மகளிர்மணி

மருத்துவமும், சுற்றுப்புறமும் இரண்டு கண்கள்!

7th Apr 2021 06:00 AM | - பொ.ஜெயச்சந்திரன்

ADVERTISEMENT

 

பிரசவங்களின்போது ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து வருவது புள்ளிவிவரங்களின் மூலம் தெரிய வருகிறது. அதேபோன்று பேறுகாலத்தில் தாயின் இறப்பு விகிதமும் பெருமளவில் குறைந்தே வருகிறது. என்ன காரணம்? மருத்துவத்துறையின் வளர்ச்சியும், மருத்துவர்களின் சாதனையும்தான்.
அப்படிப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரும், மகப்பேறு மருத்துவருமான மு.பூவதி. இவரை மருத்துவத்தின் மகத்துவம் என்றே சொல்லலாம். ஏனென்றால் இவருடைய ஆலோசனையில் குழந்தை
களைப் பெற்ற பெண்மணிகளின் எண்ணிக்கை ஏராளம். அதுபோன்று, சுற்றுப்புற சூழல் காப்பதிலும் இவரது பங்கு அளப்பரியது. தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் சுற்றுப்புறங்களை ஒரு பூங்காவாக மாற்றவும் திட்டமிட்டுள்ளார். காலை 5மணிக்கே எழுந்து மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளதா அல்லது பக்கத்தில் ஏதாவது புற்கள் முளைத்துள்ளதா என்று தொடர்ந்து கவனித்து விடுவார். அவரிடம் பேசியதிலிருந்து:
""எனது சொந்த ஊர் தேவாரம். குமுளிக்கு அருகில் மேற்கு மலைத்தொடர் (கேரளா) அடிவாரத்தில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் அழகிய சிற்றூர். தேனி மாவட்டத்தில் உள்ளது.
என்னுடைய பெற்றோர் இரண்டு பேருக்கும் படிக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் நம்பிக்கையுடன் என்னுடைய படிப்பிற்கு உறுதுணையாக இருந்தார்கள்.
எம்.பி.பி.எஸ். மற்றும் மகப்பேறு துறையில் பட்டமேற்படிப்பு எம்டி,ஒஜி, மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்றேன். 1991-ஆம் ஆண்டு சென்னையில் டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு, ஊருக்கு திரும்பும் வழியில் என்னுடைய அனைத்து சான்றிதழ்களையும் தொலைத்துவிட்டேன். என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்ற போது. ஒரு நல்ல மனிதர் கையில் எனது சான்றிதழ்கள் கிடைக்க, அவர் அதை எனக்கு திரும்பவும் அனுப்பி வைத்தார்.
அதன் பின்னர், முதன்முதலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமலைராயபுரம்; ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது அரசுப் பணியைத் தொடங்கினேன். அப்போது நம் மாநிலம் சுகாதாரத்துறையில் பெரிதாக முன்னேறியிருக்கவில்லை. அக்கிராமத்தின் மக்களுடைய அனைத்து மருத்துவ தேவைகளையும் நிறைவேற்ற முடியாத சூழல். ஆனால், இன்று நம் மாநிலம், நாட்டிலேயே சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதோடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மருத்துவக்
கல்லூரி அமையப்பெற்று அம்மருத்துவக்கல்லூரியில் நான் முதல்வராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்ததும் எதிர்பாராத மகிழ்ச்சியான நிகழ்வாகும்.
என்னைப் பொருத்தவரைக்கும் ஒவ்வொரு நோயாளியும் படும் வேதனையை நானே அனுபவிப்பது போன்று தோன்றும். அதனால் முடிந்தளவு முயற்சியை கைவிடாமல் நோயாளியைக் காப்பாற்ற வைராக்கியத்தோடு செயல்படுவேன். மருத்துவத்துறையை பொருத்தவரை, தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கும் ஒரு மாணவி நான். ஏனென்றால் பெரும் சவால்கள் நிறைந்தது இத்துறை என்றே சொல்லலாம்.
அரசுப்பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்ற நான் முடிந்த வரை ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இணைப்பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்து பிரைவேட் பிராக்டிஸ் செய்வதை நிறுத்தி விட்டேன்.
பல விருதுகள் தன்னார்வ அமைப்பினர்கள் கொடுத்தாலும் குறிப்பிடத்தக்க வகையில் 2019-ஆம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சர் மூலமாக பெற்ற சிறந்த மருத்துவர் விருது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப்போல நான் பணிபுரிந்த அனைத்து இடங்களிலும் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மூலமாக சிறந்த சேவைக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றதை நினைத்தது பெருமை கொள்கிறேன். என்னுடைய படிக்காத பெற்றோருக்கு அந்த விருதுகளை அர்ப்பணிக்கிறேன்'' என்றார்.

Tags : மருத்துவமும் சுற்றுப்புறமும் இரண்டு கண்கள்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT