மகளிர்மணி

மைக்கேல் ஜாக்சனுக்கு உடை தைத்துத் தர விரும்பினேன்!

24th Feb 2021 06:00 AM | - ஸ்ரீதேவி குமரேசன்

ADVERTISEMENT

 

""ஃபேஷன் என்பது நவீன உலகத்துக்கு மட்டும் சொந்தமில்லை, ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால், ஒருவரை பார்த்தவுடன் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையை வைத்துதான் அவர்களை எடைபோடும் பழக்கம் நம்மிடைய இருக்கிறது. எனவே, நாம் அணியும் உடை நமது தன்னம்பிக்கையை வெளிப்படுத்து வதாக இருக்க வேண்டும்'' என்கிறார் ஆடை வடிவமைப்பாளர் சண்முகப்பிரியா.

இவர், 32 விளம்பர படங்களுக்கும், 14 திரைப்படங்களுக்கும் ஃபேஷன் டிசைனராக பணியாற்றியவர். தற்போது, ஃபேஷன் டிசைனுக்காகவே கோவையில் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியிருக்கிறார். மேலும், கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""தற்போது நான் வசிப்பது கோவையாக இருந்தாலும், சென்னைதான் எனது பூர்வீகம். ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில்தான் படித்தேன். சிறு வயது முதலே பேஷன் மீது ஓர் ஆர்வம் இருந்தது. அதற்கு காரணம் பாப் இசை கலைஞர் மைக்கேல் ஜாக்சன்தான். அவரின் தீவிர ரசிகை நான். அவரது பாடல்களை ரசிப்பது போலவே, அவர் அணியும் ஆடைகளுக்கும் நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். அதில் நானும் ஒருத்தி. இதனால், நான் வளர்ந்து பெரியவள் ஆனதும், அவருக்கு ஒரு டிரஸ் தைத்து தர வேண்டும் என்று எண்ணினேன்.

ADVERTISEMENT

ஆனால், நான் +2 முடித்ததும் வீட்டில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கல்யாணம், குடும்பம் என்று இருந்தாலும், ஃபேஷன் மீது எனக்கிருந்த ஆர்வம் குறையவே இல்லை. அதனால் திருமணத்திற்கு பிறகு ஃபேஷன் குறித்து டிப்ளமோ படித்தேன்.

என் எண்ணம் போலவே பேஷன் துறையும் கைவந்து சேர்ந்தது. ஆனால், மைக்கேல் ஜாக்சன், திடீரென இறந்துபோனதால் அவருக்கு ஆடை தைத்துத் தர வேண்டும் என்ற என் எண்ணம் மட்டும் நிறைவேறாமலேயே போனது. இருந்தாலும், அந்த சமயத்தில், சென்னையில் உள்ள அவரது ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து அவருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன். மேலும், என்னுடைய திருப்திக்காக அவர் அணிந்திருந்த அனைத்து ஜாக்கெட்டுகளின் மாடல்களையும் நானே வடிவமைத்து காட்சிக்காக வைத்தேன்.

பேஷன் டிசைனிங் படிக்கும்போதே, தையல் குறித்த சின்ன சின்ன விஷயங்களையும் தெரிந்து கொள்ள விரும்பினேன். இதற்காக தி.நகரில் சாலை ஓரங்களில் சிறிய அளவில் தையல் கடையினை வைத்திருப்பவர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதில் துணி மற்றும் தையல் சார்ந்து பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.

அதன் பிறகு ஒரு நடன பள்ளியின் நடன குழுவுக்கு உடைகள் வடிவமைத்துக் கொடுத்தேன். அதுதான் என் வாழ்க்கையை யே மாற்றி அமைத்த தருணம் எனலாம்.

ஏனென்றால் அதன்மூலம் 32 விளம்பர படங்களிலும் மற்றும் 14 திரைப்படங்களிலும்ஃபேஷன் டிசைனராக வேலைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில பிரபலங்களுக்கு பர்சனல் டிசைனராகவும் இருந்துள்ளேன்.

பின்னர், சூழ்நிலைக் காரணமாக எனக்குப் பிடித்த துறையில் இருந்து விலகி ஒரு பள்ளியில் நிர்வாகத் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். அதே பள்ளியில் கல்லூரியும் இருந்தது. அவர்கள் அப்போதுதான் அந்தக் கல்லூரியில ஃபேஷன் துறை ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்தனர். நான் ஏற்கெனவே அந்தத் துறையில் இருந்ததால், என்னை அந்தத் துறையின் புரோகிராம் மேனேஜராக நியமித்தார்கள். இந்த துறைக்கான மொத்தப் பாடத்திட்டங்களையும் நானே வடிவமைத்தேன். அதில், புத்தகத்தில் படிப்பதை விட செயல்முறை பாடங்கள் நிறைய இருக்கும்படி வடிவமைத்தேன்.

ஏனென்றால், ஓர் உடையைப் பார்க்கும்போது அது அழகாக தெரியும். ஆனால் அதுவே, கேமரா முன்னால் அதன் தோற்றம் வேறாக தோன்றும். எனவே, கேமரா முன்னால் அந்த உடை எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது குறித்தும் சொல்லித் தருகிறோம்.

சமீபத்தில் கோவையில் "அப்ரோடைட்ஸ் டிரேப்' என்ற பெயரில் ஒரு ஃபேஷன் ஸ்டுடியோவை தொடங்கியுள்ளேன். நான் பணியாற்றும் கல்லூரியில், என்னிடம் படித்த சிலர் இப்போது என் ஸ்டுடியோவில் டிசைனராக வேலைப் பார்க்கிறார்கள்.

பொதுவாக பலருக்கு எவ்வாறு உடை அணிய வேண்டும் என்றே தெரியவில்லை. அணிந்தாலும், அதற்கான காலணிகள் மற்றும் அணிகலன்கள் சரியாக மெட்சிங் செய்ய தெரியவில்லை. இதனால், எங்களை நாடி வரும் ஒருவரை உச்சி முதல் பாதம் வரை முற்றிலும் க்ரூமிங் செய்வது தான் எங்கள் ஸ்டுடியோவின் பணி. அவர்களுடனேயே பயணித்து அவர்களுக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் சரியான அளவில் எங்கு கிடைக்கும், எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பது வரை கற்றுத் தருவோம்.

அதுபோன்று தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்பவர்கள்தாம். எந்தப் பணியில் இருப்பவராக இருந்தாலும், கண்களை உறுத்தாத ஆடைகளை அணிந்து செல்லுங்கள். அதுபோல் எதுவாக இருந்தாலும் மனதில் உறுதியுடனும் முகத்தில் சிறு புன்னகையுடனும் அணுகுங்கள். நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக காட்சி அளிப்பீர்கள்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT