மகளிர்மணி

நடமாடும் நூல்நிலையம்!

10th Feb 2021 06:00 AM | - கண்ணம்மா பாரதி

ADVERTISEMENT


பொதுவாக நகரங்களில், ஊர்களில் நூலகங்களுக்குச் சென்று வாசிக்கும் பழக்கம் மக்களிடத்தில் குறைந்து வருகிறது. மேடும் பள்ளமுமாக அமைந்திருக்கும் மலைப்பகுதியில் வாழும் மக்கள் குறித்து சொல்லவே வேண்டாம். நூலகம் ஒரு பக்கம் இருக்கும்.. மக்கள் இன்னொரு பக்கம் வாழ்வார்கள். கரோனா காலத்தில் உலகமே முடங்கிய போது நூலகங்களும் மூடப்பட்டன. கரோனா காலத்திற்கு முன்பும் சரி... கரோனா தீவிரமாகப் பரவிய போதும் சரி.... கரோனா வேகம் தணிந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் சரி... வாசகர்களைத்தினமும் அவர்கள் வீடுகளுக்குத் தேடிச் சென்று நூல்களை விநியோகித்து வாசகர்களின் வாசிப்பு பசியைப் போக்கி வரும் ராதாமணியை மோதக்கரா கிராம மக்கள் "நடமாடும் நூல்நிலையம்' என்று அழைக்கிறார்கள். மோதக்கரா, கேரளம் வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது. ராதாமணி மாதத்தில் சுமார் 500 நூல்களை விநியோகிக்கிறார். "மோதக்கரா'வில் வசிக்கும் மக்களுக்கு நூல்நிலையத்திற்கு வந்து போவது அத்தனை எளிதான விஷயம் இல்லை. மலை, குன்று அடங்கிய இந்தப் பகுதியின் நில அமைப்புதான் அதற்கு காரணம். ஆனால் நூல்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் கிராமத்தில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ராதாமணி சொல்கிறார்:

""சிறுவயதிலிருந்தே செய்தித்தாள்களை, நூல்களை வாசித்து வளர்ந்தவள் நான். எனது தந்தை படிக்கவில்லை. அவருக்கு நாட்டுநடப்பை தெரிவிக்க செய்தித்தாளை உரக்க வாசிப்பேன். நான் வாசிப்பதைக் கேட்டு நாட்டுநடப்பைத் தந்தை புரிந்து கொள்வார். இப்படித்தான் வாசிப்பு எனது சுவாசமானது.

கடையில் வாங்கும் சாமான்களைக் கட்டித்தரும் பழைய செய்தித்தாள்களைக் கூட விடமாட்டேன்; வாசிப்பேன். செய்தித்தாள்களுடன் நூல்களையும் தந்தை கேட்க வாசிக்க ஆரம்பித்தேன். எழுத்தாளர் தனது எழுத்துகள் மூலமாக ஒரு சூழ்நிலையை எப்படி சிருஷ்டிக்கிறார் என்பதை வாசித்து வியந்து நிற்பேன்.

அவரது கதையை கண் எதிரில் நடக்கிற மாதிரி கற்பனை செய்து பார்ப்பேன். அதனால் நூல்கள் எனக்கு நெருக்கமாயின. அப்பா உறவினர்களுக்கு கடிதம் எழுதுவதும் நான்தான். அப்பா என்ன எழுத வேண்டும் என்று சொல்ல அதைக் கடிதத்தில் பதிப்பேன். இப்படித்தான்... வாசிப்பதும், எழுதுவதும் எனக்கு பழக்கமானது.. பிறகு வழக்கமானது.

ADVERTISEMENT

"கேரளத்தில் நூலகங்களை மக்களிடையில் பிரபலமாக்க அறுபதுகளில் கேரளத்தில் திட்டம் அறிமுகமானது. அதன் பலனாக 1961 -இல் மோதக்கராவில் "பிரதிபா நூலகம்' தொடங்கப்பட்டது. மோதக்கராவின் சுற்றுவட்டாரத்தில் ஆறுகள், சிறு அருவிகள், வயல்கள், பறவைகள் தங்குமிடங்கள், பசுமை போர்த்திய காடுகள், மலைகள் எல்லாம் உண்டு. ஆனால் நூலகத்திற்கு மக்கள், குறிப்பாக பெண்கள் வந்து போவது சிரமமான ஒன்றாக இருந்தது. வீட்டு வேலைகள், வயல்வேலைகள், மற்றும் நூலகத்திற்குப் போக வேண்டிய தூரம் இவை பெண்களுக்கு நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள தடைகளாக அமைந்திருந்தன.

அதனால் அவர்கள் அல்லது அக்கம்பக்கத்தினர் வாங்கும் செய்தித்தாள்கள்களுடன் அவர்களது வாசிப்புப் பழக்கம் நின்றுவிட்டது. 2012 வாக்கில் பிரதிபா நூல்நிலையத்துடன் இணைந்து பணி புரிய ஆரம்பித்தேன். அப்போதுதான் "பெண்கள் நூலகம் வருகிறவரைக் காத்திருக்க வேண்டாம். நூல்களை வாசிக்க விரும்புவர்களைத் தேடிச் சென்று நூல்களை விநியோகித்து வாசித்து முடித்த நூல்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு திரும்புவது என்று முடிவு செய்தேன். வாரத்தில் ஆறு நாட்கள் நூல்களை வாசிக்க விரும்புபவர்களைத் தேடிச் செல்கின்றேன். ஒவ்வொருமுறையும் ஒரு நபருக்கு இரண்டு புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பேன். அதை அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து புத்தகங்களைப் பெற்றுக் கொள்கிறவரின் கையொப்பத்தையும் பெற்றுக் கொள்வேன்.

புத்தகங்களை வாசித்துவிட்டு திரும்பத்தர எட்டு நாள் கால அவகாசம் தரப்படும். "பிரதிபா' நூலகத்தில் சுமார் 1100 நூல்கள் உள்ளன. 102 பேர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். தினமும் சுமார் 30 நூல்களை பையில் எடுத்துக் கொண்டு "மோதக்கரா'வின் ஒரு பகுதியைச் சுற்றிவருவேன்.

கரோனாவுக்கு முன் மாதம் சுமார் 550 நூல்களை விநியோகித்து வந்த நான், ஊரடங்கின் போது நானும் முடங்கிப் போனேன். கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இப்போது மாதம் 350 நூல்கள் விநியோகித்து வருகிறேன். அலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நூல் இருந்தால் கொண்டு வாருங்கள் என்பார்கள். அந்தப் புத்தகம் நூல்நிலையத்தில் இருக்கும்பட்சத்தில், அந்த நூலைக் கேட்டவருக்கு கொண்டு போய்க் கொடுப்பேன். நூலகக் கட்டணம் ஆண்டுக்கு 25 ரூபாய். அதைக் கட்ட முடியாதவர்களுக்காக நானே கட்டணத்தைத் கட்டிவிடுவேன். என்னிடமிருந்து நூல்களை பெறும் போது மலரும் முகங்களைக் காண நாளையும் நடக்கலாம்.. என்று தோன்றும்'' என்கிறார் நடமாடும் நூல்நிலையமான ராதாமணி!

ADVERTISEMENT
ADVERTISEMENT