மகளிர்மணி

கடலுக்குள் திருமணம்...!

ஏ. எ. வல்லபி

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொன்னாலும் திருமணங்கள் பெரும்பாலும் நடப்பது கோயில்களில் அல்லது திருமண மண்டபங்களில்தான்! வெகு அபூர்வமாக திருமணங்கள், விண்ணிலும், கடலிலும், கடலுக்குள் கீழே நீருக்குள்ளும் நடக்கின்றன.

சென்னையில் நீலாங்கரை கடல் பகுதியில் கடலுக்குள் 60 அடி ஆழத்தில் சென்ற வாரம் (பிப்ரவரி 1-இல்) திருமணம் நடந்துள்ளது.

மணமகன் சின்னத்துரை திருவண்ணாமலையைத் சேர்ந்தவர். மணமகள் ஸ்வேதா கோவையைச் சேர்ந்தவர். இருவரும் கணினி பொறியாளர்கள்.

கடலுக்குள் மூழ்கிச் செல்ல சேலை, வேஷ்டி பொருத்தமான உடை அல்ல என்றாலும் மணமகன் மணமகள் தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையான சேலை, வேஷ்டி அணிந்து கரையிலிருந்து படகில் ஏறினர். 60 அடி ஆழமான கடல் பகுதி வந்ததும், "ஸ்கூபா' மூழ்கல் முறைப்படி ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் பொருத்தி, ஆக்சிஜன் வரும் குழாயை மூக்கில் பொருத்திக் கொண்டு, கண்களில் கடல் நீர் பட்டு எரிச்சல் வராமல் இருக்க தண்ணீர் புகாத கண்ணாடியை அணிந்து கொண்டு மணமக்கள் உதவியாளர்களுடன் கடலுக்குள் குதித்தனர்.

கடலுக்குள் முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர் வேலைப்பாடுகள் கொண்ட வளைவு தயாராக இருந்தது. மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலைகளை மாற்றிக் கொண்டு மணமகன் மணமக்களுக்கு தாலி கட்டியதுடன் கடலுக்கு மேலே நீந்தி வந்தனர். மீண்டும் படகில் ஏறி கரை திரும்பினர்.

"திருமணம் கடலுக்கு அடியில் நடக்க வேண்டும் என்று சொன்னதும் நான் பயந்தேன். தயங்கினேன். கடலுக்குள் நீந்துதல் தொடர்பான பல காணொளிகளை சின்னத்துரை காட்டினார். கொஞ்சம் தைரியம் வந்தது. பிறகு சில நாள்கள் நீச்சல் குளத்திலும், சில நாள்கள் கடலிலும் பயிற்சி செய்யச் சொன்னார்கள். பிறகுதான் கடலில் மூழ்கி திருமணம் செய்து கொள்ள தைரியம் வந்தது. மாலை மாற்றிக் கொண்ட போதும், தாலி கட்டிக் கொண்ட போதும்... கடலில் வாழும் மீன்கள் எங்களைச் சுற்றி இருந்தன. இந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது' என்கிறார் மணமகள் ஸ்வேதா.

""பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்கூபா மூழ்கலைக் கடலில் செய்து வருகிறேன். அதனால் கடலுக்குள் நீந்துவது எனக்குப் பழக்கமான விஷயம்தான். திருமணச் சடங்கிற்காக கடலுக்குள் 45 நிமிடங்கள் இருந்தோம். மலர்ச் செண்டை மணமகளுக்கு வழங்குவதிலிருந்து சடங்கு தொடங்கியது. மாலைகள் மாற்றி, தாலி கட்டலுடன் சடங்கு நிறைவானது. கடலுக்குள் திருமணம் நடக்க உதவியவர்கள் அரவிந்த் தருண்ஸ்ரீயும் அவரது குழுவினரும். எனது உறவினரான அரவிந்த் கடலில் நீந்துதல், மூழ்குதலைக் கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளர்.

நாங்கள் திருமணம் செய்து கொண்ட இடம் கரையிலிருந்து நாலரை கி.மீ. தூரத்தில் 60 அடி ஆழத்தில் என்று நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடல் அமைதியாக இருந்தால்தான் திருமணம் நினைக்கிற மாதிரி நடத்த முடியும். அதனால் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தாலும், திருமண நாளை உறுதி செய்யவில்லை. கடல் அமைதியாக மாற காத்திருந்தோம். மீனவர்களிடம் தகவல் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தோம். ஜனவரி 31 இரவு, மீனவர்கள் கடல் சாந்தமாக உள்ளது என்று தகவல் தந்தார்கள்.

நாங்கள் பிப்ரவரி 1 காலை திருமணத்திற்கு தயார் ஆனோம். கடல் காவல் செய்யும் காவல் துறையிடம் அனுமதி முன்பே வாங்கி இருந்ததால் அவர்களுக்கும் தகவல் சொன்னோம். கடலின் அமைதிக்காகக் காத்திருந்ததால் திருமணத் தேதியை நிச்சயிக்க முடியவில்லை. அதனால் எல்லா உறவினர்கள் நண்பர்களிடம் தெரிவிக்க முடியவில்லை. இந்த மாத இறுதியில் நடக்க இருக்கும் வரவேற்பு விழாவில் அனைவரையும் அழைப்போம். இந்தியாவில், இந்துமத முறையில் கடலுக்குள் நடந்த முதல் திருமணம் எங்களது திருமணம்தான். ஸ்வேதாவின் பெற்றோர், உறவினர்கள் கரையில் நிற்க... நாங்கள் மட்டும் உதவியாளர்களுடன் படகில் புறப்பட்டோம்'' என்கிறார் சின்னதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT