மகளிர்மணி

தயக்கத்தை தகர்த்தால் வெற்றி நிச்சயம்! 

2nd Dec 2021 07:14 PM | - ஸ்ரீ

ADVERTISEMENT


உலக அளவில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி "மாஸ்டர் செஃப்'. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் மொழியில் சன் தொலைக்காட்சியில் "மாஸ்டர் செஃப்' ஒளிபரப்பாகி வந்தது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி, சமீபத்தில் முடிவடைந்தது. ஹரிஷ் ராவ், ஆர்த்தி சம்பத், கெளசிக் எஸ் ஆகியோர் நடுவர்களாக இருக்க மொத்தம் 24 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த ரியாலிட்டி ஷோவின் இறுதிச் சுற்றில், திருச்சியைச் சேர்ந்த தேவகி வெற்றி பெற்று "மாஸ்டர் செஃப்' பட்டத்தை வென்றுள்ளார். தேவகியிடம் பேசினோம்:

""எனக்கு பொதுவாகவே விதவிதமாக சமைப்பதில் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் ஒருகட்டத்தில் கேக் செய்வதில் திரும்பியது. அதனால் கேக் செய்ய முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக. இரண்டாண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து கேக் செய்ய பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதன்பின்னர், திருச்சி திரும்பியதும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும், ஆன் லைன் மூலம் ஆர்டர் தருபவர்களுக்கும் கேக் செய்து கொடுத்து வந்தேன்.

அந்த சமயத்தில்தான் சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கான அறிவிப்பை பார்த்தேன். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அதில் கலந்து கொள்ளும்படி கூறினார்கள். சரி முயற்சி செய்து பார்ப்போமே என்று கலந்து கொண்டேன்.

ADVERTISEMENT

இந்த சமையல் நிகழ்ச்சி, ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான நடுவர்கள், போட்டியாளர்களின் புதிது புதிதான யோசனை என கடினமான சவால்கள் நிறைந்திருந்தன. இத்தனை சவால்களுக்கு இடையில் நான் வெற்றி பெறுவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. விஜய் சேதுபதி சாருடன் இவ்வளவு நாள் டிரவல் பண்ணுவேன் என்று எல்லாம் நினைக்கவில்லை. அதுபோன்று நடுவர்கள் அத்தனை பேரிடமும் அவ்வளவு அனுபவம் இருந்தது. அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இவையெல்லாம் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத வாழ்நாள் அனுபவம் என்று தான் சொல்வேன்.

மாஸ்டர் செஃப்பாக அறிவித்த அந்த நொடிகளை என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள். பொதுவாகவே நான் கலந்து கொண்ட அனைத்து எபிசோடிலுமே என்னால் முடிந்தளவு பெஸ்ட்டாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால், ஒவ்வொரு முறை சமைக்கும்போதும் பார்த்து பார்த்து சமைத்தேன். அதற்கான அங்கீகாரம்தான் இந்த வெற்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரையிறுதி போட்டியில் ஜெயித்தபோதே அளவிட முடியாத சந்தோஷம். "மாஸ்டர் செஃப்'னு அறிவித்தபோது எனக்கு அப்படியே மேல பறப்பது போன்று இருந்தது.

பொதுவாக எந்தவொரு விஷயமும் என்னால் முடியுமா? நான் ஏன் இதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்பவுமே இருக்கும். அதனால் எதையும் முயற்சித்ததே கிடையாது. அதையெல்லாம் உடைத்துக் கொண்டு இப்போது வெளியே வந்து வெற்றி பெற்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது, இதுவரை நான் எவ்வளவு வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. அதுபோன்று இந்த வெற்றி, திருச்சியில் எங்கோ ஓர் மூலையில் இருந்த என்னை உலகம் முழுவதுமுள்ள தமிழ் நேயர்களிடம் பிரபலமாக்கியுள்ளது. எனவே, யாராக இருந்தாலும் தயக்கத்தை தகர்த்தெறிந்து வெளியே வந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்'' என்றார்.

Tags : magaliarmani success guaranteed
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT