மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 56: கரிக்காத கண்ணீர்!

2nd Dec 2021 07:10 PM | சாந்தாகுமாரி சிவகடாட்சகம்

ADVERTISEMENT

 

அபிஷேக் படேல் என்பவர் ஐந்தாவது முறையாக, அம்மாநிலத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரை வாழ்த்துவதற்காக அவரது கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கூடியிருந்தனர்.

தன் கட்சி வென்ற செய்தியைக் கேட்டவுடனே, வழக்கம்போல அபிஷேக் படேல் கிளம்பிச் சென்ற இடம் அவருடைய ஆசிரியரின் வீடாகத்தான் இருந்தது.

அபிஷேக், மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு, படிக்கப் போன சமயம் அது. அந்த வகுப்பின் பிரதான ஆசிரியராக வந்தவர் மாஸ்டர் மகாதேவ். சிறந்த அறிவாளி, பொறுமையின் சிகரம். எப்பொழுதும் புன்சிரிப்போடு, கனிவான சொற்களையே பேசுவார்.

ADVERTISEMENT

ஆங்கிலம், மற்றும் சரித்திர வகுப்புகளை மகாதேவ் நடத்துவார். அதுமட்டும் அல்ல, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் மீது அப்படி ஒரு ஞானம். மகாதேவின் அம்மா ஒரு தமிழ் பெண், அப்பா மராட்டியர். 

அந்தக் காலத்திலேயே காதல் திருமணம்.

சென்னையில் பிறந்து தமிழைப் பேசி, படித்து, சுவாசித்த ரமணி வங்கியில் வேலைக்குச் சேர்ந்த பொழுது, பிராஞ்ச் மேனேஜராக வலம் வந்த மனோஜ் மீது காதல் வந்துவிட்டது.
பிறகு என்ன? திருமணம்தான். மகாதேவ் பிறந்த பின் மும்பைக்கு வந்து பிறகு அங்கேயே குடியேறிவிட்டார்கள். 
தன் மகன் மகாதேவுக்கு, ரமணி தன் தாய் மொழியான தமிழை வீட்டிலேயே சொல்லிக் கொடுத்தாள். ரமணி திருக்குறளைக் கரைத்துக் குடித்தவள் என்று சொல்லலாம். தன் மகனையும் அதில் பாண்டித்தியம் அடைய வைத்தாள். திருவள்ளுவர் சொல்லிச் சென்றிருக்கும், தத்துவங்களை, நற்பண்புகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், இந்தப் புவியிலேயே சொர்க்கத்தைக் காணலாம் என்று வலியுறுத்திச் சொல்லுவாள்.
மகாதேவ் ஆசிரியர் ஆன பிறகு, வகுப்பில் ஆங்கிலம், சரித்திரத்தைப் பாடமாக எடுக்கும்பொழுது பல குறள்களை மேற்கோள் காட்டிப் பேசுவார்.
அவருடைய வகுப்பு என்றாலே மாணவர்கள் உற்சாகம் அடைவர், சின்னச் சின்னக் கதைகள், மனிதனுடைய வாழ்க்கை செம்மையாக அமைவதற்கான மார்க்கங்களைச் சொல்லிக் கொடுப்பார்.
அபிஷேக் படேலின் கார், அவருடைய ஆசான் இருக்கும் குடியிருப்பை அடைந்தது. கார் நுழைய முடியாத குறுக்குச் சந்து அது. 
அதனால் அபிஷேக் படேல் அதிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தார்.
முன்கூட்டியே முதலமைச்சர் வருகையை அறிந்தபடியினால். காவல் துறையினர் பாதுகாப்பு வளையத்தை அமைத்திருந்தனர்.
ஆசிரியர் வீட்டை  அடைந்தார். சுற்றி நின்ற கூட்டம் வாழ்த்தொலியை எழுப்பிய வண்ணம் இருந்தது.

பழுத்த பழமாக, எண்பத்து எட்டு வயது மகாதேவ், வாயிற்படி வரை வந்து தன் மாணவனை வரவேற்றார்.

ஆசானின் பாதம் பணிந்தார் அபிஷேக் படேல். கையோடு எடுத்துச் சென்றிருந்த மாலையை அணிவித்தார். பழத் தட்டையும் தொடச் செய்து அவரே சுமந்து சென்று டேபிள் மீது வைத்தார்.
மகாதேவ், உட்கார்ந்த உடன் எதிரே இருந்த இருக்கையில் அபிஷேக் படேல் அமர்ந்தார்.
""அபிஷேக்'' என்று அன்பு பொங்க மகாதேவ் அழைத்தார். ""எதற்கப்பா இவ்வளவு சிரமப்பட்டு இங்கே வந்தே? என் ஆசீர்வாதம் உனக்கு எப்பொழுதுமே உண்டு''.
""இந்த டீயையும், பிஸ்கெட்டுகளையும் சாப்பிடு'' என்று உபசரித்தார்.
""ஐயா, எதற்கு இவ்வளவு சிரமப்படறீங்க. நான் எவ்வளவோ சொல்லியும் நீங்க செவி சாய்க்க மாட்டேங்கறீங்க. என்னோட வந்து தங்கிடுங்க என்று எவ்வளவு முறை அழைத்துவிட்டேன். இந்தச் சின்ன இடத்திலே நீங்களே சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு கஷ்டப்பட வேண்டுமா சொல்லுங்க''.
""எனக்கு ஒரு சிரமமும் இல்லை அபிஷேக். எனக்குக் குழந்தைகள் இல்லாத குறையைத் தீர்ப்பதற்காகத்தான் என்கிட்ட பாடம் படிச்ச ஆயிரக்கணக்கான பிள்ளைகள் இருக்கறீங்களே. அதிலும் நீ என்னிடம் காட்டற மரியாதைக்கும், அன்புக்கும் நான் என்ன கைமாறு செய்துவிட முடியும்''.
""ஐயா, பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லாதீங்க. இந்த என்னுடைய வாழ்க்கை நல்வழியிலே போறதுக்கு முக்கிய காரணகர்த்தாவே நீங்கதானே''.
""வெறும் பாடங்களை மட்டுமா நடத்தினீங்க, கூடவே திருக்குறளையும் மேற்கோள் காட்டி, திருவள்ளுவரின் போதனைகளை மாணவர்கள் மனதினிலே பதிச்சீங்களே''.
""இன்றைக்கு என் ஆட்சியை மக்கள் கொண்டாடறாங்க, தொடர்ந்து ஐந்து முறைகளாக என்னை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கறாங்க என்றால் நீதி தவறாது நான் ஆட்சி செய்வதினால்தான் என்கிறார்கள். அந்த நீதிகளை எனக்கு உபதேசித்தவரே நீங்கள் தானே.
""கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு - என்ற குறளை சரித்திரப் பாடத்தை நடத்தும் பொழுது சொன்னீர்களே''.
""அபிஷேக், எவ்வளவு அழகாகத் திருக்குறளை, தமிழரல்லாத  நீ சொல்லுகிறாய். கேட்கவே, என் காதுகளில் தேன் வந்து பாயுதே. இதை என் அன்னை ரமணி உயிரோடு இருந்து கேட்டிருந்தால் புல்லரித்துப் போயிருப்பார்''.
""ஐயா, எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்றைய தினம் நீங்க "அலெக்ஸாண்டர் தி கிரேட்' பற்றிப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தீர்கள். அவனுடைய வெற்றிகள், பராக்கிரமங்கள், ஒரு சக்கரவர்த்தியாக உலகின் பெரும் பகுதிகளை ஆண்டது என்பதைப் பற்றியெல்லாம் கூறிவிட்டு அவனுடைய கடைசிக் காலத்தில், முப்பத்தி இரண்டாவது வயதிலேயே விஷக் காய்ச்சலினால் தன் முடிவு நெருங்கி விட்டதை அறிந்து பேசிய வார்த்தைகளைக் கூறினீர்கள்.
தன்னுடைய மந்திரிகளையும், உயர் அதிகாரிகளையும் அழைத்து மூச்சு பிரிவதற்கு முன் அலெக்ஸாண்டர் மூன்று கோரிக்கைகளை முன் வைத்தான்.
ஒன்றாவது, உலகில் எந்த வைத்தியனாலும் ஒரு வியாதியை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆகையினால் உடலைப் பேணிக் காப்பாற்ற வேண்டும் என்பதை என் மூலம் உலகம் புரிந்துக் கொள்ளச் செய்ய வேண்டும். போர்க்களங்கள், நிலப்பரப்பை விஸ்தாரப்படுத்துதல், கஜானாவை நிரப்புவதிலேயே கவனத்தைச் செலுத்திய நான் உடலைப் பராமரிக்க மறந்தேன்.
இரண்டாவது, என்னுடைய சவப்பெட்டியை சுமந்துக் கொண்டு கல்லறையை நோக்கிச் செல்லும் பொழுது வழிகள் எங்கும், இருபுறமும் வைடூரியக் கற்களையும், மாணிக்கம், வைரங்களையும் இறைத்துக் கொண்டே செல்லுங்கள்.
இதைக் காணும் மக்கள் அலெக்ஸாண்டர், இவைகளைத்தான் சேகரித்தான், ஆனால் இவைகளை அவனோடு எடுத்துச் செல்ல முடியவில்லை. பயனற்றவைகளைச் சேகரிக்க வாழ்நாளைத் தொலைத்தான், ஆனால் நல்லாட்சி தர மறந்தான், மக்களைக் கொன்று குவித்தான், குடிமக்களின் மனதில் அன்பை விதைத்து அதில் குடியிருக்க மறந்தான்; இனிமேலாவது மக்களை ஆளவரும் மன்னர்கள் இதைப் புரிந்து நடந்து கொள்ளட்டும். 
மூன்றாவதாக, என் சவப்பெட்டியில் என்னைக் கிடத்தும்பொழுது, என் உள்ளங்கைகள் வானத்தை நோக்கி இருக்குமாறு வைத்து, பிறகு சுமந்து செல்லுங்கள். இது எதற்குத் தெரியுமா? அலெக்ஸாண்டர் தி கிரேட் இந்த உலகத்தில் பிறக்கும் பொழுதும் வெறும் கையோடு வந்தான், மண்ணுலகை விட்டுச் செல்லும் பொழுதும் வெறும் கையோடுதான் செல்கிறான் என்பதை உலகு அறியட்டும். ஞானம் பிறக்கட்டும். எது உண்மை? எது பொய்? என்று உணரட்டும் என்றான் என்று சொல்லிவிட்டு நீங்கள் கூறிய குறள்தான் கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு இதோடு நீங்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. மாணவர்களே நீங்கள் தான் எதிர்கால இந்தியாவின் வாரிசுகள். 
உங்கள் இளம் தோள்களை நம்பித்தான் பாரதமாதா ஜீவித்து இருக்கிறாள். உங்களில் யாரேனும் பிரதம மந்திரியாகவோ, முதலமைச்சர்களாகவோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாகவோ வந்து இந்த நாட்டை ஆண்டு மக்களை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்லலாம். அப்பொழுது இந்தக் குறளை மறவாதீர்கள்.
தவறாக நாட்டை  ஆள்பவன் தன் புகழையும், அன்பைப் பொழியும்  மக்களையும் இழந்து விடுவான்'' என்றீர்கள்.
மாணவர்களாகிய எங்கள் மனதில், உங்கள் குறள்களும், அதன் விளக்கங்களும் பசுமரத்தாணி போல பதிந்து விட்டன.
நான் கனவிலும் நினைக்காத முதலமைச்சர் பதவி எனக்கு வாய்த்தபொழுது, திருக்குறளும், அதைப் போதித்த நீங்களும் முன் நிற்கிறீர்கள், என்னை வழி நடத்துகிறீர்கள்'' என்று பேசி நிறுத்திய தன் அருமை மாணவனை, கட்டித் தழுவிக் கொண்டு கண்ணீர் வடிக்கிறார் மகாதேவ்.
ஆமாம், இது ஆனந்தக் கண்ணீர், அதனால்தான் அதில் ஒரு துளி 
அவரின் உதடுகளில் பட்டபொழுது அது கரிக்கவில்லை இனிக்கிறது!

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

(குறள்  எண்: 554) 

பொருள் :

மேல் வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்து விடுவான்.

(தொடரும்)
 

Tags : magaliarmani Tears that do not burn!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT