மகளிர்மணி

மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வளிப்பவர்!

6th Jan 2021 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT

 

சென்னையில் பிறந்த மீரா ஷெனாய், ஹைதராபாத் யூனிவர்சிடியில் தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவுடன் ஜர்னலிஸ்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது அம்மா வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் சேர்ந்த முதல் மாணவி என்ற பெருமையைப் பெற்றவராவர்.

மீரா பத்திரிகைகளில் சமூக அக்கறையுடன் பல கட்டுரைகள் எழுதும்போது, மக்களுக்கு எது தேவை? தேவையில்லை? என்பது பற்றி தன் கருத்தை வெளிப்படுத்தும்போது, தன்னுடைய எழுத்துகளுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று நினைத்தார்.

அப்போது அவர் மனதில் இந்தியாவின் தேவை என்ன? கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளான இளம் சமூதாயத்திற்கு எப்படி உதவுவது என்ற கேள்விகள் எழுந்தன. இந்தியாவின் மக்கள் தொகையில் 69 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கும் போது யாருக்கு தேவைகள் அதிகம் என்று நினைத்தவர், இந்தியாவில் முதன்முறையாக இளைஞர்களின் திறமையை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்ட எம்ப்ளாய்மெண்ட் ஜெனரேஷன் அண்ட் மார்க்கெட்டிங் மிஷன் என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டார்.

ADVERTISEMENT

இவரது முயற்சி வீண்போகவில்லை. 2014- ஆம் ஆண்டு அந்த அமைப்பின் ஒரு பகுதியாக யூத் 4 ஜாப்ஸ்( ஒய் 4ஜே) என்ற கிளை அமைப்பு உருவானது. இதில் பர்சன்ஸ் ஆஃப் டிஸாபிலிடி என்று குறிப்பிடப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு துறைகளில் பயிற்சி அளிப்பதோடு, அவர்களுக்குப் பொருத்தமான பணிகளில் வாய்ப்பளிப்பதென்றும் தீர்மானித்தார்.

இதில் பதிவு செய்யும் குறிப்பாக கிராமப்புற மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், கல்லூரியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் பயிற்சியளித்து வேலை வாய்ப்புகளை தேடி தருவதோடு, பார்வை குறைபாடு உள்ள இளைஞர்களுக்கும் படிக்கவோ அல்லது டிப்ளமோ சான்றிதழ் பெறவோ வழிவகை செய்து கொடுப்பதும் இவரது நோக்கமாக இருந்தது.

இதற்காக பல கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்தார். ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட ஒய்4ஜே வெகு சீக்கிரத்தில் வளர்ச்சிப் பெற்று இன்று நாடு முழுவதும் 18 மாநிலங்களில் 27 கிளைகளை அமைத்ததோடு, இதுவரை 23 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றனர். அவர்களில் 60 சதவீதத்தினர் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களில் பணிநியமணம் பெற்றுள்ளனர்.

ஒய்4ஜே உருவாக காரணகர்த்தாவாக இருந்த மீரா ஷெனாய், இத்துடன் தன்னுடைய பணி முடிவடைந்ததாக நினைக்கவில்லை. திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டபோதும், மாற்றுத் திறனாளிகளின் திறமையை வெளிக் கொண்டுவர நம்பிக்கை அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல் பட்டுவரும் நேரத்தில், பொதுமுடக்கம் காரணமாக இவரது திட்டங்களில் தொய்வு ஏற்பட்டது. பயிற்சி பெறும் மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்களில் பலர் தினக்கூலி தொழிலாளர்கள் என்பதால் அவர்களது பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புகளை தேடுவதிலும் சிரமம் ஏற்பட்டது.

பொதுமுடக்கம் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டன. ஏற்கெனவே பயிற்சியில் இருந்தவர்களும் தொடர்ந்து பயிற்சி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இருப்பினும் மீரா ஷெனாய் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலமாக பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்தார்.

இந்த மாற்று ஏற்பாட்டை 15 நாள்களுக்குள் செய்து முடித்தவுடன், இதையறிந்த மேலும் பல மாற்றுத் திறனாளிகள் குறிப்பாக பெண்கள் இந்த இணையதளம் வழியாக பயிற்சிபெற ஆர்வமுடன் முன் வந்தனர்.

பல பெண்கள் காலையிலேயே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பகல் நேர வகுப்புகளில் சேர்ந்து பயிற்சிப் பெறத் தொடங்கினர். இவர்களில் 18 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆவர். ஏற்கெனவே பல வகையில் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டிருந்த இவர்களின் ஆர்வத்தை கண்ட மீரா ஷெனாய் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார். அவர்கள் தேவைக்கேற்ப பயிற்சி அளித்தாலும், அவர்களுக்கு தகுதியான பணிகளில் அமர்த்துவது மீரா ஷெனாய்க்கு சவாலாக இருந்தது.

இருப்பினும் ஒரு புறம் கதவு மூடப்பட்டால், இன்னொரு புறம் திறக்கும் என்பது போல், இ-காமர்ஸ் மற்றும் சில பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இந்த மாற்றுத் திறனாளிகளின் திறமையை பயன்படுத்திக் கொள்ள முன்வந்தன. இணையதளத்தில் பல ஆண்டுகள் பயிற்சிப் பெற்ற பலருக்கு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் வாய்ப்பு கிடைத்தது. அமேசான் நிறுவனம் 700 பேர்களுக்கு வாய்ப்பளித்தது. இந்த பொது முடக்கத்திலும் சுமார் 2,300 பேரை பணியில் அமர்த்தியது மீரா ஷெனாய் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் இவரது சேவையை பாராட்டி பலவிருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தன்னுடைய அயராத உழைப்பால் தொழில் முனைவோராகவும், சமூக ஆர்வலராகவும் விளங்கும் மீரா ஷெனாய், இன்று திறமைகளை ஊக்குவிக்கும் அமைப்பிலும் ஆலோசகராக இடம் பெற்றுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிகளில் இட ஒதுக்கீடு செய்திருப்பது போல், தனியார் நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ள மீரா ஷெனாயின் ஒய்4ஜே தொண்டு நிறுவனம், இன்று தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமின்றி உலகிலேயே மிக சிறந்த நிறுவனமாக விளங்குகிறது.

இது ஆரம்பம்தான். இத்துடன் என் பயணம் முடிந்து விடவில்லை. இன்னும் பல திட்டங்கள் இருக்கிறது'' என்கிறார் மீரா ஷெனாய்.

ADVERTISEMENT
ADVERTISEMENT