மகளிர்மணி

சிங்கப்பூரில் தமிழில் தடம் பதிக்கும் பெண்மணி!

6th Jan 2021 06:00 AM | - ச.பாலசுந்தரராஜ்.    

ADVERTISEMENT

 

புத்தக வாசிப்பு குறைந்துவிட்டதால், எழுத்தாளர்களும் குறைந்துவிட்டார்கள் எனக் கூறலாம். வாசிக்கும் பழக்கம் வாழ்க்கையை உயர்த்தும் என தற்போது எந்த பெற்றோரும் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதில்லை என்பது வேதனையான விஷயம். இந்நிலையில் தென்காசியைச் சேர்ந்த பீரம்மாள் பீர்முகமது என்ற பெண்மணி, சிங்கப்பூரில் பல ஆண்டு காலமாக தமிழ் எழுத்தாளராக செயல்பட்டு வருகிறார். இது குறித்து பீரம்மாள் பீர்முகமது நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: 

""நான் தென்காசியில் பிறந்து வளர்ந்து ஆரம்பக்கல்வி, உயர் கல்வி கற்று 1980-ஆம் ஆண்டு திருமணம் முடித்து சிங்கப்பூர் வந்தேன். எனது கணவர் பீர்முகமது சிங்கப்பூரில் உள்ள தனியார்  5 நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நானும் சிங்கப்பூரில் தனியார் அலுவலகத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்தேன். எனக்கு பள்ளியில் படிக்கும் போதே புத்தகங்களை படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணத்திற்கு பின்னரும் ஓய்வு நேரத்தில் வரலாறு, நாவல், வெற்றியாளர்களின் கதை என பல தரப்பட்ட  புத்தகங்களை படிப்பேன். இதனால் எனக்கு தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.  நான் எழுதிய முதல் சிறுகதை "கடமை'. சிங்கப்பூர்  தமிழ் முரசு பத்திரிகையில் 2000-ஆம் ஆண்டில் பிரசுரமானது.

இதையும் படிக்கலாமே.. முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையா்களை கைது செய்யாதது ஏன்?

ADVERTISEMENT

இந்த கதை பிரசுரமானதும்  மேலும் எழுத வேண்டும் என எனக்குள் ஆர்வம் மிகுந்தது. சிங்கப்பூர் வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் , "ஒலி களஞ்சியம்' என்ற நிகழ்ச்சியில் நான் எழுதிய "வசந்தகாலம்' என்ற சிறுகதை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளராகவும் செயல்பட்டேன். இதையடுத்து "பிரகாசம்' என்ற சிறுகதை தொகுப்பு, "வேதவாக்கு' என்ற சிறுகதை தொகுப்பு, "வெற்றி நிச்சயம்' என்ற சிறுவர் நாடகம், "புதிய பாதை' என்ற கவிதை தொகுப்பு ஆகிய நான்கு புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளேன்.

இந்த புத்தகங்களுக்கு சிங்கப்பூர் தமிழர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 50 சிறுகதைகள், 35 நாடகங்கள், 50 கட்டுரைகள், 260 கவிதைகள் எழுதியுள்ளேன். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் 4 ஆண்டுகள் செயலாளராகவும் பணி புரிந்துள்ளேன்.

என்னைப் போன்று  பெண்கள் பலரும் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கைபேசியிலும், டி.வி.யிலும் மூழ்கிவிடாமல் பயனுள்ள புத்தகங்களை படியுங்கள். எழுத முயற்சி செய்யுங்கள். அந்த முயற்தி உங்களுக்கு ஆர்வத்தையும் வெற்றியையும் கொடுக்கும். வாழ்க்கை உங்கள் வசப்படும்'' என்றார் பீரம்மாள் பீர்முகமது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT