மகளிர்மணி

பசுமை நோபல் பரிசு... நான்கு  பெண்கள்...!

சுதந்திரன்

"பசுமை நோபல் பரிசு' என்று பெருமையாகச் சொல்லப்படும் "கோல்டுமேன் என்விரான்மென்டல் அவார்டு'' - 2020 ஆம் ஆண்டுக்கான சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பணியில் களத்தில் இறங்கி போராடும் ஆறு போராளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கப்பட்டிருக்கும் ஆறு பேர்களில் நால்வர் பெண்கள்.

கோல்டுமேன் சுற்றுப்புறச் சூழல் விருதினை 1989-இல் ரிச்சர்ட் கோல்டுமேன், ரோடா கோல்டுமேன் இணைந்து உருவாக்கினார்கள். அதன் மதிப்பு சுமார் ரூபாய் 15 லட்சம்ஆகும். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோ நகரைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் சூழலியல் அமைப்பு, பசுமை நோபல் விருதினை 31 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

2020 ஆண்டின் ஆறு வெற்றியாளர்கள் பஹாமா தீவுகளிலிருந்து கிரிஸ்டல் அம்புரோஸ், கானாவைச் சேர்ந்த சிபெஸ் எசேக்கியேல், ஈக்குவடாரின் நேமோண்டே நென்குய்மோ, மெக்சிகோ மகள் லேய்டி பெக், பிரான்ஸின் லூசி பின்ஸன், மியான்மரைச் சேர்ந்த பால் செயின் த்வா ஆவார்கள். சிபெஸ் எசேக்கியேல், பால் செயின் த்வா ஆண்கள். மற்ற அனைவரும் பெண்கள்.

கிரிஸ்டல் அம்புரோஸ்

பிளாஸ்டிக் பொருள்களான பைகள், ஸ்பூன்கள், ஸ்ட்ராக்கள், கப்களைத் தடை செய்யவேண்டும் என்று பஹாமா தீவில் போராடியவர் கிரிஸ்டல் அம்புரோஸ். பஹாமா தீவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரையையும், கடல் நீரையும், கடலில் இருக்கும் பவளப்பாறைகளையும், கடல்வாழ் மீன்களையும் பாதிக்கின்றன. பிளாஸ்டிக் பயன்பாடுகளைக் குறைக்க வேண்டும் என்று 2013 லிருந்து போராடி வரும் கிறிஸ்டலுக்கு வயது 29 . கிரிஸ்டலின் தொடர் போராட்டங்களின் பயனாக ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவது இந்த ஆண்டு ஜனவரி முதல் பஹாமாஸில் தடை செய்யப்பட்டுள்ளது.

நேமோண்டே நென்குய்மோஅமேஸான் மழைக் காடுகளை எரி பொருள் தேவைகளுக்காக எண்ணெய் கிணறுகள் தோண்டி அழிக்க நினைத்த தனியார் எரிபொருள் எண்ணெய் நிறுவனங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியும், வழக்குகள் தொடர்ந்தும் சுமார் எழுபது லட்சம் ஏக்கர் மழைக் காடுகளை அழிவிலிருந்து காப்பாற்றி உள்ளார் இவர். வெறும் 4000 பழங்குடி இன மக்களை ஒருங்கிணைத்து உலகில் அதிக உயிர் இனங்கள் வாழும் அமேஸான் எசுனி பூங்காவை அழிவிலிருந்து காப்பாற்றி இருக்கிறார்.

ஆறு வயது குழந்தைக்கு தாயான நேமோண்டேவுக்கு வயது 33. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்து தனது பழங்குடி மக்களை விலைக்கு வாங்கி விடாமல் இருக்க அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, சுய முன்னேற்றத்திற்காக சோலார் பேனல்கள் நிறுவி மின்சாரம் தயாரிப்பது, மழை நீர் சேகரிப்பு, இயற்கை முறையில் கோகோ மற்றும் சாக்லெட் தயாரிப்பு என்று பல தொழில்கள் உருவாக நேமோண்டே காரணமாகியுள்ளார். "டைம் இதழ்' 2020 ஆண்டின் 100 உலக ஆளுமைகளில் ஒருவராக நேமோண்டேவைத் தேர்ந்தெடுத்திருந்தது.

லேய்டி பெக்

"மாயன்' நாகரிக பழங்குடியைச் சேர்ந்த லேய்டி பெக் தேனீக்கள் வளர்ப்பவர். மெக்சிகோவைச் சேர்ந்தவர். மரபு அணு மாற்றப்பட்ட சோயா பீன்ஸ் வகைகளை பன்னாட்டு நிறுவனமான "மொன்சன்ரொ' மெக்சிகோ வயல்களில் பெருமளவில் பயிரிடுவதை எதிர்த்து போராட்டங்களைத் தொடங்கியவர்.

"'சோயா பீன்ஸ் பயிரிடும் போது பூச்சி கொல்லி மருந்துகள் அதிகம் தெளிக்கப்படுவதால் மெக்சிகோவில் வாழும் அரியவகை தேனீக்கள் கொல்லப்படுகின்றன. தேனீக்கள் அழிந்தால் தேன் சேகரித்து விற்று வாழ்க்கை நடத்துபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால் மரபு அணு மாற்றம் செய்த பயிர்களைப் பயிர் செய்யக் கூடாது தேனீக்களைக் காக்க வேண்டும்' என்பதுதான் அவருடைய போராட்டத்தின் கரு. பெக்கிற்கு 56 வயதாகிறது.

மரபு அணு மாற்றப்பட்ட சோயா பீன்ஸால், பூச்சி கொல்லி மருந்துகள் உள்ள சோயா செடிகளின் பூக்களால் தேனீக்களுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை ஆதாரங்களுடன் கூறி, மெக்சிகோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றார். அதனால் மரபு அணு மாற்றப்பட்ட சோயா பீன்ஸ் வகைகளை "மொன்சன்ரொ' மெக்சிகோ வயல்களில் பெருமளவில் பயிரிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

லூசி பின்ஸன்

பிரான்ஸின் லூசி பின்ஸன், நிலக்கரி சுரங்கங்களுக்கு நிதி உதவி செய்யும் 22 சர்வதேச வங்கிகளுக்கும், நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான பல்வேறு காப்பீடுகளை வழங்கும் 17 நிறுவனங்களுக்கும் எதிராக அழுத்தங்களைக் கொடுத்து வருபவர்.

உலகத்தின் சுற்றுப்புறச் சூழலில் கார்பன் கழிவுகள் கலப்பதில் வெகு முக்கியப் பங்கு நிலக்கரியை எரிப்பதிலிருந்து வருகிறது. ஆயினும் நிலக்கரி தோண்டி எடுப்பதில் எந்தவித தயக்கமும் உலக நாடுகளுக்கு இல்லை. தொடர்ந்து தோண்டிக் கொண்டுதான் உள்ளன. நிலக்கரி சுரங்கங்களை விரிவுபடுத்த பில்லியன் கணக்கில் வங்கிகள் நிதி உதவிகள் செய்து வருகின்றன.

பிரான்ஸிலும் வங்கிகள் நிலக்கரி சுரங்கங்களுக்கு வாரி வாரி வழங்கிவரும் நிதி உதவிகளை நிறுத்த வேண்டும் என்று உரத்த குரல் எழுப்பி வருகிறார் லூசி பின்ஸன்.

36 வயதாகும் லூசி பின்ஸன், ஊடகங்களுடன் ஒருங்கிணைந்து எதிர்ப்பு குரல் எழுப்புவதால், அவை மக்களிடம் போய்ச் சேர்ந்தன. குறிப்பிட்ட வங்கிகளின் பங்குகளை விலைக்கு வாங்கி, அந்த வங்கியின் பொதுக் குழு கூடும்போது அதில் முறையாகப் பங்கேற்று, நிலக்கரியினால் மாசுபடுத்தப்படும் சுற்றுப்புறச் சூழலால் மக்களுக்கு குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்கள்' குறித்து பேசிவந்தார்.

அதுபோல காப்பீடு நிறுவனங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். அதன் விளைவாக, புதிதாக எந்த நிலக்கரி சுரங்கத்திற்கும் நிதி உதவிகளோ, காப்பீடுகளோ செய்வதில்லை என்ற முடிவை வங்கிகளும் காப்பீடு நிறுவனங்களும் எடுத்துள்ளன.

இந்த நான்கு பெண் ஆளுமைகளும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்காகவும், சமூகத்திற்காகவும் குரல் எழுப்பியதுடன், தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடி வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்பதுதான் அவர்களுக்கு "பசுமை நோபல் பரிசு' கிடைக்கக் காரணமாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

ஆள்குறைப்பில் டெஸ்லா? எலான் மஸ்க்கின் முடிவு புதிதல்ல!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

SCROLL FOR NEXT