மகளிர்மணி

இசை: வலம் வரும் பாரதி!

சந்திரமெளலி

காயத்ரி கிரிஷ். நாடறிந்த கர்நாடக இசைக்கலைஞர். கலை மாமணி, இசைப்பேரொளி, எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, எம்.எல்.வி. விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முத்துசுவாமி தீட்சதரின் கிருதிகள் குறித்து ஆய்வு செய்து முனைவர்  பட்டம் பெற்றவர். தற்போது, பாரதியார் நினைவு நூற்றாண்டினைக் கொண்டாடும் வகையில் ராஜ்குமார் பாரதியுடன் இணைந்து, யூடியூப் மூலமாக "வலம் வரும் பாரதி' என்ற தலைப்பில் பாரதி பாடல்களை வழங்கி வருகிறார். இதற்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. "வலம் வரும் பாரதி' பற்றிப் பேசுகிறார் காயத்ரி கிரீஷ்:

பாரதியின் பாடல்கள் மீதான உங்கள் ஈடுபாடு குறித்து?

எனக்கு பள்ளியில் படிக்கும் நாள்களில் இருந்தே பாரதியாரின் பாடல்கள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளிக்கூட  சேர்ந்திசைக் குழுவில் பாரதியாரின் பல பாடல்களைப் பாடி இருக்கிறேன். தமிழிசைச் சங்கம், பாரதியார் சங்கம் போன்ற அமைப்புகள் நடத்திய பாரதியார் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கிறேன். எனது கச்சேரிகளிலும்  பாரதியார் பாடல்களை பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். பாரதியார் பாடல்களைப் பாடியபோது தனி ஆவர்த்தனம் செய்து கைத்தட்டுக்கள் வாங்கி இருக்கிறேன். ஜெயா டிவிக்காக இரண்டரை மணி நேரம் பாரதியாரின் பாடல்கள் மட்டுமே பாடி முழு கச்சேரி செய்த இனிமையான அனுபவமும் உண்டு. கர்நாடக இசை பற்றி தெரியாதவர்கள் கூட பாரதியாரின் பாடல்களை ரசித்துக் கேட்பதை நான் கவனித்திருக்கிறேன். 

"வலம் வரும் பாரதி" ஐடியா எப்படி வந்தது?

கடந்த மார்கழியில் எனது யூடியூப் சேனல் மூலம் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி ஆகியவற்றை பாடினேன். அவற்றுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது என்னை ஊக்கமூட்டியது. பாரதியாரின் பரம்பரையில் வந்தவர் என்ற வகையில் எனக்கு ராஜ்குமார் பாரதி மீது என்றுமே பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, எதேச்சையாக உருவானதுதான் இந்த ஐடியா. மகாகவியின் நினைவு நூற்றாண்டு சமயத்தில் மிகவும் பொருத்தமாகவும் அமைந்துவிட்டது. அவர், பாரதியாரின்  பாடல்கள் உருவான சூழ்நிலை பற்றி பல சுவாரசியமான, பலருக்கும் தெரியாத தகவல்களைச் சொன்னபோது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எனவே, அவர் பாரதியார் பாடல்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள, நான் பாடல்களைப் பாடுவதாக "வலம் வரும் பாரதி" நிகழ்ச்சியை அமைத்துக் கொண்டோம்.

பாடல்கள் எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

பாரதியாரின் பாடல்களில் ஓடி "விளையாடு பாப்பா', "சின்னஞ்சிறு கிளியே', "நல்லதோர் வீணை செய்து"   போன்ற மிகப்பிரபலமான பாடல்கள் பல உண்டு. ஆனால், நாங்கள் பிரபலமானவை, அத்தனை பிரபலம் இல்லாதவை இரண்டு வகைகளிலுமாக முதல் கட்டமாக சுமார் 50 பாடல்களைப் பட்டியல் இட்டுக் கொண்டோம். அவற்றில் இருந்து 20 பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அவற்றில் தேச பக்திப் பாடல்கள், கண்ணன் பாட்டு, சக்தி வழிபாடு, காவடிச் சிந்து, புதிய ஆத்திச்சூடி  போன்றவையும் இடம் பெற்றுள்ளன. முதலில் ராஜ்குமார் பாரதி சுமார் மூன்று நிமிடங்களுக்கு பாடல் பற்றிய தகவல்களையும், அதன் சிறப்புகளையும் பகிர்ந்து கொள்வார். அதன் பின் எனது பாட்டு இடம்பெறும். ஒரு எபிசோடு மொத்தம் சுமார் பத்து நிமிடத்துக்கு வரும். 

விடியோ பதிவு அனுபவம் எப்படி இருக்கிறது?

பாரதியாரின் பாடல்களை ஸ்டுடியோவுக்குள் அமர்ந்து பாட வேண்டாம். பசுமையான, இயற்கையான சூழலில் இருந்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தோம். எனவே, ரெகார்டிங் ஸ்டுடியோவில் பக்கவாத்தியங்களோடு பாடி, ஒலிப்பதிவு செய்து கொண்டோம். அடுத்து,  மெரீனா, செம்மொழிப்பூங்கா, கேளம்பாக்கம் ஏரி, மகாபலிபுரம் என அவுட்டோரிலேயே படம் பிடித்தோம். பாரதியார் எத்தனை உற்சாகத்தோடும் ஈடுபாட்டோடும் அந்தக் காலத்தில் பாடல்களைப் பாடினாரோ, அது மாதிரியே உற்சாகத்தோடும், ஈடுபாட்டோடும் பாரதியை நாங்கள் இப்போது வலம் வரச்  செய்திருக்கிறோம். எங்களுக்கு மிகுந்த திருப்தி. எம்.ஓ.பி. வைஷ்ணவக் கல்லூரியில் எலக்டிரானிக் மீடியா பிரிவில் முதுகலை படித்த என் மகள் விஷ்ருதி கிரீஷ் படப்பிடிப்பிலும், இதர பணிகளிலும் மிகவும் உதவியாக இருக்கிறாள். 

ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது?

எதிர்பாராத அளவுக்கு மிக நல்ல வரவேற்பு. ஒவ்வொரு சனிக்கிழமையும் விடியோவை நாங்கள் பதிவேற்றுகிறோம். அந்த வாரத்துப் பாடலைப் பாராட்டிய கையோடு, அடுத்த சனிக்கிழமைக்காகக் காத்திருக்கிறோம் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். பாடல் ஒலிக்கும்போதே, பாடலின் வரிகளையும் போடுகிறோம்.  அதைக் குறிப்பிட்டு பலர் பாராட்டுகிறார்கள்.  எங்கள் முயற்சிக்குக் கிடைத்துவரும் வரவேற்பு, இதனை சீசன்- 2க்கு எடுத்துச் செல்ல எங்களை உற்சாகப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT