மகளிர்மணி

அச்சம் தவிருங்கள்.. வெற்றி நிச்சயம்!

கோதை ஜோதிலட்சுமி


திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இன்றைய அத்தியாவசியம் என்பதை அரசாங்கமே புரிந்து கொண்டு அதற்கென வகுப்புகளை நடத்துகிறது. தன் வாழ்க்கையை வங்கியில் சாதாரண கிளார்க்காகத் தொடங்கி வங்கியின் துணைத் தலைவர் நிலைக்கு உயர்ந்தவர் உமாபாஸ்கரன். வங்கியில் தனக்குத் தரப்பட்ட சர்வதேசத் தரத்திலான பயிற்சி வகுப்புகளால் ஈர்க்கப்பட்டு அது போன்ற பயிற்சிகள் சாமானியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உறுதியோடு தன் வங்கிப் பணியை உதறிவிட்டு, தன்னை வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளராக உருவாக்கிக் கொண்டவர். குறிப்பாக பெண்கள், இளைஞர்களுக்கான வாழ்வியல், கல்வி தொடர்பான ஆலோசனைகள் வழங்குவது, பயிற்சி வகுப்புகளை நடத்துவது என்று இயங்கி வருகிறார். தன் அனுபவங்களை நம்மோடு அவர் பகிர்ந்து கொள்கிறார்:

வங்கியின் துணைத் தலைவர் ஆலோசகர், பயிற்சியாளர் ஆனது எப்படி?

சர்வதேசத் தரத்திலான பயிற்சிகள் நம்மை எந்த அளவுக்கு சிந்திக்கவும் நம் பார்வையை விசாலப்படுத்தவும் செய்கின்றன என்பதை ஷிவ்கேரா (நஏஐயஓஏஉதஅ) பயிற்சி மையத்தில் பயிற்சி கிடைத்த போது உணர்ந்தேன். அதனால், நாமும் அதுபோன்ற சேவையை நம் நாட்டில் சாத்தியப்படுத்த வேண்டுமென முது நிலை உளவியல் படித்து, பின் ஆலோசக ராகவும் பயிற்சியாளராகவும் அதற்கென உள்ள படிப்புகளை சில ஆண்டுகள் படித்து முடித்தேன். இப்போது ஆறு ஆண்டுகளாக இளைஞர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்குவது மற்றும் கல்வி நிலையங்கள் பெரும் தொழில் நிறுவனங்களில் பயிற்சி வகுப்புகள் எடுப்பது என்று என் பணியை சமூகத்திற்கு பயனுள்ள வகையில் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆலோசகராக உங்கள் பணி எப்படிப்பட்டது?

இன்றைய இளம் தலைமுறையினர் யதார்த்தத்திலிருந்து சற்றே விலகி நிற்கிறார்கள். பதின்பருவவயதின் சிக்கல்கள் அவர்களுக்கு மனதளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன. பெற்றோர் ஆலோசனைகளால் முற்றிலும் அவர்களை நெறிப்படுத்த முடிவதில்லை. அந்த நிலையில் என்னிடம் ஆலோசனை பெற வருகிறார்கள். அவர்கள் வழியிலேயே போய் அவர்களுக்கு யதார்த்தத்தைப் புரிய வைப்பதோடு கல்வியின் அவசியம், அவர்களின் ஆர்வம்,
திறன் எதிலே மிகுதியாக இருக்கிறது என்பதையும் அவர்களுக்கே உணர்த்தி நெறிப்படுத்துகிறோம். என்ன படிக்கலாம் என்பதில் குழப்பத்தோடு வரும் மாணவர்களுக்கும் வழிகாட்டுகிறேன்.

முக்கியமாக, திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை, வாழ்க்கை என்பது என்ன, புரிந்து கொள்ளலும், விட்டுக்கொடுத்தலும் எப்படி மண வாழ்க்கையில் வெற்றியைத் தரும் என்பனவற்றை உளவியல் பூர்வமாக எடுத்துச் சொல்லி அவர்கள் மனதை திருமண வாழ்வுக்குத் தயார்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

குறிப்பாக பெண்களுக்கே உள்ள உறவுச் சிக்கல்களுக்குத் தீர்வு நாடி வருகிறார்கள். அவர்களுக்கு மனிதர்களோடான உறவினை எப்படி செம்மையாக அமைத்துக் கொள்வது என்பதற்கும் ஆலோசனைகள் வழங்குகிறேன்.

எப்படி பயிற்சி வகுப்புகளை வடிவமைக்கிறீர்கள்?

மூன்று பிரிவுகளில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறேன். பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகுப்புகள். நாம் படிக்கும் அறிவியலை எப்படி வாழ்க்கையில் பொருத்திப் பார்த்துக் கொள்வது என்ற அடிப்படையில் வடிவமைக்கிறேன். கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாடு, பணியிடத்தினைத் தேர்வு செய்து அதிலே ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளை அளிக்கிறேன். "கடின உழைப்பு வீணாவதில்லை' என்ற முறையில் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்களுக்கு அவர்கள் எப்படி சிற்பிகளை போல ஒரு மாணவனின் வாழ்க்கையை ஒழுக்கத்தை வடிவமைத்து நல்ல மனிதராக உருவாக்குகிறார்கள் என்பதை உணர்த்தி அவர்கள் தங்களை உதாரணமாக முன்னிறுத்தி வாழ்ந்து காட்டுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பெரு நிறுவனங்களில் வேலை செய்வோர் பணியிடத்தில் தங்களை எப்படி மேன்மைப் படுத்திக்கொள்வது, மன அழுத்தமின்றி அவர்கள் தங்கள் பணியை மேற்கொள்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பெண்களுக்கான உங்கள் பணிகள் பற்றி...

என் முதன்மைப் பணி, பெண் குழந்தைகளுக்கு பதின்பருவத்தில் ஏற்படும் பயம் குழப்பம் இவற்றை நீக்குவதாகும். நடுத்தர வயதுப் பெண்கள் பணியிட அழுத்தம், குடும்பம், உடல்நிலை மாற்றங்கள் என அனைத்தையும் ஒருங்கே கையாள்வதற்கான பயிற்சிகள் தருவதில் எனக்கு மனநிறைவு. கஷ்டம் என்பது இருந்து கொண்டே தான் இருக்கும்; அதைத் தாண்டி நாம் நினைத்ததை சாதிப்பதற்கான மன உறுதியைத் தருவது, அதற்காக, நேர்மறை சிந்தனையோடு இருப்பது, நம்மைச் சுற்றிலும் நேர்மறையான மனிதர்களை, சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகள் தருகிறேன்.

உங்கள் பயிற்சி வகுப்பு அனுபவங்கள் பற்றி..

மகரிஷி வித்யா மந்திர் போன்ற பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறேன். சென்னை பல்கலைக் கழகத்தில் முதன்முதலில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றினேன். சென்னை பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராக மேலாண்மை மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறேன். தமிழக அரசின் அண்ணா மேலாண்மை கழகம், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கான வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 200 தலைமை ஆசிரியர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

சில மாணவர்கள் தங்கள் திறமையைப் புரிந்து கொண்டு நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்கப் போயிருப்பதை வந்து சொல்லும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எப்படி நேர்காணலை எதிர்கொள்வது, குழு உரையாடல்களில் நம்மை நம் கருத்துக்களை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்வது என்பது போன்ற வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளை செயல்முறையில் சொல்லிக் கொடுக்கிறேன்.

உங்கள் கனவுகள் நனவாகக் காரணம் எது? என்ன எதிர்காலத் திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

என்னுடைய பாட்டி தான் எனக்கு ஆலோசகர் என்று சொல்லுவேன். "ஆகக் கூடியதை பார்' என்று அவர் சொல்லித் தந்தது தான் என்னுடைய தாரக மந்திரம். என் குடும்பம் புரிதலோடு எனக்கு துணை நிற்கிறது. இந்த பயிற்சி வகுப்புகளை இன்னும் பெரிய அளவில் ஒரு நிறுவனமாகச் செய்ய வேண்டும்.

ஆலோசகராக இன்றைய பெண்களுக்கு உங்கள் செய்தி...

அச்சம் தவிருங்கள். நம்முடைய பயம் தான் நம் பலவீனம். பணியிடத்தில் "இது போதும்' என்று ஒதுங்காதீர்கள். பதற்றம் காட்டாமல் இருப்பது நம்மை வலிமையாக்கும். முழுமையாக ஆற்றலை வெளிப்படுத்துங்கள். எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். அதே நேரத்தில் குடும்பத்தில் விட்டுக்கொடுப்பது வெற்றிக்கான வழி என்பதை நினைவில் கொள்ள மறக்காதீர்கள். குடும்பத்தில் சிறு விஷயங்களில் சண்டைகளில் கவனத்தை செலுத்தாதீர்கள். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாய் எதையும் உற்று நோக்கப்பழகினால் திடமான முடிவுகளையும் எளிதாக எடுக்கமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT