மகளிர்மணி

'ஆறாயிரம் பேருக்கு இறுதி மரியாதை' - பட்டினம்பாக்கம் ரோஜாவின் சமூகப் பணி!

வனராஜன்

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரோஜா. அடையாளம் தெரியாமல் ஆதரவற்று இறந்தவர்களின் சடலங்களை காவல்துறை உதவியுடன் இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்வதைத்  தனது அன்றாட பணியாகச் செய்து வருகிறார். 

""பிறப்பைப் போன்றே இறப்பும் ஒரு நிகழ்வு தான். ஆனால் பிறக்கும் போது நம்மைச் சார்ந்தவர்கள் மகிழ்வார்கள். நம்முடன் இருப்பார்கள்.  இறப்பு எப்போது வரும். எந்த ரூபத்தில் வரும் என்று சொல்ல முடியாது. அப்போது யார் நம்முடன் இருப்பார்கள் என்று தெரியாது. யாரும் இல்லாமல் இறந்தால் என்னவாகும்.  இது ஒரு மாறுபட்ட நிலை.  

எனக்கு 14 வயது இருக்கும் போது சுடுகாட்டுப் பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது நாய்கள் சடலம் ஒன்றை இழுத்து வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த எனக்குப் பதற்றமாகி போலீசுக்கு தகவல் சொன்னேன். உயர் அதிகாரிகள் உடனே வந்து விட்டார்கள். விசாரணை செய்ததில் அந்த சடலம் ஆதரவற்று இறந்தவர். சரியாக அடக்கம் செய்யாமல் விட்டதால் நாய்கள் சாப்பிட்டதாகச் சொன்னார்கள். 

6-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். தொடர்ந்து பள்ளிக்கு செல்லவில்லை. அம்மா கிடையாது. அப்பா மட்டும் தான். அதனால் உறவினர் வீட்டில் தான் வளர்ந்தேன். 

ஏன் ஆதரவற்று இறந்தவர்களின் சடலங்களுக்கு நாம் இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்யக்கூடாது? என்ற எண்ணம் உருவானது. உடனே காவல்நிலையம் சென்று அதிகாரிகளிடம் என்னுடைய ஆசையைச் சொன்னேன். 

"சிறு வயதில் உனக்கு இந்த வேலை தேவையா?' என்று கேட்டு சிரித்தார்கள். "இல்ல சார் நான் பண்றேன். எனக்குப் பயம் கிடையாது. நான் எழுதி வேண்டு
மானாலும் தருகிறேன்' என்றேன். 

சரி என்றார்கள். ஆதரவற்ற இறந்த பாட்டி ஒருவரை அடக்கம் செய்ய வேண்டும் என்று காவல்துறையிலிருந்து தகவல் சொன்னார்கள். நான் சென்று என்னுடைய சொந்த செலவில் அவரை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று மாலை வாங்கி, பால் ஊற்றி அடக்கம் செய்தேன். 

காவல்துறையினரும் என்னுடன் வந்து உதவி செய்தார்கள். இப்படியாக தொடங்கிய சேவை காவல்துறை உதவியுடன் இதுவரை 6 ஆயிரத்து முந்நூறு பேரை அடக்கம் செய்திருக்கிறேன். சென்னையிலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் என்னுடைய செல்லிடப்பேசி எண் இருக்கும். தகவல் சொன்னதும் நான் நேரில் சென்று அனைத்து நடைமுறைகளையும் முடிந்த பிறகு அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்புவேன். 

அந்த நேரத்தில் என்னிடம் பணம் இல்லையென்றாலும் கடன் வாங்கிக் செலவு செய்வேன். தாலியை அடமானம் வைத்து கூட ஆதரவற்ற சடலங்களை எடுத்துள்ளேன் என்று தன்னுடைய சேவை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் ரோஜா. 

இது மட்டும் தான் உங்களுடைய வேலையா?

நான் திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள பிரிண்டிங் பிரஸில் வேலைசெய்கிறேன். மாதம் எனக்கு 20 ஆயிரம் ஊதியமாகக் கிடைக்கும். என்னுடைய கணவர் ராஜேஷ் பெயிண்டிங் வேலை செய்கிறார். ஒரே மகனுக்கு 7 வயது ஆகிறது. கணவர் சம்பாதிப்பதை வீட்டுத் தேவைகளுக்கு வைத்துக்கொள்வோம். என்னுடைய சம்பளம் பெரும்பாலும் ஆதரவற்றவர்களை அடக்கம் செய்வதற்கே சரியாக இருக்கும். 

ஆரம்பத்தில் நான் இது போன்று ஆதரவற்றவர்களை அடக்கம் செய்வதை என்னுடைய கணவர் விரும்பவில்லை. அடிக்கடி சண்டை வரும். வீணாகப் பணம் செலவு செய்கிறாய் என்று சொல்வார். 

நான் மெதுவாகச் சொல்லி புரியவைத்தேன். நான் இப்போது வெளியே செல்கிறேன். எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அநாதையாக இறந்துகிடப்பேன். அதன் பிறகு தான் அடையாளம் கண்டுபிடிப்பார்கள். யாருக்கு எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. என்னுடைய ஆத்ம திருப்திகாகச் செய்கிறேன். நீங்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அதன்பிறகு சண்டை போடமாட்டார். நல்லது பண்ற பண்ணு. எங்க போற சொல்லிட்டு போ தேடுற மாதிரி வைக்காதன்னு சொல்வார். 

கரோனா நேரத்திலும் சாலையோரமாக இருந்தவுங்க பசியால பல பேரு செத்துட்டாங்க. அவர்களை நான்தான் அடக்கம் செய்தேன். மாஸ்க் போடணும். கை கழுவணும்னு சொல்றாங்க. நான் மாஸ்க் போட்டுக்கொண்டுஅடக்கம் செய்யும் வேலை செய்யமாட்டேன். 

பசியால யாரும் சாகக்கூடாது. அதைவிடக் கொடுமை என்ன இருக்கு. எங்க ஏரியுவுல நானே இல்லாதவுங்களுக்குச் சோறு பொங்கி, குழம்பு வைச்சு அவுங்களுக்குக் கொடுத்தேன். மயிலாப்பூரில் துணை ஆணையராக இருந்த திருஞானம் என்னை அடிக்கடி நேரில் வரச்சொல்லி ஊக்குவிப்பவர். அவர் பதவி உயர்வு பெற்று இணை ஆணையராக ஆன பின்பு என்னுடைய சேவையைப் பாராட்ட தவறுவதில்லை. சென்னையிலுள்ள பல பெண் இன்ஸ்பெக்டர்கள் என்னிடம் உரிமையோடும், அன்போடும் பழகுவார்கள். 

இதுவரை என்னுடைய சேவைக்காகப் பலர் என்னை அழைத்து விருது வழங்கியிருக்கிறார்கள். ஆனால் விருதுக்காக நான் இந்த சேவை செய்யவில்லை. மனதுக்குப் பிடித்துச் செய்கிறேன். இப்போது எனக்கு 36 வயதாகிறது.  என்னுடைய இறுதி மூச்சு வரை இந்த சேவை தொடரும் என்கிறார் ரோஜா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT