மகளிர்மணி

எண்ணம்... செயல்... வெற்றி !

7th Apr 2021 06:00 AM | - கோதை.ஜோதிலட்சுமி

ADVERTISEMENT


சாதிக்கத் துடிக்கும் பெண் காட்டாற்று வெள்ளம் போன்றவள். அவளைத் தடுத்து நிறுத்த முடியாது. தமிழரசி அப்படியானவர். பன்முகத் திறமை கொண்டவர். தமிழ் அபிமானி. எந்தத் தடையும் பொருட்டல்ல என்று குழந்தை பிறந்த பதினாறாம் நாள் வேலை செய்ய பள்ளிக்கூடத்திற்கு வந்தவர். வேகத்தோடு செயல்பட தடைகள் இருப்பது நல்லது என்ற நம்பிக்கை கொண்டவர். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் ஆசிரியர். ஊடகவியல்துறையில், தொழில் முனைவோராகத் தடம் பதித்தவர்.

தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

பல தளங்களில் பயணிக்கிறீர்கள், எங்கிருந்து தொடங்கினீர்கள்?

ஆரம்பப்பள்ளி ஆசிரியராகத் தொடங்கினேன். அன்றாடம் குழந்தைகள் கோரசாகச் சொல்லும் "குட்மார்னிங் டீச்சர்' கேட்டால் தான் அன்றைய நாள் திருப்தியாய் இருக்கும். அதனால் இன்றைக்கும் பள்ளிக்கூடமே என் பிரதான இடமாக இருக்கிறது. தற்போது மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக இருக்கிறேன்.

ADVERTISEMENT

ஊடகவியலாளராக மாறியது குறித்து?

பள்ளிநாட்களில் இருந்தே மேடைப்பேச்சு நிகழ்ச்சிகளில் விரும்பி பங்கேற்பேன். தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக 1200 பேரில் பத்துப் பேர் தேர்வானோம். பொன்னிறமோ வடித்த ஓவியமுகமோ எனக்கு இயற்கையில் அமையவில்லை. . நல்ல தமிழ் உச்சரிப்பை வளர்த்துக் கொண்ட திறமை மட்டுமே வாய்ப்பை நல்கியது. அங்கிருந்து தொடங்கிய ஊடகப் பயணம் இன்றைக்கும் ஆன்மிகத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

தொழில்முனைவோர் ஆனது எப்படி?

சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால் முதலில் நாம் நம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு தொழில் உதவுகிறது. "ஈவென்ட் மேனேஜ்மெண்ட்' என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். சிறு சிறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தருகிறேன்.

"மண்மீது சிறந்த முதலீடு மண் மட்டுமே" என்ற கொள்கையோடு வீட்டுமனை விற்பனையில் கவனம் செலுத்தினேன். தொழில் வளர்வதோடு என்னையும் வளர்த்துக் கொள்ள நல்ல அனுபவமாக இருக்கிறது. நற்பெயரோடு நிறுவனத்தின் துணை இயக்குநராகத் தொடர்கிறேன்.

இத்தனை வேலைகளுக்கும் நேரமிருக்கிறதா?

நேரம் நிறைய இருக்கிறது. விரும்பிய திரைப்படம் பார்க்கும் பொழுது ஒரு நிமிடத்தை கூட நாம் வீணடிப்பதில்லை. நம் ஆர்வம் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்கிறது அல்லவா? அப்படியே நம்முடைய ஒவ்வொரு வேலையையும் ஆர்வத்தோடு அணுகும் பொழுது நேரம் வீணாவதில்லை. அதனால் மற்ற வேலைகளுக்கும் நேரம் சாத்தியமாகிறது.

சமூக ஊடகங்களில் "யூடியூப்பராக' அறியப்படுகிறீர்கள், அந்த எண்ணம் எப்படி வந்தது?

காலம் ஓடும் வேகத்தில் திசையில் நாமும் ஓட வேண்டும். இன்றைய தலைமுறை டிஜிட்டல் உலகத்தை உருவாக்கி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது அந்த உலகத்தில் நம்மை புதுப்பித்துக் கொண்டும் தயார்படுத்திக் கொண்டும் செயல் பட்டாக வேண்டும். நல்ல ஆசிரியருக்கு இது கட்டாயம். சமூக ஊடகம் வலிமையோடு வளரும் பொழுது என்னுடைய கருத்துக்களைக் கொண்டு சேர்ப்பதற்கும் அதையே வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன். இளைய தலைமுறைக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, விழுமியங்கள், வழிகாட்டுதல்கள் போன்ற தகவல்களை துறை சார்ந்த வல்லுனர்களிடமிருந்து பெற்று என்னுடைய சேனலில் தருகிறேன்.

உங்கள் பின்புலம் எப்படியானது?

மிக சாதாரணமான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். பட்டதாரியாக வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றிருந்த எளிய பெண். தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடைய அப்பா எனக்குப் பிடித்ததைச் செய்வதற்கு களம் அமைத்துக் கொடுத்ததோடு படிக்கும் காலத்திலேயே எழுத்து பேச்சு இரண்டிலும் என்னைத் தயார் படுத்திக் கொள்வதற்கு உதவினார்.

நடுத்தரக்குடும்பப் பெண்ணான உங்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் தந்தது என்று எதைச் சொல்வீர்கள்...

என்னைப்பொறுத்தவரை முன்னேற்றம் வெற்றி என்பதெல்லாம் நமக்குள் இருக்கும் நெருப்பின் வேகத்தைப் பொறுத்தது. நம் எண்ணமும் சிந்தனையும் அதனை செயலாக்குவதற்கான துடிப்பும் மட்டுமே லட்சியம் நோக்கி ஓடச் செய்யும். தடைகள் வர வர அவற்றைத் தாண்டுவதற்கான வேகமும் முயற்சியும் நம்மில் இருந்தே பிறக்க வேண்டும். வெளிக்காரணங்கள் வழிகாட்டலாம். ஒளி உள்ளிருந்தே பிறக்கவேண்டும்.

பெற்ற விருதுகள் பற்றி...

சிறந்த ஆசிரியர் விருது மும்முறை பெற்றிருக்கிறேன். முதலில் ஆர் ஆர் அகாடமி இந்த விருதை வழங்கினார்கள். வேலம்மாள் பள்ளிக்குழுமம் மற்றும் அரிமா சங்கம் சிறந்த ஆசிரியர் என்று கெளரவித்தார்கள். மாணவர்களோடு இணக்கமாக இருந்து நட்போடு அவர்களை நெறிப்படுத்துவது, சிறந்த மதிப்பீடுகளும் மதிப்பெண்களும் கொண்ட மாணவர்களை உருவாக்குவது என்ற காரணங்களுக்காக சிறந்த ஆசிரியராக அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிநிர்வாகமும் நூறு சதவீத தேர்ச்சி கொண்டுவந்த ஆசிரியர் வரிசையில் அங்கீகரித்துப் பாராட்டியிருக்கிறார்கள்.

சேக்கிழார் கல்வி கலாச்சார சங்கம் "தமிழ் சொல்லரசி' பட்டம் வழங்கினார்கள். டாக்டர் அப்துல்கலாம் பெண் சாதனையாளர் விருது அப்துல் கலாம் குடும்பத்தினர் நடத்தும் விஷன்-2020 அமைப்பு வழங்கியது. ஏறத்தாழ கால்நூற்றாண்டு பயணத்தில் இன்னும் பல அங்கீகாரங்களும் விருதுகளும் இறையருளால் கிடைத்திருக்கின்றன.

உங்கள் குடும்பம் பற்றி...

அப்பா தண்டபாணி இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். என் வளர்ச்சியில் மகிழ்ந்தவர். அம்மா உஷாராணி அன்போடு என் முயற்சிகளுக்குத் துணை நிற்கிறார். முதல் பிரசவம் முடிந்து சில நாட்களிலேயே வேலைக்குச் சென்ற போது அம்மா முழுமையாக உடன் நின்றார்கள். இன்றைக்குக் கல்லூரியில் படிக்கும் என் இரு மகன்களும் என்னோடு ஒத்துழைக்கிறார்கள்.

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நம்முடைய இலக்கு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செயலில் இறங்குங்கள். எளிதாக எதுவும் கிடைத்துவிடாது. "தாங்கினால் தான் தாண்ட முடியும்'. உங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து இலக்கு நோக்கிப் பயணியுங்கள். முயற்சி உடையவருக்கு இறையும் துணை நிற்கும்.

Tags : எண்ணம்... செயல்... வெற்றி !
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT