மகளிர்மணி

இப்போதும் மேடை ஏறினால்  நடுக்கம்தான்! - உஷா உதுப்

பூா்ணிமா

பதினேழு இந்திய மொழிகளிலும் எட்டு அயல்நாட்டு மொழிகளிலும் பாடும் திறமை படைத்த உஷா உதுப், இதுவரை இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் மேடை ஏறி ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், "இன்னமும் மேடை ஏறினால் நடுக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை' என்று கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது:

""பாடுபவர்களுக்கு இத்தகைய உணர்வு ஏற்படுவது நல்லதுதான். ரசிகர்களின் ரசிப்பை மட்டுமே அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதன்முதலாக நான் மேடையேறியபோது உணர்ந்த நடுக்கம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், இப்போதும் மேடை ஏறும்போது ஏற்படும் நடுக்கத்தை தவிர்க்க முடியவில்லை, தற்போது பெங்களூரில் உள்ள "சுப்பிரமணியம் அகாதெமி ஆஃப் பர்பார்மிங் ஆர்ட்ஸ்' என்ற அமைப்பின் மூலம் இணையதளம் வழி மேடை நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றி பயிற்சியளித்து வருகிறேன்.

70-களில் தொழில் ரீதியாக நான் பாடத் தொடங்கியபோது, சென்னையில் நைன் ஜெம்ஸ், ஹோட்டல் பெங்களூர் இன்டர்நேஷனல், கொல்கத்தாவில் டிரிங்காஸ் ரெஸ்டாரெண்ட், மஹாராஷ்டிராவில் டாக் ஆஃப் தி டவுன் போன்ற இடங்களில் நடத்திய நிகழ்ச்சிகள்தான் என்னுடைய இசைப்பயணத்திற்கு அஸ்திவாரமாக அமைந்தது என்று கூறலாம்.

கடந்த 50 ஆண்டு கால அனுபவத்தில் நான் மிகவும் விரும்பிய மூன்று விஷயங்கள் என்னவென்றால், முதலாவது என்னுடைய நிகழ்ச்சிகளின் போது கிடைக்கும் ரசிகர்களின் கைதட்டல், இரண்டாவது நைரோபியில் என்னுடைய நிகழ்ச்சி நடந்தபோது, வருகை தந்த அன்றைய ஜனாதிபதி ஜோமோ கென்யாட்டா, நான் மலைக்கா மொழியில் பாடியதை கேட்டு மகிழ்ந்து, கென்யா நாட்டின் குடியுரிமை சாவியை எனக்களித்து கௌரவித்தார். மூன்றாவது அயல் நாடுகளுக்குச் செல்லும்போது அந்த நாட்டு மக்களை மகிழ்விப்பதற்காக அவர்கள் நாட்டு மொழியிலேயே பாடல்களை இசையமைத்து பாடுவது எனக்குப் பிடித்திருந்தது.

பொதுமுடக்கம் அனைத்துத் துறையினரையும் பாதித்தது போலவே.

இசை கலைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜோத்பூரில் நடத்திய நிகழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் இதுவரை நிகழ்ச்சிகள் நடத்த எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு வருவாய் இல்லை என்றால் என்னுடன் உள்ள இசைக்குழுவினருக்கு ஊதியம் கொடுக்க முடியாது. நாள் அடிப்படையில் நான் அவர்களை அமர்த்தியுள்ளேன். எல்லாம் நன்மைக்கே என்று நம்புகிறவள் நான், டிஜிட்டல் மீடியத்தை பயன்படுத்தி இசை நிகழ்ச்சிகளை நடத்துவது, நிகழ்ச்சிகள் பற்றிய கலந்துரையாடல்கள் போன்றவைகளை நடத்தி அந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் என் குழுவினருக்கு முடிந்த உதவிகளை செய்தேன்.

ஒரு சில நிகழ்ச்சிகளின்போது, வேறு மொழிகளில் பாடுவதை சிலர் விரும்புவதில்லை. அவரவர் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து பாட வேண்டுமென்று வற்புறுத்துவதுண்டு. அவரவர் தாய்மொழி மீது பற்றுதல் இருப்பது தவறல்ல. பாடகர்களைப் பொருத்தவரை அவர்கள் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். எனக்கு பல மொழிகள் சரளமாக பேசத் தெரியும் என்பதால் இதுபோன்ற சூழ்நிலைகளில் சுலபமாக பிரச்னைகளை சமாளிப்பதுண்டு. இன்றைய வளர்ச்சியில் பிறமொழிகளை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் மூன்று நான்கு மொழிகளை கற்கும் திறமைசாலிகளாக உள்ளனர். இசை என்பது மொழிகளை கடந்து ரசிகர்களை கவரும் தன்மை உடையதாகும். பாடல் என்பதும் எப்போதும் பாடுபவர்களைவிட உயர்ந்தது என்பது என்னுடைய கருத்து'' என்கிறார் உஷா உதுப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT