மகளிர்மணி

திருப்பம் தந்த அபுதாபி 

ந.முத்துமணி


பெண்களால் பெண்களுக்காக இசைமணியை கோர்த்திருப்பவர் ரசிகா சேகர். நெல்லைச்சீமையை வேராக கொண்டு துபையில் பிறந்து அமெரிக்காவின் நியூஜெர்சியில் வளர்ந்து, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசையை முறைப்படி கற்றுத்தேர்ந்து, புல்லாங்குழலில் புதுமையை படைக்கும் இசைக்கலைஞராக அறியப்பட்டவர் ரசிகாசேகர்.

பாடகர், இசைக்கோர்ப்பாளர், புல்லாங்குழல் கலைஞர் என்று பன்முகத்திறன் கொண்ட ரசிகாசேகர், 2012-இல் சங்கர்-ஈஷன்-லாய் இசையமைப்பில் உருவான "தேக் இண்டியன் சர்க்கஸ்' என்ற ஹிந்தி படத்தில் பாடகராக அறிமுகமாகி, வட இந்தியாவிலும் பிரபலமானார்.

"பறவைகள் போல' என தொடங்கும் "யாவும்' என்ற காணொலி இசைக்கோர்வையால் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ரசிகா சேகர். அவரை சந்தித்த போது:

""திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தான் என் தந்தை சேகரின் சொந்த ஊர். அங்குள்ள சுடலைமாடசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள ஆண்டுதோறும் ஊருக்கு வந்துவிடுவோம். திருவிழாவின்போது இசைக்கப்படும் மேளம், நாகசுவரம், மகுடம், நாட்டுப்புறப்பாடல்கள் தான் எனது இசை ஆர்வத்தின் படிக்கட்டுகள். ராகமும், தாளமும், லயமும் இதயத்தில் பாயத்தொடங்கியது அங்கிருந்துதான். அப்போது ஏற்பட்ட இசை மீதான தணியாத ஆசைக்கு தூபம் போட்டது எனது தாய் சரஸ்வதியின் தங்கையும், எனது சித்தியுமான வைசாலி சங்கரும், பாட்டி கெளரிராமகிருஷ்ணனும் தான்.

வாய்ப்பாட்டில் கைதேர்ந்தவரான சித்தி, அதன் நுணுக்கங்களை எனக்குள் விதைத்தவண்ணம் இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தமிழ் திரைப்படபாடல்கள் என்னை இசைக்கடலில் முழுமையாக மூழ்கடித்துவிட்டது. சிறு துளையில் நுழைந்து மனதை மயக்கும் ராகமாக காற்று பிறக்கும் புல்லாங்குழல் மீதும் ஆர்வம் அதிகமானது. இந்த ஆர்வத்தை உணர்ந்த எனது பெற்றோர் என்னை குரு பவானி பிரகாஷிடம் இசை கற்க சேர்த்துவிட்டனர்.

அங்கு வாய்ப்பாட்டு, புல்லாங்குழலை கற்றேன். என் தம்பி மிருதங்கம் கற்றுக்கொண்டார்.

பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் இசை மீது தீராத காதல் கொண்டதால், பெர்க்லி இசைக்கல்லூரியில் சேர்ந்து முறைப்படி மேற்கத்திய இசையை கற்றுக்கொண்டேன். 14 வயது முதல் 15 ஆண்டுகால பயிற்சிக்கு பிறகு தனியாக இசைக்கோர்வையில் ஈடுபடத் தொடங்கினேன்.

சங்கர் மகாதேவனுடன் இணைந்து நடத்திய புல்லாங்குழல் கச்சேரி மிகவும் பிரபலமானது. அதன்பிறகு சங்கர் இசையமைத்த "தேக் இண்டியன் சர்க்கஸ்' படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு "2 ஸ்டேட்ஸ்', "கில் தில்', "கட்டி பட்டி', "லவ் கேம்ஸ்' போன்ற ஹிந்தி படங்களிலும் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனியாக புல்லாங்குழல் கச்சேரி, பாடல் கச்சேரிகளையும் நடத்தி வருகிறேன். தமிழ் திரைப்படத்தில் பாட வேண்டும் என்ற ஆவல் உள்ளது. இசைஞானி இளையராஜாவின் "நத்திங் பட் விண்ட்' இசைக்கோர்வையை எத்தனைமுறை கேட்டிருப்பேன் என்று தெரியாது. அதை கேட்ட பிறகுதான் புல்லாங்குழல் மீதே காதல் ஏற்பட்டது. இளையராஜா வோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

"யாவும்' என்ற காணொலி இசைக்கோர்வையை வெளியிட்டிருக்கிறேன். இதற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பெண்களோ ஆண்களோ அனைவரும் சமம் என்ற உணர்வு பரவலாக வேண்டும். அகக்கட்டுப்பாடுகள், புறக்கட்டுப்பாடுகள் பெண்களை அடக்கி ஆண்டு வருகின்றன. அகத்திலும் புறத்திலும் பெண்கள் சுதந்திரத்தை உணர வேண்டும் என்ற கருத்தோடு கர்நாடக இசை மற்றும் ஜாஸ் என்ற மேற்கத்திய இசையின் அடிப்படையில் "யாவும்' உருவாக்கப்பட்டுள்ளது.

வானத்தில் பறக்கும் பறவைக்கு கிடைக்கும் உணர்வை பெண்களும் பெற வேண்டும் என்பதால் புல்லாங்குழலோடு இசைகோர்த்திருக்கிறேன். சின்ன சின்ன வெற்றிகளை கூட பெண்கள் கொண்டாட வேண்டும்.

முதல்முறையாக மேடையேறுதல், முதல்முறையாக தனிப்பயணம் மேற்கொள்வது, புதிய நடனத்தை கற்றுக்கொள்ளுதல், முதல் ஊதியத்தில் இருந்து சொந்தமாக பொருள் வாங்குவது போன்ற எல்லாவற்றையும் பெண்கள் கொண்டாட வேண்டும்.

பெண்மையும் இசையும் வெவ்வேறல்ல. இசையை போல பெண்மையையும் கொண்டாட வேண்டும். மனத்தடைகள் நீங்கி, உள்ளமும் உடலும் வலிமை கொள்ள வேண்டும் என்பதே இசைக்கோர்வையின் நோக்கமாகும். இந்த காணொலி மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, துபை, ஹாங்காங், மும்பை, சென்னை, பெங்களூரில் படமாக்கப்பட்டது.

காணொலி தயாரிப்பு, இசைகோர்ப்பில் பெண்கள் பணியாற்றியது எங்கள் வெற்றிக்கு சுவைசேர்த்துள்ளது. தமிழில் மேலும் பல இசைக்கோர்வையை கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்'' என்கிறார் ரசிகாசேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT