மகளிர்மணி

புற்றுநோயிலிருந்து மீண்டேன்!

7th Apr 2021 06:00 AM |  - ஸ்ரீதேவிகுமரேசன்

ADVERTISEMENT

 

தனக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்று கூட அறியா, பால்குடி மாறா பருவத்தில் புற்றுநோயின் கோரப்பிடியில் சிக்கி, பின்னர் மேற்கொண்ட தொடர் சிகிச்சையின் மூலம் அதிலிருந்து மீண்டு வந்து, நாட்டியத்தில் யுனிக் புக் ஆஃப் ரெக்கார்ட், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட், நாட்டிய கலைமணி விருது எனப் பல விருதுகளைப் பெற்று சாதித்து வருகிறார் 12 வயதே நிரம்பிய அபிராமி. இவருக்கு சமீபத்தில் ஸ்ரீ ருத்ராக்ஷா பல்கலைக்கழகம் நாட்டியத்தில் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்து அபிராமி நம்முடன் பகிர்ந்து
கொண்டவை:

""எனக்கு ஒரு வயது ஆகும்போது மூச்சு பிரச்னை ஏற்பட, என் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதுதான் எனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. அதிலிருந்து எனது பெற்றோர் எனக்கு சுமார் 5 ஆண்டுகள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர், நான் படிப்படியாக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தேன்.

இப்போது எனக்கு 12 வயதாகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் நான் புற்று நோயிலிருந்து மீண்டபோது, உடல் அளவில் மனதளவில் மிகவும் சோர்ந்து இருந்தேன்.

ADVERTISEMENT

அப்போது ஒருமுறை கோயிலுக்குச் சென்றிருந்தபோது, அங்கே கோவை கோபாலகிருஷ்ணனின் நாட்டிய நிகழ்ச்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. அப்போதே எனக்கு பரத நாட்டியம் மிகவும் பிடித்துப்போனது. அதனால் அம்மாவிடம் என்னை நாட்டிய பயிற்சி வகுப்பில் சேர்த்துவிடும்படி கேட்டேன். ஏற்கெனவே எனது சிகிச்சைகாக பெரிய அளவில் செலவழிந்திருந்தாலும் அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாமல், எனது ஆசைக்காக, எனக்கு நாட்டியம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, அம்மா வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.

ஊரப்பாக்கம் டாக்டர் வித்யாவிடம் நாட்டிய பயிற்சி எடுத்துக் கொள்ளத் தொடங்கினேன். அவர்தான் "யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்' பற்றி கூறினார். அதில் கலந்து கொள்ளுவதற்கான பயிற்சியும் அளித்தார்.

2018-இல் சுமார் அரைமணி நேரம் பானை மீது நின்றபடி நடனமாடி "யுனிக் வேல்ர்ட் ரெக்கார்ட்' புத்தகத்தில் இடம் பெற்றேன்.

அதையடுத்து 2020 -இல் "கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் கலந்து கொண்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 24 கத்திகள் மீது நின்று நடனமாடினேன். இதற்காக ஓர் ஆண்டு பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

தற்போது, ரமணி சுரேஷ் குருவிடம் வர்ணம் கற்று வருகிறேன். நன்றாக கற்றுக் கொண்ட பிறகு அரங்கேற்றம் வைக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்.

சமீபத்தில், ருத்ராக்ஷா பல்கலைக்கழகம் அவர்களது டான்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் பிரிவில் இருந்து மல்டிபுள் வேர்ல்ட் ரெக்கார்ட் அச்சிவர், என்ற நிலையில், எனக்கு நாட்டியத்தில் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளனர். அடுத்தது பரதத்தில் கின்னஸ் ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை.

இதைதவிர, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனையிலும் புற்றுநோய் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகளிடம், சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் முற்றிலும் மீளக்கூடிய நோய்தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன்.

அதற்கு உதாரணம் நான்தான் என்றும், நான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த கதையையும் சொல்லி மருத்துவ சிகிச்சையின் அவசியத்தை கூறி, அவர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறேன்.

அதுபோன்று, வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், சிறு வயதிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டு அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிலிருந்து முற்றிலும் மீண்டு வந்தவர்கள், கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடி செல்லும்போது, பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களுக்கு தகுதியிருந்தும் வேலை தரத் தயங்குகிறார்கள் என்பதை அறிந்தேன்.

காரணம், அடிக்கடி அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்வார்கள், அவர்களது வாழ்நாள் எவ்வளவுக்காலமோ என்றெல்லாம் யூகித்துக் கொண்டு வேலை தர மறுக்கிறார்கள்.

வாழ்க்கையோடு பெரிய போராட்டம் நடத்தி, அதிலிருந்து மீண்டு வந்தபோதிலும், இதுபோன்ற புறக்கணிப்புகளால், அவர்கள் மீண்டும் தன்னம்பிக்கையை இழக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

எனவே, நமது அரசாங்கம் இதுபோன்று புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் புதிய வாழ்க்கையை தொடங்க வழி காட்டும் வகையில், விளையாட்டு வீரர்கள், மாற்று திறனாளிகள் போன்றோருக்கு வேலை வாய்ப்புகளில் சலுகைகள் அளிப்பது போன்று எங்களுக்கும் சலுகைகள் வழங்கினால் நாங்களும் நம்பிக்கையுடன் வாழ முடியும்'' என்றார்.

Tags : புற்றுநோயிலிருந்து மீண்டேன்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT