மகளிர்மணி

இன்னல்களை கடந்து வெற்றி பெற்றவர்!

பூா்ணிமா

ஹாசன் மாவட்டம் ஹூலின ஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த சிநேகா ராஜேஷ் (31) கணினி சயின்ஸ் படித்து முடித்ததும், தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரு நகரத்தில் வேலை தேடி வந்தார். எங்கும் வேலை கிடைக்கவில்லை. இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியால் சொந்த கால்களில் நிற்கும் தகுதியைப் பெற்று இன்று 200 பேர்களை பணிக்கு அமர்த்தி சொந்தமாக அகர்மேக்ஸ் டெக் என்ற நிறுவனத்தை நிறுவி நிர்வகித்து வருகிறார். இதை இவரால் எப்படி சாதிக்க முடிந்தது?

""என்னுடைய வாழ்க்கையில் பெங்களூருவில் நான் சொந்தமாக நிறுவனத்தை தொடங்கி தலைமை செயல் அதிகாரியாக நிர்வாகம் செய்வேன் என்று நினைக்கவே இல்லை. பத்தாண்டுகளுக்கு முன் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் வந்திறங்கிய போது, கையில் கணினி சயின்ஸில் வாங்கிய டிப்ளமோ தவிர வேறு எந்த தகுதிச் சான்றிதழும் இல்லை. வாழ்க்கையிலேயே ஒரு பெரிய நகரத்தைப் பார்ப்பதும் அதுதான் முதல்முறை. சிறு கிராமத்திலிருந்து வந்த எனக்கு முறையான தொடர்புகளும் இல்லை. ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் தெரியாது.

பேயிங் கெஸ்ட் விடுதியில் தங்கி வேலை தேடத் தொடங்கினேன். பீன்யாவில் ஒரு சிறிய கம்பெனியில் சாஃப்ட்வேர் டெவலப்பர் பணி கிடைத்தது. மாதசம்பளம் ரூ. 3 ஆயிரம், இவ்வளவு பெரிய நகரத்தில் வசிப்பதற்கு அது போதுமானதாக இல்லை. வேறு வேலை தேடினாலும் எனக்குத் தேவையான தொலைத்தொடர்பு திறமை இல்லாததால் வேலை கிடைப்பது சுலபமாக இல்லை. தனிப்பட்ட முறையில் சில தனியார் நிறுவனங்களிலிருந்து பணிகளை வாங்கி செய்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மாலைநேர கல்லூரியில் சேர்ந்து பி.டெக் பயிலத் தொடங்கினேன். கூடவே ஆங்கிலத்தில் சரளமாக பேசும் பயிற்சியும் பெற்றேன்.

தனியார் நிறுவனங்களிலிருந்து பெறும் பணிகளை குறித்த நேரத்திற்குள் செய்து கொடுத்ததால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றேன். மேலும் பணிகள் அதிகரிக்கத் தொடங்கின. அப்போதுதான் நாமே ஒரு நிறுவனத்தை ஏன் தொடங்கக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.

ஆனால் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதோ, தோல்வி ஏற்பட்டால் எப்படி தாங்குவது என்பது பற்றியோ நான் சிறிதும் சிந்திக்கவில்லை. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவு மட்டும் என்னிடம் இருந்தது. அது வரை சேமித்து வைத்த பணத்துடன், கடனுதவி பெற்று 2012- ஆம் ஆண்டு "ரெக்ரியேட் சாப்ட்வேர் சொல்யூஷன்' என்ற பெயரியில் 25 பேரை பணியில் அமர்த்திக் கொண்டு நிறுவனமொன்றைத் தொடங்கினேன். வாழ்க்கையாளர்கள் அதிகரித்தனர். நிறுவனமும் வளரத் தொடங்கியது.

2015-ஆம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை "அகர்மேக்ஸ் டெக்' என மாற்றினேன். இரண்டாண்டுகள் கழித்து துபாய் மற்றும் சிங்கப்பூரில் கிளைகளைத் தொடங்கியதோடு, லண்டனிலும் ஓர் அலுவலகத்தை அமைத்தேன். தற்போது 200-க்கும் மேற்பட்டவர்கள் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். என்னுடைய வளர்ச்சியை அறிந்தவுடன் கடந்த ஆண்டு பெல்ஜியம் யூரோப்பியன் பார்லிமெண்ட்டில் நடந்த கிராம தொழில் முனைவோர் கருத்தரங்கில் பேச எனக்கு அழைப்பு கிடைத்தது. இது என்னுடைய முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்.

என்னைப் போல் தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் நான் கூற விரும்புவது இதுதான். கனவு காண்பதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு பக்கபலமாக யாரும் இல்லாதபோது துணிச்சலாக முடிவெடுக்க உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றுகூறும் சிநேகா ராகேஷ், கூடவேதான் நடத்திவரும் சமக்ரபிவிருத்தி, என்ற அறக்கட்டளை மூலம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் சுயமாக வேலை தேடிக் கொள்ளும் பயிற்சியை இலவசமாக அளித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT