மகளிர்மணி

கதம்பம்

6th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT


நீளமான நகங்களைக் கொண்ட பெண்!

அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் ஹூஸ்டன் நகரில் நகப்பராமரிப்பு ஆலோசகராகப் பணியாற்றி வருபவர் அயன்னா வில்லியம்ஸ் எனும் பெண்மணி. இவர், உலகின் மிக நீளமான நகங்களைக் கொண்டிருக்கும் பெண்மணியாகக் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். 2018- ஆம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இவரது இரு கைகளிலும் இருக்கும் நகங்களின் மொத்த நீளம் 576.4 செ.மீ. (18 அடி 10.9 அங்குலம்).

இவருக்கு முன்பாக, அமெரிக்காவின் நிவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரிலிருக்கும் கிறிஸ்டின் வால்டன் எனும் பெண்மணி, நகங்களை மிக நீளமாக வளர்த்துச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். இவரது இரு கைகளின் நகங்களின் நீளம் (9 அடி 7 அங்குலம்).

உலகின் மிக நீளமான நகங்களை வளர்த்துச் சாதனை படைப்பதற்காகப் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்ததாகக் கூறும் அயன்னா வில்லியம்ஸ், பாத்திரங்களைக் கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு வீட்டு வேலைகள் செய்யும்போது, நகங்கள் உடைந்திடாமல் இருக்க, பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை மேற் கொள்கிறாராம். நக வளர்ப்பிற்காகப் பிறரது கேலி, கிண்டலுக்கு ஆளாக நேரிட்ட போதும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய நிலையில் மிகவும் உறுதியாக இருந்ததால் மட்டுமே தன்னால் இச்சாதனையைச் செய்ய முடிந்தது என்று கூறும், இவருடைய கையிலுள்ள நகங்களுக்கு நகப்பூச்சு செய்வதற்கு 20 மணி நேரம் வரை ஆகிறதாம். இவருடைய நகங்களுக்கு நகப்பூச்சு செய்து கொள்ள 2-லிருந்து 3 நகப்பூச்சுப் பாட்டில்கள் தேவைப்படுகிறதாம்.

- ரிஷி

ADVERTISEMENT

கர்ப்பிணிப் பெண்கள் நடிப்பதில் தவறில்லை!

இரண்டாவது முறையாக தாய்மை அடைந்துள்ள கரினா கபூர், மிர்ச்சி யூ டியூபில் ஒளிபரப்பாகும் "வாட் உமன் வாண்ட்' என்ற நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியிலும் தொடர்ந்து தொகுப்பாளினி பொறுப்பை ஏற்றுள்ளார்.

""கர்ப்ப காலத்தில் நடிப்பது சிரமமில்லையா? என்று பலர் கேட்கின்றனர். கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் வேலைக்கு போகக் கூடாது என்றோ, நடிக்கக் கூடாது என்றோ யாராவது சொல்லியிருக்கிறார்களா? என்னுடைய முதல் மகன் தைமூர் பிரசவத்திற்கு முன்பு வரை நான் நடிப்பதை நிறுத்தவில்லை. ஒவ்வொரு பெண்ணின் உடல்வாகும் வேறுபடுவதுண்டு. என்னைப் பொருத்தவரை எந்த சிரமமும் இருப்பதாக தோன்றவில்லை. குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேலை செய்வது நல்லது என்று மருத்துவர்களே சொல்கிறார்களே''  என்கிறார் கரீனா கபூர்.

 

அம்மா கொடுத்த தைரியம்!

நான் நடிக்க வந்த நேரத்தில் என்னுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த பிரபல சீனியர் நடிகையொருவர் படப்பிடிப்பின்போது வோட்காவை கோகோ கோலாவுடன் கலந்து அனைவர் எதிரிலும் பகிரங்கமாக குடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளரில் ஒருவர் என்னிடம் வந்து, ""நீயும் விருப்பப்பட்டால் இப்படி பயமின்றி குடிக்கலாம்'' என்றார். அந்தக் காலகட்டத்தில் நான் பார்ட்டிகளில் கலந்து கொள்ளும்போது குடிப்பதை தவிர்த்து விடுவேன். ஒருமுறை மும்பையில் இருந்த என்னை பார்க்க வந்த என் அம்மா என்னிடம், ""மனிஷா, நீ மது அருந்தவோ, சிகரெட் பிடிக்கவோ விரும்பினால் வெளிப்படையாக செய். மறைமுகமாக கோக்கில் மதுவை கலந்து குடிக்கும்போது, யாராவது பார்த்து என்ன மது அருந்துகிறாயா? என்று கேட்கும்போது, பகிரங்கமாக குடிப்பதைவிட இப்படி கேட்பது பெரிய அவமானமாக தோன்றும்'' என்று கூறினார். இது எனக்குள் தைரியத்தையும், துணிவையும் ஏற்படுத்தியது.

( "ஹீல்ட்' என்ற தலைப்பில் மனிஷா கொய்ராலா எழுதிய புத்தகத்திலிருந்து)

- அருண்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT