மகளிர்மணி

பெண் தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி 'வீ டூ'

11th Aug 2021 06:00 AM | - ஸ்ரீதேவிகுமரேசன்

ADVERTISEMENT

 

ஒரு டி-ஷர்ட்டோ, சோப்போ, சீப்போ எந்தவொரு தயாரிப்பாக இருந்தாலும் உலகளவில் அதற்கான பிராண்ட் இருக்கிறது. ஆனால், முன்னேறவும், சாதிக்கவும் துடிக்கின்ற பெண்களை ஒன்றிணைக்கும் அமைப்பு ஏன் உலகளவில் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானதுதான் வீ டூ (WEDO). பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நிறுவனம் இது. இந் நிறுவனத்தின் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் தொழில் முனைவோர்களை உருவாக்கியிருக்கிறார் இதன் நிறுவனர் காதம்பரி.

அவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""பொதுவாக, ஒரு பிசினஸ் என்று எடுத்துக் கொண்டால், ஆண்களைவிட பெண்கள் உருவாக்குகிற தயாரிப்புகளில் ஒரு சமூக அக்கறையைப் பார்க்க முடியும். ஆனால், பிசினஸ் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால், அவர்களது தயாரிப்புகளை மார்க்கெட்டிங் செய்யும் யுக்தி தெரியாததால பெரும்பாலான பெண்கள் சொந்தத் தொழிலில் தோற்றுவிடுகிறார்கள்.

ADVERTISEMENT

அப்படி எந்த ஒரு பெண்ணும் பார்த்துப் பார்த்து அக்கறையாக உருவாக்கும் அவர்களது தொழிலில் தோற்றுவிடாமல் இருக்கவே நாங்கள் வழிகாட்டுகிறோம். அவர்களது தயாரிப்புகளை சரியான முறையில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிற வித்தையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம்.

நான் அடிப்படையில் கார்டியா டெக்னாலஜிஸ்ட். படிப்பை முடித்ததும் சில மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்தேன். இதற்கிடையில் திருமணம், குழந்தை என்று வந்ததால், ஓர் இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது.

பின்னர் மீண்டும் வேலைக்குச் செல்ல நினைத்தபோது, நான் படித்த துறையைச் சார்ந்த வேலைக்குச் செல்ல விரும்பாமல் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்நிலையில் ஒரு கன்சல்டென்சியின் மூலம் வேலை தேடச் சென்றபோது, எனது பேச்சுத் திறமையைப் பார்த்துவிட்டு, அந்த நிறுவனத்திலேயே என்னைப் பணியில் அமர்த்திக் கொண்டார்கள்.

அங்கேதான், வேலை தேடி வருபவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பை எப்படி உருவாக்கித் தருவது என்ற அனுபவத்தை கற்றுக் கொண்டேன். அந்தசமயத்தில் அங்கே எங்களுக்கெல்லாம் வேலை கற்றுக் கொடுத்த மேனேஜரை அந்நிறுவனத்தின் நிறுவனர் ஒரு தருணத்தில் அவ மரியாதையாக நடத்த, அவர் அங்கிருந்து வெளியேறினார். அது எங்களை மிகவும் பாதித்தது. எனவே, அவருக்கு துணையாக நானும் இன்னும் சிலரும் வெளியேறினோம்.

அப்போதுதான், ஏன் நாமே ஒரு நிறுவனத்தை உருவாக்கக் கூடாது என்று தோன்ற, நானும் தோழியும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கினோம். சில ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தி வந்தோம். ஆனால், அங்கேயும் சில பிரச்னைகள் உருவானது. பெரும்பாலான உழைப்பு என்னுடையதாகவே இருந்தது. இதனால் சோர்ந்து போன நான் ஒருகட்டத்தில் அதிலிருந்தும் வெளியே வந்துவிட்டேன்.

பின்னர், மீண்டும் ஒரு பிரேக் . இந்நிலையில் கணவர் சாதாரணமாக, ""இப்போ வீட்டில் சும்மா தானே இருக்கே'' என்று சொன்ன ஒரு வார்த்தை , என் சுய மரியாதையை சீண்டிவிட்டது.

அந்த தருணத்தில்தான் நான் உணர்ந்தேன். தனது சின்ன சின்ன தேவைகளுக்குக் கூட கணவரின் தேவையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஹோம் மேக்கராக இருக்கும் பெண்களின் நிலை என்னவாக இருக்கும். அவர்கள் மனதளவில் எவ்வளவு காயப்பட்டிருப்பார்கள் என்று தோன்றியது. எனவே, ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவாவது ஒரு வேலையை வருமானத்தை தேடிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

அதனால், உடனடியாக ஏதாவதொரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அந்தசமயத்தில், எனது கணவரின் போட்டோகிராபி துறையும் சற்று தொய்வாக இருந்தது. எனக்கு பிசினஸ் டெவலப்மெண்ட் குறித்து ஏற்கெனவே அனுபவம் இருந்ததால், கணவரின் போட்டோகிராபி துறையை கையில் எடுத்து வளர்ச்சியை நோக்கி கொண்டு வந்தேன். நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்தது.

என்னதான், நிறுவனத்தை வளர்த்தாலும் அது கணவருடையதுதானே, எனது சொந்த முயற்சி இல்லையே என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருந்தது.

இதனால் என் சொந்த முயற்சியில் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்கிடையே, பெங்களூரில் உள்ள தொழில் முனைவோருக்கான பயிற்சி நிறுவனமான ஐஐஎம்மில், 21 நாள் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே எடுத்துக் கொண்ட பயிற்சி பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது. அதன் மூலம் உருவானதுதான் வீடு (ஜ்ங்க்ர்).

ஏற்கெனவே எனக்கிருந்த பதினாறு ஆண்டு அனுபவத்தின் மூலம் என்னைப் போலவே தேடலில் இருந்த, சுயமாக சொந்த தொழில் செய்ய விரும்புகிற பெண்கள் பலரை ஒன்றிணைத்து அவர்களுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் ஏற்படுத்தித் தருகிறேன்.

2015-இல் இந்நிறுவனத்தை தொடங்கினோம், கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவரை சுமார் 10,000 ஆயிரம் பெண்களை வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறோம்.

இது தவிர, கல்லூரியில் இறுதி ஆண்டில் இருக்கும் பெண்களை இளம் தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்று நினைத்து கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வுகளையும், வழிகாட்டுதலையும், வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி வந்தோம்.

தற்போது, கரோனா பொதுமுடக்கம் காலம் என்பதால், தொழில் துறைகள் நிறைவே பாதிப்பு அடைந்திருக்கிறது, இதனால், வீட்டில் இருந்தபடியே ஆன் லைன் மூலம் ஒருவருடைய தயாரிப்புகளை எப்படி பெரியளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற யுக்திகளையும், அவர்களுடைய தயாரிப்புகளை விற்கவும் தளத்தையும் அமைத்து தருகிறோம்.

மேலும், பெண்களுக்குள்ளேயே கிராஸ் நெட்வொர்க்கை ஏற்படுத்தி, தஞ்சையில் ஒரு குக்கிராமத்தில் இருக்கிற ஒரு பெண்மணி, மும்பையில் தனது தயாரிப்புகளை விற்கவும், ஈரோட்டில் இருக்கிற ஒரு பெண்மணி தனது தேங்காய் நார் தயாரிப்புகளை மலேசியாவில் விற்கவும் வழிவகை செய்து தருகிறோம்.

இது தவிர, புதுசா நான் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், என்ன தொழில் தொடங்குவது என்று தெரிவில்லை என்னும் பெண்களுக்காக தற்போது ஆகஸ்ட் 15 வரை இலவச செமினார் வழங்கி வருகிறோம்.

ஏற்கெனவே தொழிலில் இருப்பவர்கள் வந்தால், அவர்களை எங்களது உறுப்பினர்களாக்கிக் கொண்டு குழுக்களாக பிரித்து ஒருவருக்கு ஒருவர் போட்டியில்லாமல், தற்போது டிரெண்டில் இருக்கும் சூழலுக்கு ஏற்ப அவர்களுக்கான வழி காட்டுதலை ஏற்படுத்தி தருகிறோம்.

இதைத்தாண்டி, எங்களது நிறுவனத்தை குளோபல் அளவிலான பிராண்டாக உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு'' என்கிறார் காதம்பரி.

ADVERTISEMENT
ADVERTISEMENT