மகளிர்மணி

பூகம்பம் ஏன்? விளக்கும் ஆய்வாளர்!

31st Aug 2021 10:24 PM | - பூர்ணிமா

ADVERTISEMENT

 

வடகிழக்குப் பகுதியில் பிறந்து வளர்ந்த டாக்டர் ஸ்வப்னாமிதா வைத்தீஸ்வரனுக்கு சிறுவயதில் தன்னுடைய தந்தை மற்றும் உறவினர்களுடன் காடுகள் மற்றும் மலைப் பகுதிகளுக்குச் செல்வது மிகவும் பிடிக்கும். குழந்தைப் பருவத்தில் ஆற்றங்கரை ஓரமாக அமர்ந்து எதிரே உள்ள மலைகளையும், பாறைகளையும் பார்த்து ரசிப்பதோடு இவை எப்படி தோன்றின? இந்த ஆற்று நீர் எங்கிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவாராம்.

இவரது பெற்றோர் இவரை என்ஜினீயர் அல்லது டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டுமென்று விருப்பப்பட்டனர். இவருடைய எதிர்காலத்தைப் பற்றி சுதந்திரமான முடிவெடுக்க அனுமதியளித்ததால், ஸ்வப்னாமிதா தன்னுடைய விருப்பப்படி புவியியல் துறையைத் தேர்ந்தெடுத்தார்.

கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ஸ்வப்னாமிதா, ரூர்கி ஐஐடியில் சேர்ந்து ஜியாலாஜிகல் சயின்ஸில் பி.எச்.டி பட்டம் பெற்றார். 2006 -ஆம் ஆண்டு பேரிடர் மீட்பு நிர்வாகம் மற்றும் நிவாரண மையத்தில் பணியில் சேர்ந்தார். இது பூகம்பம், நில நடுக்கம், பனிச்சரிவு போன்ற பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து அரசாங்கத்திற்கு தகவல் தரும் மையமாகும்.

ADVERTISEMENT

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்த மையம் செயல்படுகிறது. உத்தரகாண்ட் அரசின் கீழ் செயல்படும் இந்த மையத்தில் இளநிலை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஸ்வப்னாமிதா, நிர்வாகப் பணியைவிட புவியியல் துறையில் ஆய்வு நடத்தவும், அதுபற்றி வகுப்புகள் நடத்தவும் விருப்பப்பட்டார்.

இதற்காக, 2007- ஆம் ஆண்டு டேராடூனில் உள்ள வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் இமாலயன் ஜியாலஜியில் சேர்ந்தார். இது ஒரு சிறப்பு மையமாகும். உலகிலேயே பெருமளவில் தொடர்ச்சியாக நீண்ட தொலைவுக்கு மலைகளை கொண்டுள்ள இமயமலைப் பகுதியில் எப்படி இந்த மலைகள் பருவத்திற்கேற்ப மாறுகின்றன? வளர்கின்றன? பனிப்பாறைகள் உடைந்து உருகி வெள்ளம் வருவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு நடத்தவே இமாலயன் ஜியாலஜி உருவாக்கப்பட்டது. இதில் சேர்ந்த டாக்டர் ஸ்வப்னாமிதா வைத்தீஸ்வரன் முதன்முதலாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட திட்டம் பற்றியும், தனக்கேற்பட்ட அனுபவம் குறித்தும் இங்கு விளக்குகிறார்:

"" பெரும்பாலும் அனைக்கட்டுப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ய முதலாவதாக தெஹ்ரி அணை நீர்த்திதேக்கப் பகுதியை தேர்ந்தெடுத்தேன். இதன் சுற்றுச் சூழல் பூகம்பம் அல்லது நிலநடுக்கம் ஏற்பட காரணமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பூமியின் அடிபாகத்தில் ஆய்வு செய்தோம்.

ஏற்கெனவே என்னுடைய குழுவினருடன் ஈரான் மற்றும் இந்துகுஷ் பகுதிகளில் ஆய்வு செய்தபோது பூகம்பம் ஏற்படுவதற்கு முன் பூமியின் அடிப்பகுதியில் அளவுக்கதிகமான உஷ்ணம் ஏற்படுவதையும், பூகம்பம் நிகழ்ந்த பின்னர் படிப்படியாக குளிர்ச்சியடைவதையும் கண்டறிந்தோம்.

இந்த மாறுதலை சாட்டிலைட் மூலம் முன்கூட்டியே அறிந்து பூகம்பம் ஏற்பட போவதை தெரிந்து கொள்ளலாம். ஆனால், முதலில் இதையாரும் ஒப்புக் கொள்ளவில்லை. நாசா மற்றும் சீனா ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது உண்மை என்று சொன்னபிறகுதான் பல நாடுகள் இந்த ஆய்வை ஏற்றுக் கொண்டன. இது வாடியா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இமாலயன் ஜியாலஜியில் ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஷில்லாங் பீடபூமி பகுதியில் ஆய்வு செய்தேன். இமயமலையின் தொடர்ச்சியாக அமைந்துள்ள இந்த பீட பூமியை நான் மிகவும் ரசிப்பதுண்டு. ஷில்லாங் பீட பூமியில் ஆய்வு செய்தபோது. ஜியோ ஆர்க்கியாலஜி பணியையும் மேற்கொண்டேன். பண்டைய சரித்திரகாலத்துக்கு முந்தைய சில ஆதாரங்கள் கிடைத்தன. நில நடுக்கம், பருவநிலைமாற்றம், சுற்றுச்சூழல் காரணமாக சில மக்கள் வசிப்பிடங்கள் புதையுண்டிருக்கலாம் என்ற கருத்தில் செய்யப்பட்ட இந்த ஆய்வுகள் பலனளித்தன.

இமயமலைப் பகுதியில் நகரும் பணிபாறைகளைப் பற்றி ஆய்வு செய்தபோது கிழக்குப் பகுதியில் பெரும்பாலான பனிப்பாறைகள் சீன எல்லையை தாண்டி சரிந்து விழுவது தெரிந்தது. இந்தியாவில் அதிகமான நகரும் பனிப்பாறைகள் உத்தரகாண்ட் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலேயே சரிந்து விழுகின்றன. ஆய்வு அறிக்கையின்படி இமயமலைப் பகுதியில் சரிந்து விழும் பனிப்பாறைகள் இந்திய - சீனா இரு பகுதிகளிலும் சரிசமமாகவே உள்ளன. மேலும் ஆய்வுகள் நடத்த பாலியோ - சீஸ்மோலஜி என்ற முறையை மேற்கொள்ளவுள்ளேன். இதன்மூலம் இப்பகுதிகளில் பண்டைய சரித்திர காலத்திற்கு முன் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களில் எந்தெந்த பகுதிகள் புதையுண்டுள்ளன என்பதை கண்டறிய முடியும். இந்தத் துறையில் பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். பாலின வேறுபாடோ, வெறுப்புணர்வோ கிடையாது. இருந்தும் இத்துறையில் பெண்கள் ஆர்வம் காட்ட தயங்குவது ஏன் என்று புரியவில்லை'' என்கிறார் டாக்டர் ஸ்வப்னாமிதா வைத்தீஸ்வரன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT