மகளிர்மணி

வாயுத் தொல்லை என்ன செய்யலாம்? 

1st Dec 2021 12:00 AM | ப. வண்டார்குழலி - இராஜசேகர் அவ்வையார் அரசு மகளிர்

ADVERTISEMENT


மனிதனின் வாய்க்குக் கட்டுப்பட்டதுதான் வயிறு. வயிற்றுக்குக் கட்டுப்பட்டதுதான் வாழ்க்கை. செரிமான மண்டலம் கெட்டுப்போய் இருக்கின்றது என்றுணர்த்தும் ஆரம்ப அறிகுறிதான் பெருமூச்சு எனப்படும் காற்றுப்பிரிதல். கண்ட உணவுகளைக், கண்ட நேரத்தில், கண்டபடி உண்பதால், அஜீரணக் கோளாறு ஏற்பட்டு,   வெளியேறும் இந்த வாயு, அண்டவாயு, அபானவாயு, மந்தவாயு, பாரிசவாயு, பித்தவாயு, எரிகொம்புவாயு எனப் பல வகைப்படும்.

இந்த வாயுவில் நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன்டை ஆக்ûஸடு, ஆக்சிஜன் சில நேரங்களில் மீத்தேன் போன்றவை கலந்திருக்கும். பொதுவாகவே செரிமான மண்டலத்தில் 200 மி.லி அளவிற்கு நிறைந்திருக்கும் இந்த வாயுவானது,

வாய்வழியாக உள்ளிழுக்கப்படுவதையும், உணவு செரிமானத்தின்போதும், மலச்சிக்கலின்போதும் அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்திலும், நுரையீரல் வழியாகவும், மலக்குடல் வழியாகவும் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுகிறது. 

அதிகபட்சமாக ஒரு மனிதன் 700 மி.லி அளவிற்கு வாயுவை வெளியேற்றுகிறான். அதிக அழுத்தத்துடன் வயிற்றில் இருக்கும் வாயு மேல்நோக்கி வாய் வழியாக ஏப்பமாகவும், கீழ்நோக்கி மலக்குடல் வழியாக அபானவாயுவாகவும் வெளியேற்றப்படுகிறது. 

ADVERTISEMENT

தொடர்ச்சியான செரிமானக் கோளாறினால், குடலில் அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, மேல்நோக்கி எழும்பும் இந்த வாயுதான் சில நேரங்களில், உத்தரவிதானத்தை அழுத்தி,  நெஞ்சு இறுக்கத்தை ஏற்படுத்தி, கை கால் படபடப்பு, அதிகமாக வியர்த்தல், இதயத்தின் அருகில் குத்துதல் போன்ற அறிகுறிகளையும் உண்டாக்கி, ஏறக்குறைய மாரடைப்பின் அறிகுறியுடன்  ஒத்துபோகும் அளவிற்கு பயமுறுத்தி, தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. 

அதே வேளை, அனைத்து நேரங்களிலும் உண்டாகும் இந்த வாயுப் பிடிப்பை செரிமான மண்டல பிரச்னையாகவும் நினைத்து, வீட்டு வைத்தியம், மருந்தகங்களில் செரிமானத்திற்கு மாத்திரைகள் வாங்கிப் போட்டுக்கொள்வது போன்ற தவறான செயல்களை செய்யக்கூடாது. உயர் ரத்த அழுத்தம், பிற இதய நோய்கள், நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடனடி மருத்துவ சிகிச்சையை நாடுவதே சிறந்தது.

தொடர்ச்சியான மலச்சிக்கல் நிரந்தரமான வாயுத் தொல்லையை ஏற்படுத்திவிடும் என்பதும் உண்மைதான். வாயுத்தொல்லை ஏற்படும்போதெல்லாம், மாத்திரை மருந்துகளை உட்கொண்டுவிட்டால் தற்காலிக நிம்மதி மட்டுமே கிடைக்கும். நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் உணவு முறையில் மாற்றம் கட்டாயம் வேண்டும்.

அபான வாயு அடிக்கடி வெளியேறும் பிரச்னை உள்ளவர்கள், சில நாட்களுக்குப் பருப்பு உணவுகளை தவிர்த்துப் பார்க்கலாம். பருப்பு உணவுகள், மிக எளிதாக வாயுத் தொல்லையைக் கொடுத்து விடும். காரணம், இதில்  இருக்கும் ஆலிகோசேக்கரைட்ஸ் என்னும் கார்போஹைட்ரேட்ஸ் ஸின் பகுப்புப் பொருட்களை உடைத்துப் பிரிக்கும் ஆல்ஃபா காலக்சிடேஸ் என்னும் பொருள் மனித குடலில் இல்லை என்பதுதான்.

இதனால், இந்த ஆலிகோசேக்கரைட்ஸ் நேரடியாக பெருங்குடலில் நுழைந்து, பாக்டீரியாக்களால் சிதைக்கப்பட்டு, அதிக அளவு ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்து விடுகின்றன. 

இந்த வாயுக்கள் தான், அபான வாயுவாக வெளியேறுவது மட்டுமல்லாமல், உடலிலும் பரவி, கை, கால், மூட்டுகளில் வீக்கத்தையும், பிடிப்பையும், வலியையும் கொடுக்கின்றன.

 காலையில் பல்துலக்கியவுடன் வெதுவெதுப்பான நீர், ஓமம் சேர்த்த நீர், இஞ்சி அல்லது சீரகம் சேர்த்த நீர் அருந்தலாம். சற்றே வாயை மூடியதுபோல் உணவை மென்று விழுங்குவதும், மெதுவாக, பொறுமையாக உணவை உட்கொள்ளுவதும், அதிகப்படியான வெளிக்காற்று தொண்டைக்குள் செல்வதைத் தடுக்கும். ஏப்பம் அதிகம் விடுபவர்கள்  இவ்வாறு செய்யலாம்.

அதிக துர்நாற்றத்துடன் அபான வாயு வெளியேறுகிறது என்றால், நொதித்தல் நிகழ்வு பெருகி, கார்பன்டை ஆக்ûஸடு, ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்களுடன், அதிகப்படியான பாக்டீரியாக்கள் உற்பத்தியடைந்து மலக்குடலில் தேங்கி குடலின் செயல்பாட்டை முடக்குகிறது என்பதாகும். எனவே, சர்க்கரை, அதிகமான மாவுச்சத்து உள்ள கிழங்குகள், தானியவகைகள், மதுபானம், பால் போன்றவற்றை தவிர்க்கவேண்டும்.

ரொட்டி, பிற பேக்கரி உணவுகள், உருளை, வாழைக்காய், கருணை போன்ற உணவுப்பொருட்கள் சராசரியாக எடுத்துக்கொள்ளவேண்டிய 50 கிராம் வரை முழுவதும் செரிக்கப்பட்டுவிடும். ஆனால், அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்போதுதான், எஞ்சிய, செரிமானமாகாத கழிவுகள் அதிக வாயுவை உருவாக்கிவிடுகின்றன. 

பருப்புகளை வேகவைத்தல், முளை கட்டுதல், புளிக்க வைத்தல் போன்ற செயல்களால் வாயுவை ஏற்படுத்தும் பொருட்களை குறைக்க முடிந்தாலும் கூட, சிலருக்கு ஒவ்வாமை மற்றும் செரிமானக் கோளாறை ஏற்படுத்துவதுண்டு. நிலையில், நிறுத்திக் கொள்வதுதான் நல்லது.

அதிகம் மாவுப்பொருட்கள் இல்லாத, அதேசமயம், நார்ச்சத்து நிறைந்த அவரை, பீன்ஸ், கொத்தவரை, பாகல், பீர்க்கன், புடலை, சுண்டைக்காய், வாழைத்தண்டு,  போன்ற காய்களை 100 கிராம் அளவிற்கு தினமும் 
உணவில் சேர்க்கவேண்டும்.

வாயுத்தொல்லைக்கும், மலச்சிக்கலுக்கும் கீரை ஒரு வரப்பிரசாதம். அதிலும், முடக்கத்தான், பிரண்டை, தூதுவேளை, பொன்னாங்கன்னி, வாதநாராயணன், வெந்தயக்கீரை, அகத்தி போன்றவற்றை துவட்டலாகவோ, பொரியலாகவோ, ரசமாகவோ உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

தினமும் மூன்று வேளைகள் பழம் சேர்த்துக் கொள்ளவேண்டும். வெவ்வேறு பழமாக இருத்தல் நன்று. கொய்யா, மாதுளை, திராட்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய், பப்பாளி, வாழைப்பழம் போன்றவை நச்சுத்தேக்கத்தை நீக்கிக் குடலை சுத்தப்படுத்தும்.

கோதுமை, கேழ்வரகு நீர்த்த கஞ்சி, வெங்காயம், மிளகு, சீரகம், துருவிய காய்கள் சேர்த்த சிறுதானிய கஞ்சி, ரசம், சர்க்கரை சேர்க்காத பழச்சாறு, அதிகம் புளிக்காத நீர்த்த மோர், இளநீர், போன்ற உணவுகளை மாற்றி மாற்றி தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு உண்ணலாம்.

வாயுத்தொல்லை முழுவதும் நீங்கும்வரை, வெளியுணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, பழைய உணவுகள், புளித்த தயிர், புளித்த கூழ், ஊறுகாய், எண்ணெய் உணவுகள், கொழுப்பு உணவுகள், முட்டை, இறைச்சி உணவுகள் ஆகியவற்றை தவிர்த்தால் முழு நலம்பெறலாம்.

குறைந்தத் தூக்கம், தூக்கமின்மை, அதிகத் தூக்கம், உடல் உழைப்பு இல்லாத நிலை அல்லது அளவிற்கு அதிகமான பணி, அலைச்சல், நீர்ச்சத்து குறைபாடு போன்றவைகளாலும் வாயுத்தொல்லை ஏற்படும் என்பதால், அவற்றையும் சரிசெய்துகொள்ளவது அவசியம்.

நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், தோல் நோய்கள், பிற நோய்களுக்கு மருந்து உட்கொள்ளுபவர்கள், நீடித்த நோய் உள்ளவர்கள், உணவு ஓவ்வாமை உள்ளவர்கள், அவர்களின் உடல் நிலைக்கேற்பவும், குணத்திற்கேற்பவும் மருத்துவரையும் உணவியல் நிபுணரையும் நேரில் கலந்தாலோசித்து உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

Tags : magaliarmani What can gas harassment do?
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT