மகளிர்மணி

எட்டாத பயணமும் எளிமையானது!

பூா்ணிமா


பெங்களூரைச் சேர்ந்த சமீரா தாஹியா(33) தன் கணவர் பிரவீண் ராமகிருஷ்ணனுடன் கடந்த ஆண்டு பொது முடக்கத்தின் போது டிசம்பர் மாதத்தில் கரோனா விதிமுறைகளை கடைபிடித்து தனித்தனி பைக்கில் சேர்ந்தாற்போல் பயணம் செய்து, 24 நாள்களில் 16,300 கி.மீதூரம் 28 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களுக்குச் சென்று திரும்பியுள்ளனர். மக்களிடையே மனிதாபிமானத்தையும், அன்பையும் வெளிப்படுத்துவதற்காக "ஹீல் தி வோர்ல்ட்' என்ற பெயரில், சமீரா தன் கணவர் பிரவீனுடன் இந்த பயணத்தைத் தொடங்கி முடித்துள்ளதாக கூறியிருக்கிறார்.

சமீராவுக்கு சிறுவயது முதலே பைக் ஒட்டுவதென்றால் மிகவும் பிடிக்குமாம். 16 வயதில் பைக் ஓட்ட பயிற்சிப் பெற்றவர், முதல்முறையாக 19-ஆவது வயதில் ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கி.மீ. தொலைவு பைக் ஓட்டி சாதனை புரிந்துள்ளார். 2000 -ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் தொடர்ந்து மூன்றாண்டுகள் பைக் பந்தயத்தில் கலந்து கொண்ட அனுபவம் இவரது கணவர் பிரவீணுக்கு உண்டு.

2015 -ஆம் ஆண்டு வரை தகவல் தொலை தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த சமீரா, பல்வேறு பைக் பந்தயங்களில் கலந்து கொள்வதற்காக வேலையை ராஜிநாமா செய்து விட்டு, பெங்களூரில் உள்ள "கைக்கெர்வி' என்ற மகளிர் பைக் குழுவில் உறுப்பினரானார். இவரது கணவர் பிரவீணும் பைக் ஓட்டுவதில் நல்ல தேர்ச்சிப் பெற்றவர் என்பதால் 2016- ஆம் ஆண்டு கணவருடன் தனித்தனி பைக்கில் பெங்களூரிலிருந்து ராஜஸ்தான் வரை சென்று வந்ததுதான் சமீராவின் முதல் தொலை தூர பைக் பயணமாகும். தொடர்ந்து பலமுறை தென்னிந்தியா, வட இந்தியா என பல மாநிலங்களுக்கு பைக்கில் சென்று வந்துள்ளனர்.

தற்போது சென்று வந்த பயண அனுபவத்தைப் பற்றி சமீரா கூறுகிறார்:

""முதலில் பைக் பயணத்தின் மூலம் சாதனை படைக்க வேண்டுமென்ற எண்ணம் ஏதும் எங்களுக்கு இருந்ததில்லை. ஆனால் சிலர் பைக் பயணத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக செல்வது, குறிப்பிட்ட நாள்களுக்குள் பல இடங்களுக்குச் சென்று வருவது என்று சாதனை பட்டியலில் இடம் பெறுவதை அறிந்த பின்னரே எங்களுக்கும் குறிப்பிட்ட நாள்களுக்குள் பல மாநிலங்களுக்குச் சென்று திரும்புவது என்ற எண்ணம் தோன்றியது. இதற்காக கேடிஎம் 390 ட்யூக்ஸ் என்ற பைக்கை தேர்வு செய்தோம். ஏற்கெனவே கலந்து கொண்ட ரேஸ்களில் வேறு மாடல் பைக்குகளை பயன்படுத்தி இருந்தாலும் நீண்ட தூர பயணத்திற்கு இதுவே சிறந்ததென கருதினோம். ஒரே பைக்கில் செல்வதைவிட தனித்தனி பைக்கில் சேர்ந்தாற்போல் பயணம் செய்யலாம் என்று என் கணவர்தான் யோசனை கூறினார்.

பைக் பற்றியும் தினமும் அதை எப்படி பராமரிப்பது என்பது பற்றியும் தெரிந்து கொண்டோம். நீண்ட பயணமென்பதால் அதற்குரிய மனவலிமையும், உடல் தகுதியும் வேண்டுமல்லவா? அதை பெறுவதற்கான பயிற்சிகளில் இறங்கினோம்.

பயணம் தொடங்க தீர்மானித்த போது என்னுடைய உடல் எடை 90 கிலோ இருந்தது. நீண்ட தூர பயணத்தை பைக்கில் மேற்கொள்ளும்போது எடை அதிகம் இருக்கக் கூடாது. பைக் ஓட்டுபவர்கள் எடை குறைவாகவும் பலம் பொருந்தியவர்களாகவும் இருக்க வேண்டும். எடையை குறைக்க என்னுடைய நீண்டகால யோகா பயிற்சியாளர் அறிவுரைப்படி நல்ல சத்துள்ள ஆரோக்கியமான உணவை நேரப்படி சாப்பிடத் தொடங்கினேன். கார்போ ஹைட்ரேட், இனிப்பு கலந்த உணவுகளை தவிர்த்தேன். யோகா பயிற்சியும் செய்தேன். ஜூன்முதல் நவம்பர் மாதத்திற்குள் உடல் எடையில் 28 கிலோ குறைந்தது.

நீண்ட தூரம் பயணம் என்பதால் பைக் ஓட்டுநர்கள் மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாது. நல்ல பழக்க வழக்கம் உள்ளவர்கள் சரியான உணவுகளையே சாப்பிட வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் பைக் ஓட்ட முடியாது. வயிறு முட்டவும் சாப்பிடக் கூடாது. தூக்கம் வந்துவிடும். அதனால் பயணத்தின்போது புரோட்டீன்கள் அடங்கிய சிறு திண்பண்டங்களை சாப்பிடுவது தான் நல்லது. வழியில் ஒவ்வொரு நகரத்திலும் கிடைக்கும் உள்ளுர் சிற்றுண்டிகளை சாப்பிட்டும், பகல் பொழுதில் ஒரு வேளை சாப்பிடுவதென முடிவு செய்தோம். மலைப்பகுதியில் செல்லும்போது மட்டும் சற்று கூடுதலாக சாப்பிடுவோம். அப்போதுதான் வேகத்தை குறைத்து ஓட்ட முடியும். 100. கி.மீட்டருக்கு ஒருமுறை எங்களுக்கு சக்தி குறைவது போல் தோன்றினால் வழியில் கிடைக்கும் சிற்றுண்டிகளை சாப்பிடுவோம்.

ஒவ்வொரு மாநில எல்லையிலும், நாங்கள் பயணம் புறப்படுவதற்கு முன் கரோனா தொற்று இல்லை என்று எடுத்துக் கொண்ட மருத்துவ பரிசோதனை சான்றிதழை காண்பித்து பயணத்தைத் தொடர்ந்தோம். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் பயன்படுத்துவது, எரிபொருள் நிரப்பும்போது பைக்கை முழுமையாக சானிடைசர் செய்வது என பாதுகாப்புடன் சென்றாலும் சில மாநிலங்களில் திரும்பவும் கரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்பதால், தினமும் 12 முதல் 14 மணி நேரம் நாங்கள் பைக் ஒட்ட வேண்டியிருந்ததால் அந்த விதிமுறைக்கு கட்டுப்பட வேண்டியாதாயிற்று.

நாங்கள் நினைத்தபடி பைக் பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை. புவனேஸ்வரிலிருந்து ராய்பூர் செல்லும்போது என் கணவர் பிரவீணின் பைக் ஹேண்டில் பார், சேஸிஸ் என தனித்தனியே ஆறு துண்டுகளாக உடைந்துவிட்டது. நல்லவேளையாக அடர்ந்த காட்டுச்சாலையில் நுழைவதற்கு முன்பே சிறு கிராமப்பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதால் தப்பினோம். அந்த கிராமத்தில் பத்து பதினைந்து வீடுகளே இருந்தன. ஒரே ஒரு மெக்கானிக், ஒரு மளிகை கடை, ஒரு வெல்டிங் கடை இருந்தது. எங்கள் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து முடிப்போமா என்ற சந்தேகமும் இருந்தது. என் கணவருக்கு 25 ஆண்டு கால பைக் அனுபவம் இருந்ததால், உடைந்த பாகங்களை எப்படி இணைக்க வேண்டும் என்று சொல்லியபடியே அங்கிருந்த மெக்கானிக் ஒருங்கிணைத்துக் கொடுத்தார். மீண்டும் பைக் பழையபடி உருவெடுக்க எட்டு மணி நேரம் ஆயிற்று. பயணத்தை முடித்து திரும்பும்போது ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததைவிட முன்னதாகவே கர்நாடகா எல்லைக்குள் வந்துவிட்டோம் என்றார்'' சமீரா.

இந்த பயணத்தின் மூலம் புறப்பட்ட முதல் நாளன்றே 22 மணி நேரத்தில் 1300 கி.மீ. தூரம் பைக் ஓட்டியவர், லடாக் சென்றபோது úஸாஜி லா வழியே பைக்கில் சென்ற முதல் பெண்மணி மற்றும் இந்தியாவில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணத்தை முடிக்க வெகுவேகமாக பைக் ஓட்டிய முதல்பெண்மணி என்ற பெருமை சமீராவுக்குக் கிடைத்துள்ளது.

சமீரா - பிரவீணின் அடுத்ததிட்டம், உலகிலேயே மிக நீளமான பாதையாக கருதப்படும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள 14 ஆயிரம் மைல் நீளமுள்ள பாதையில் பைக் ஓட்டுவதென தீர்மானித்துள்ளனர்.

17 நாடுகள் வழியே செல்லும் இந்த பாதையில் ஒரு மனிதன் நடந்து செல்வதற்கு மூன்று ஆண்டுகள் ஆகுமாம். இதற்கான ஆக்கப் பூர்வமான முன்னேற்பாடுகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தப் பாதையில் பருவநிலை அடிக்கடி மாறும் என்பதால் அதற்கு ஏற்ப பயணத்தைத் தொடங்க முடிவெடுத்துள்ளனர் இந்த தம்பதியினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT