மகளிர்மணி

வரதட்சணையைத் தடுக்கப் புதிய சட்டம்!

4th Aug 2021 06:00 AM | - பனுஜா

ADVERTISEMENT

 

கல்வி அறிவு அதிகம் உள்ள, மதம், ஜாதி, மொழி வேறுபாடு பாராமல் கலப்புத் திருமணங்கள் அதிகம் நடக்கும் கேரளத்தில் சமீப காலமாக வரதட்சணை கொடுமையைத் தாண்டி கொலைகள், தற்கொலைகள் அதிகரித்துவிட்டன.

அரசு ஊழியர்களிடையே வரதட்சணைக் கொடுமைகள் நடக்காமல் இருக்க கேரள அரசு அதிரடி சட்டம் ஒன்றினை இயற்றியுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் 1961-ன் படி வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் பலரும் வரதட்சணை வாங்குகிறார்கள். கேட்ட வரதட்சணை கிடைத்த பிறகும் மேலும் வரதட்சணை கேட்டு மணமகளை அடித்துத் துன்புறுத்துவதும்.. கொலை செய்வதும் கேரளத்தில் சகஜமாகிவிட்டது.

ADVERTISEMENT

இனி கேரள அரசுத் துறைகளில் வேலை பார்க்கும் ஆண் அலுவலர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது பெண் வீட்டாரிடமிருந்து எந்தவொரு பொருளோ, பணமோ, நகையோ வரதட்சணையாக பெற்றுக்கொள்ளவில்லை என்று ஆவணத்தில் கையொப்பம் இட்டு, மனைவியிடம் கையொப்பம் பெற்று அரசிடம் சமர்பிக்க வேண்டும். இந்த ஆவணத்தில் சம்பந்தபட்ட மணமகள், அவரது தந்தை "வரதட்சணை கொடுக்கவில்லை' என்றும், மணமகன், மணமகனின் தந்தை "வரதட்சணை பெற்றுக் கொள்ளவில்லை' என்று கையொப்பம் இட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் "வரதட்சணையைத் தடை செய்யும் அதிகாரிகள்' விரைவில் நியமிக்கப்படுவார்கள். திருமணம் ஆன ஒரு மாதத்திற்குள் இந்த அதிகாரியிடம் புது மணமகன் வரதட்சணை வாங்கவில்லை.. என்ற உறுதி மொழி அடங்கிய ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அதிகாரி ஆவணத்தைப் பரிசீலித்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்.

தவறான தகவல் கொடுத்தாலோ, போலிச்சான்றிதழ் சமர்ப்பித்தாலோ, ரூ.15,000க்கு மேல் பொருளாகவோ, பணமாகவோ பெற்றுக் கொண்டிருந்தால், வரதட்சணை வாங்கியவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை நிச்சயம், வரதட்சணை வாங்கவும் கொடுக்கவும் கூடாது. திருமணத்திற்கு பிறகு வரதட்சணை கேட்டு துன்புறுத்தக்கூடாது என கேரள அரசு எச்சரித்துள்ளது.

கேரள ஆளுநர் முஹம்மது ஆரிப் கான் கேட்டுக்கொண்டதன்படி, கேரள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது திருமணத்திற்காக வரதட்சணை கொடுக்கவோ வாங்கவோ மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT