தமிழ்மொழி கொடி போல வளர்ந்து உலகம் முழுவதும் படர்ந்துள்ளது. அதற்கு புலம்பெயர் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்துவருகிறார்கள். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தாய்மொழியாம் தமிழை குழந்தைகளுக்கு கற்றுத்தருவதில் அக்கறையாக இருக்கிறார்கள்.
திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்ட நீதிநெறி சாற்றும் அறநூல்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். இதன்விளைவாக, தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் சார்ந்த தகவல்களை அறிந்துகொள்வதிலும், புரிந்துகொள்வதிலும் இளம் தமிழர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்ச்சமூகத்தின் அடிவேரைத் தேடி தமிழகத்திற்கு ஓடிவருகிறார்கள். தமிழர்களின் மொழியும், வாழ்வும் இளம் தலைமுறை தமிழர்களை வெகுவாக ஈர்த்துவிடுகின்றன.
அதற்கு உதாரணம் அமெரிக்கவாழ் தமிழச்சியான சந்தியா சாரி. ஆண்டுதோறும் சென்னைக்கு வரும் சந்தியா சாரி, தமிழகத்தை சுற்றி பார்த்து அதன் பண்பாட்டு விழுமியங்களை கண்டு வியந்து போயிருக்கிறார். அதை பாடல்களாக எழுதி, இசையாக கோர்த்து, வலையோளியில்(யூடியூப்) இசைவார்ப்பாக வெளியிட்டிருக்கிறார். அதன் பெயர்...மை ரூட்ஸ் (எனது வேர்கள்). தமிழ் உள்ளிட்ட தெற்காசியாவின் கலாசாரத்தை கொண்டாடும் இசைத்தட்டாக இதுவெளியாகியுள்ளது.
வேர்களைத் தேடும் இசைப்பயணத்தை விவரிக்கிறார் சந்தியா சாரி.
"அம்மா மதுரை, அப்பா சென்னை. இசை மீது தீராத காதல் கொண்ட குடும்பம். 6-7 வயதிருக்கும்போதே கர்நாடக இசையை கற்க தொடங்கிவிட்டேன். அதன்பிறகு ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை, கூட்டிசை ஆகியவற்றில் பயிற்சி பெற்றேன்.
இதுதவிர, தமிழ், ஹிந்தி, ஆங்கிலப் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் இயல்பாகவே இசை மீது நாட்டம் ஏற்பட்டது. கல்லூரி காலத்தில் பாடல் வகைகளை கோர்த்து பாடி பலரின் பாராட்டை பெற்றிருந்தேன். இந்தியா வரும்போதெல்லாம் 2-3 மாதங்கள் தங்கியிருப்பேன். இசை சார்ந்தவர்களை சந்திப்பேன். இசை குறித்து பேசுவேன்.
இதனால் இசை வட்டம் என்னை சுற்றி அமைந்துவிட்டது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரித்த "99 சாங்ஸ்' என்ற ஹிந்திதிரைப்படத்தை பிரபலப்படுத்துவதற்கான அதன் பாடல்களை பாடும் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் ஆண் பாடியப் பாடலை பெண் குரலில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு பாடலைப் பாடி ஒலிப்பேழையாக ஏ.ஆர்.ரகுமானுக்கு அனுப்பிவைத்திருந்தேன். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அந்தபோட்டியில் 10 வெற்றியாளர்களில் ஒருவராக நான் தேர்வானேன்.
அந்த போட்டியில் வென்றதால் ஏ.ஆர்.ரகுமான் என்னோடு தொலைபேசியில் உரையாடி வாழ்த்து தெரிவித்தார். இது எனக்குள் இருந்த இசை ஆர்வத்தை பன்
மடங்கு அதிகப்படுத்தியது. படிப்பை முடித்து வேலைக்கு சேர்ந்தபிறகும் இசை மீதான எனது காதல் குறையவே இல்லை.
அதனால் தனியாக இசைக்கோர்வையில் ஈடுபட ஆர்வம் காட்டினேன். அந்த இசை தனித்தன்மை வாய்ந்ததாகவும், எனது தமிழ் பண்பாட்டு வேர்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து, பெண்மையை போற்றும் "எனதுவேர்கள்" என்ற இசைக்கோர்வையை வெளியிட்டுள்ளேன்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயர்ந்த பண்பாட்டைவெளிப்படுத்தும்
தமிழர் வாழ்வியலை தெற்காசியாவின் அடையாளம் என்னு சொல்லலாம். தமிழர்களின் பண்பாட்டை அடிநாதமாக வைத்துக்கொண்டு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், காஷ்மீர், பஞ்சாப் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களின் ஆடைகள், அலங்காரங்களை பாடலில் கொண்டு வந்திருக்கிறோம். வேற்றுமையில் ஓர்மை என்பதை 14 பெண்களை கொண்டு பாடல்களை காட்சிப்படுத்தி இருக்கிறோம். சில நேரங்களில் திரைப்படங்களில் தமிழ்ப்பெண்களை சித்திரிக்க வெள்ளைநிறபெண்களை பயன்படுத்துகிறார்கள். கசவு அணியும் பெண்ணை தமிழச்சி என்று எப்படி சொல்லமுடியும். கசவு அணிந்தால் அது மலையாளப்பெண் தானே.
அதேபோல, காஞ்சிபுரம் சேலை அணிந்தால் அவள் தமிழ்ப்பெண். எனவே, பன்முகப்பண்பாட்டை உடையில் காட்சிப்படுத்தியிருக்கிறோம். குச்சிப்புடி, கதக், பரதநாட்டியம், ஒடிசி ஆகிய நாட்டிய அசைவுகளை ஒரே ஒரு பாட்டில்கொண்டு வந்திருக்கிறோம்.
பெண்களை போற்றுவதில் தமிழர்கள் முன்னோடிகளாக இருந்துவந்துள்ளனர். பெண்களின் தீரம், வீரம், அறம் ஆகிய இயல்புகளையும் பாட்டில்கொண்டு வந்திருக்கிறோம். "எனதுவேர்கள்' பாடல், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி கலவையாக அமைத்திருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்று, நமக்குள் தேவையில்லை வேற்றுமை என்பதை எனது பாடல் உணர்த்துகிறது.
பாடலின் தமிழ், ஆங்கில வரிகளை நானும், ஹிந்தி வரிகளை நிர்மிகாவும் எழுதியிருக்கிறோம். இந்த பாடல் வெளியாகி, உலக அளவில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. மண்வாசனையுடன் கூடிய தமிழ் வேர் "எனதுவேர்கள்" இசைக்கோர்ப்பு. அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்துவந்தாலும் எனது இதயம் மட்டும் தமிழர் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டில் நனைந்து நிற்கிறது. இதை கொண்டாடிமகிழ வேண்டுமென்பதற்காகவே எனதுஇசைப்பயணம் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு இசைத்தளங்களில் பணியாற்ற முனைந்திருக்கிறேன். எனது இசைப்பயணத்தில் ஏ.ஆர்.ரகுமான், யுவன்சங்கர் ராஜா ஆகியோரின் இசையில் பாட வேண்டும். அது ஒருநாள் நனவாகும் என்று நம்பிக்கை இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை அடைகிறேன்'' என்றார் சந்தியா சாரி.