு வருவதில்லை. இங்கே உள்ளவர்களுக்கு மற்ற மாநில எம்பிராய்டரிகளை செய்து கொடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. 

மேலும், அந்த மாநிலங்களில் பெண்கள் எம்பிராய்டரி வேலைகளை குடிசைத் தொழில் போல, வீட்டில் இருந்துகொண்டே செய்து, சுயமாக சம்பாதிக்கிறார்கள். அது போல நம் ஊர் பெண்களுக்கும் பயிற்சி கொடுத்து, அவர்களுக்கும் வருமானம் கிடைக்க வழி செய்தால் என்ன என்று நினைத்தேன். விசாரித்ததில், இத்தகைய ஸ்பெஷல் எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை  கட்டணமாக வசூலிக்கப்படுவது தெரிய வந்தபோது, அதிர்ச்சி அடைந்தேன். அப்போதே,  ஆர்வமுள்ள பெண்களுக்கு எம்பிராய்டரி பயிற்சி அளிப்பது என்றும், ஆனால், சாமானிய பெண்களுக்கு கட்டுப்படியாகும் வகையில் ஐந்தாயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், பயிற்சியின்போது தேவைப்படும் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் முடிவு செய்தேன்.

எம்பிராய்டரி வகுப்புகளுக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வகுப்பறையில் சொல்லிக் கொடுப்பதை, என் கணவரது உதவியுடன் அப்படியே விடியோவில் பதிவு செய்தேன். தேவையானவர்களுக்கு ஈ மெயில் மூலமாக விடியோ பாடங்களை அனுப்பி வைக்கத்துவங்கினேன். டீன் ஏஜ் பெண்களில் துவங்கி, எழுபது வயது மூதாட்டி வரை தற்போது என் விடியோ பாடங்கள் மூலமாக எம்பிராய்டரி கற்றுக் கொள்கிறார்கள். குடும்பத்தலைவிகள் தங்கள் ஓய்வு நேரத்தில்  எம்பிராய்டரி வேலையில் ஈடுபட வேண்டும் என்பதே என் விருப்பம். காரணம், அவர்களின் நேரம் பயனுள்ள வகையில் செலவாகிறது என்பதுடன் இதன் மூலமாக அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார் லட்சுமி சுந்தரம்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT