மகளிர்மணி

இந்தியப் பெண்ணாக விண்ணில் பறப்பேன்!

4th Aug 2021 06:00 AM | - கோதை. ஜோதிலட்சுமி  

ADVERTISEMENT

 

பல துறைகளிலும் சாதனை படைத்த பெண்கள் இருக்கிறார்கள். சில துறைகள் அபூர்வமானவை. விண்வெளிக்குச் செல்ல வேண்டும். நிலவில் கால் பதிக்க வேண்டும். செவ்வாய் கிரகத்தில் நடக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு அதை நனவாக்குவதற்காக கடுமையான சோதனைகளைத் தாண்டி தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் உதய கீர்த்திகா. 

குழந்தைகளுக்கு நிலவைக் காட்டி உணவிடுவது நம்முடைய தேசத்தில் வழக்கமானது. அப்படி உணவூட்டும் தாயிடம் நிலவுக்கே தன்னை அழைத்துச் சென்றால் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்த குழந்தை உதய கிருத்திகா. இன்றைக்கு அதற்கான பயிற்சியைப் பெற்றிருக்கிறார். இன்னும் முயற்சியில் இருக்கிறார். அவர் கடந்து வந்திருக்கும் பாதை சாதாரணமல்ல. கடக்க நினைக்கும் பாதையும் இன்னும் அதிகம். நம்மோடு தனது அனுபவங்களைக் கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.  

உங்கள் கனவு மற்றும் அதற்கான தொடக்கம் பற்றி...

ADVERTISEMENT

சிறுவயது முதலே விண்வெளி வீராங்கனையாக வர வேண்டும். வானத்தில் பறக்க வேண்டும் என்பதே என் கனவு. அதனால் விண்வெளி சார்ந்த செய்திகளை செய்தித்தாளில் படித்தால் உடனே அதை வெட்டி எடுத்து சேகரித்து வைப்பேன். விண்வெளி தொடர்பான புத்தகங்களை பார்த்தாலோ கேள்விப்பட்டாலோ அதைப் படிக்க வேண்டும் என்று ஆசைப் படுவேன். விண்வெளி வீரர்களின் சரிதங்களைப் படிப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டது. அவர்கள் தங்களைத் எப்படித் தகுதி படுத்திக் கொண்டார்கள் என்பதைத் திரும்பத் திரும்பப் படிப்பேன்.

முதன் முதலில் பத்தாம் வகுப்புப் படிக்கும் பொழுது இஸ்ரோ நடத்திய ஒரு கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அந்தப் பரிசைப் பெறுவதற்காக குடும்பத்தோடு மகேந்திரகிரி சென்றோம். அந்த இடத்தைப் பார்த்தவுடன் எனக்குள் ஏற்பட்ட உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதே போல பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் பொழுதும் மீண்டும் இஸ்ரோ நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். தேனி மாவட்டம் அல்லிநகரம் என்ற ஒரு குக்கிராமத்தில் தமிழ்வழிக் கல்வியில் படித்த எனக்கு விண்வெளி வீரராக என்ன படிக்க வேண்டும் எங்கே படிக்க வேண்டும் என்பதனை எந்தத் தகவலும் தெரிந்திருக்கவில்லை. அங்கே, ஒரு விண்வெளி வீரராவதற்கு என்னென்ன படிக்க வேண்டும். அதற்கு எப்படித் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு வந்தேன். 

அதற்கான படிப்பை எங்கு படித்தீர்கள்?

உக்ரைனில் தேசிய விமானப்படைப் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் படித்தால் தகுதி பெறலாம் என்று அறிந்தேன். என் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் சிறிய வேலையில் இருப்பவர்கள். 

எங்களுக்கென்று சொந்தமாக வீடு கூடக் கிடையாது. இந்த நிலையில் என் படிப்புக்கு உதவி கேட்டுப் பலரிடம் பல வழிகளில் முயன்றேன். ஐந்து பத்து முதல் சில ஆயிரங்கள் வரை உதவி செய்தவர்கள் பலர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு உக்ரைன் சென்று சிறப்பு விமான தொழில்நுட்பப் பொறியியல் படித்தேன். 

ஒவ்வொரு வருடமும் படிப்பு முடிந்து   ஊருக்கு வருவேன். தனி நபர்கள் அமைப்புகள் என்று பல இடங்களுக்கும் ஏறி இறங்கி அடுத்த ஆண்டு படிப்புக்கான பணத்தை சேகரிப்பதில் சிக்கல்கள் சிரமங்கள் இருக்கும். இவ்வாறாக என்னுடைய படிப்பைத் தொடர்ந்தேன். நான்கு ஆண்டுகள் படித்து 92.5 சதம் மதிப்பெண் பெற்று முதலாவதாகத் தேறினேன்.

பெற்ற பயிற்சிகள் பற்றி...

உக்ரைனில் படிப்பை முடித்த பின் போலந்தில் விண்வெளி வீரருக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற முயன்றேன். "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று சொல்லித் தந்திருக்கிறார்கள் அல்லவா? அதனால் மீண்டும் பலருடைய உதவியும் பெற்று பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். இப்பொழுது பத்திரிகைகள் முதலிய ஊடகங்கள் உதவி கிடைத்தது. என்னுடைய முயற்சி அனைவருக்கும் தெரிய வந்தது.

போலந்தில் பத்து வகையான பயிற்சிகளை மேற்கொண்டு ஒவ்வொன்றிலும் தேறினேன். அதிலே, குறிப்பாக சில பயிற்சிகள் கடினமானவை. நிலையிலும் செவ்வாய் கிரகத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிக் களம், ராக்கெட்டில் பறக்கும் பொழுது புவி ஈர்ப்பு விசை நம் உடலின் ரத்த ஓட்டத்தை கீழ் நோக்கி இழுக்கும் பொழுது அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி, இதயத்திற்கு ஏற்படும் அழுத்தத்தைத் தாங்குவதற்கான பயிற்சியும் முக்கியமானது. 

போலந்தில் விமானப்படை வீரர்கள் கூட பெற்றிராத ரஷ்யாவின் சோயுஸ் எம் எஸ் ராக்கெட்டில் பயணிக்கும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் திறனை சோதனை செய்வது என்று பயிற்சி பெற்றேன். உயிர் அபாயம் நிறைந்த பயிற்சி இதனை விமானப் படையினரே கூட முயல்வதில்லை என்று எச்சரித்தார்கள். என்றாலும் விண்வெளி வீரருக்கு இந்தப் பயிற்சி அவசியம் என்பதால் அதனையும் மேற்கொண்டேன்.

போலந்தில் இந்தப் பயிற்சியை மேற்கொண்டிருக்கும் முதல் பெண் என்பது பெருமையாகவே இருக்கிறது. இந்தியாவிலும் முதன்முதலில் ஒரு பெண்ணாக இந்த பயிற்சி நான் பெற்றிருக்கிறேன்.  விண்வெளியில் மிதந்து கொண்டே தொழில்நுட்ப வேலைகளைச் செய்வதற்கான பயிற்சி, ராக்கெட்டை உருவாக்கும் பயிற்சி இப்படி இன்னும் பலவிதமான பயிற்சிகள் உண்டு. அனைத்திலும் தேறி வந்திருக்கிறேன்.

தற்போதைய முயற்சி...

விண்கலத்தில் திடீரென இயந்திரக் கோளாறுகள் நேரிட்டால் அந்த நேரத்தில் மனிதர்கள் இயக்கும் படியான சூழ்நிலை ஏற்படும். அதற்காக விண்வெளி வீரர் விமான ஓட்டியாகவும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதற்கான முயற்சியில் இருக்கிறேன். பல இடங்களிலும் தேடி கனடாவில் அதற்கான சிறப்புப் பயிற்சி இருக்கிறதென்று கண்டு விண்ணப்பித்தேன். என்னுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டு இடம் கிடைத்துவிட்டது. இந்தப் படிப்பை பயிற்சியை முடிப்பதற்கு ஐம்பது லட்சம் செலவாகும். அவ்வளவு வசதி என் பெற்றோருக்கு இல்லை. அதனால் உதவி பெரும் முயற்சியில் இருக்கிறேன். மதுரை பகுதியில் சில அமைப்புகள் என் கல்விக்கான நிதிதிரட்டலில் துணை நிற்கிறார்கள். மார்ச் மாதம் படிக்கப் போயிருக்க வேண்டும். கரோனா காலத்தில் யாரையும் நாடுவதற்கோ உதவி கேட்கவோ இயலவில்லை. கால தாமதம் ஆகிவிட்டது. கனடாவில் கல்வி நிறுவனத்தில் இந்த விஷயத்தைச் சொல்லி நேரம் கேட்டேன். வரும் செப்டம்பருக்குள் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அனுமதித்திருக்கிறார்கள். இப்போது முழுமூச்சாக அதற்கான வேலையில் இருக்கிறேன். இவ்வளவு தூரம் வந்தாயிற்று. இனியும் எல்லாம் நல்லபடியாக நடக்கும். அரசின் உதவியையும் நாடி நிற்கிறேன்.

இவ்வளவு பயிற்சி பெற்றிருக்கிறீர்கள், வாய்ப்புகள்...

வாய்ப்பும் வந்தது. தங்கள் நாட்டில் பணியை மேற்கொள்ள அழைக்கிறார்கள். அதற்கு ஒப்புக் கொண்டால் இந்தப் பயிற்சியை அவர்களே வழங்குவதாகவும் சொல்கிறார்கள். நான், இந்தியப் பெண்ணாக இந்திய விண்கலத்தில் உலகமே வியக்கும் படியாக இந்தியக் கொடியோடு விண்வெளியில் இறங்க வேண்டும். இதுவே என் கனவு என்று சொல்லிவிட்டேன். 

இந்தியப் பெண்ணாக நான் இந்த முயற்சியில் வென்றுவிட்டால் இனி வரும் நம் பெண்களுக்கு உதய கீர்த்திகா என்ற கிராமத்துப் பெண் ஜெயித்திருக்கும் துறையில் நாமும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். அதற்கான பயணம் இது. இந்த முயற்சியை தேசம் புரிந்து கொள்ளும் எனக்குத் துணை நிற்கும். நம்பிக்கை இருக்கிறது என்கிறார் உதய கீர்த்திகா. 

ADVERTISEMENT
ADVERTISEMENT