மகளிர்மணி

வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை

23rd Sep 2020 06:00 AM | - பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

 

இந்தியா- சீனா எல்லை பிரச்னைகளுக்குப் பிறகு அதிகம் பேசப்படுவது நடிகை கங்கனா ரணாவத் - சிவசேனாவின் "நீயா நானா' மோதல்தான். சமீபத்தில் "ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலை அல்ல... திட்டமிட்ட கொலை....' என்று வெடித்த கங்கனா, சில நாட்களில் "மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' போல உள்ளது' என்றார். கங்கனாவின் இந்த கருத்தை எதிர்த்து சிவசேனா பொங்கியது.

விளைவு பாந்த்ரா பாலிஹில் பகுதியில் உள்ள கங்கனாவின் பங்களாவில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் புதுப்பிப்பு பணிகள் நடந்ததாக கூறி வீட்டின் ஒரு பகுதியை இடிக்கத் தொடங்கியது. அதற்காக இரண்டு கோடி நஷ்ட ஈடும் மஹாராஷ்டிரா அரசிடமிருந்து கேட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து வார்த்தை போர் தொடங்கின. மஹாராஷ்டிரா முதல் அமைச்சரான உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக கங்கனா தனது சுட்டுரைப் பக்கத்தில் விமர்சித்தார். நடிகை கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

உபயம், ஹிந்தி நடிகர் சேகர் சுமனின் மகன் நடிகர் ஆத்யாயன் சுமன் . நடிகை கங்கனாவுடன், ஆத்யாயன் "நட்பில்' 2016 வாக்கில் இருந்தவர். ஆத்யாயன் அளித்த பேட்டி ஒன்றில், கங்கனா தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தினார் எனவும், தன்னையும் போதைப் பொருளைப் பயன்படுத்த வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்துதான் கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து மஹாராஷ்டிரா காவல்துறை விசாரணை நடத்த உள்ளனர்.

தொடக்கத்தில் இருந்தே பாஜகவை ஆதரித்து வரும் கங்கனாவை பாஜகவும் வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிவிட்டது. கங்கனாவுக்கு "ஒய்' பிரிவு கமாண்டோ பாதுகாப்பு தந்ததுடன் அது நிரூபணமானது. "ஒய்' பிரிவு பாதுகாப்பில் 11 முதல் 22 காவலர்களுடன் சில கம்மாண்டோக்களும் இருப்பார்கள்.

இவர்களுக்காகும் செலவு ஒரு மாதத்திற்கு 15 முதல் 17 லட்சம் ரூபாயாகும். "ரிலையன்ஸ்' முகேஷ் அம்பானி தனக்கு "ஒய்' பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டதற்கு, "மாதம் 15 லட்சம் ரூபாய் கட்டணமாக நீங்கள் தர வேண்டும்' என்று மத்திய அரசு சொன்னது.

கங்கனாவிற்கு ஆகும் பாதுகாப்பு செலவை, ஒரு படத்தில் நடிக்க 14 கோடிகள் சம்பளமாக வாங்கும் கங்கனா ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகம்தான்..!

மூன்று முறை நடிப்பிற்காக தேசிய விருது பெற்றிருக்கும் கங்கனாவின் ஆரம்ப கால வாழ்க்கை சொகுசு நிறைந்த வாழ்க்கையாக இல்லை. கல்லும் முள்ளும் நிறைந்த பாதையாகவே இருந்தது.

கங்கனாவின் சொந்த ஊர், ஹிமாச்சல் பிரதேசத்தில் சின்னஞ்சிறு கிராமமான "பம்லா' எனப்படும் "சூரஜ்பூர்' . கூட்டுக் குடும்பம் . கங்கனாவின் கொள்ளுத்தாத்தா சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அதனால்தானோ என்னவோ கங்கனாவின் ரத்தத்தில் அரசியல் ஓடுகிறது. தாத்தா ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அப்பாவுக்கு பிசினஸ்.

அம்மா ஆசிரியை. கங்கனாவுக்கு ஒரு அக்கா... ஒரு தம்பி .

தைரியம், கொஞ்சம் அதிரடி சேர்ந்த அட்டகாச கலவைதான் கங்கனா. பள்ளிப் படிப்பை சண்டிகரில் முடித்தார். குடும்பத்தினருக்கு அவரை டாக்டர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. கங்கனாவிற்கோ அறிவியல் பாடம் கசப்போ கசப்பாக இருந்தது. ஆர்வம் இல்லாததால் பிளஸ் டூவில் அறிவியல் பாடத்தில் கங்கனா தோற்றார். அதனால் மருத்துவம் படிக்க நுழையத் தேர்வு எழுத முடியாமல் போனது. அப்பாவுக்கோ கங்கனா மீது கோபம். "சரி...என்னதான் படிக்க நினைத்திருக்கிறாய்' என்று அப்பா கத்த , கங்கனா கூலாக "இன்னும் தீர்மானிக்கவில்லை' என்றார்.

வீட்டில், நடந்து கொண்டிருக்கும் பனிப்போரின் உக்கிரத்திலிருந்து தப்ப, கங்கனா வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருவுக்கு வயது 16 . கங்கனா வந்த இடம் தில்லி. மாடலிங் உலகில் காலடி எடுத்து வைத்தார். கொஞ்ச நாளில், நடிப்பில் பயிற்சி பெறுவதற்காக நாடகக் குழு ஒன்றில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஒரு முறை, நாடகக் குழுவிற்கு சோதனை ஏற்பட்டது. நாடகத்தில் நடிக்க வேண்டிய நடிகர் வரமுடியாமல் போனதால், என்ன செய்வது என்று நாடகக் குழு கலங்கி நின்றது. கை கொடுத்தது கங்கனாதான். தான் நடிக்க வேண்டிய (பெண்) வேடத்துடன், அந்த நடிகர் நடிக்க வேண்டிய ஆண் வேடத்தையும் சேர்த்து நடிக்க... குழுவில் பாராட்டுகள் கிடைத்தன. அந்த தருணம் கங்கானாவை மாற்றி யோசிக்க வைத்தது. முடிவு கங்கனா மும்பை வாசியானார்.

கங்கனா திரைப்படத்தில் நடிக்க முயற்சிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் அப்பா கோபத்தில் கொப்பளித்தார். "கங்கனா.. சினிமாவில் நடிக்கப் போகிறாளா ... கங்கனாவிற்கு என்னமோ ஆயிருச்சு.. இனி ஒரு பைசா அவளுக்கு அனுப்ப மாட்டேன்..' என்று அப்பா கடுகடுத்தார். வீம்பாக கங்கனாவும் தன் குடும்பத் தொடர்பிலிருந்து விலகி நின்றார். பல ஆண்டுகள் பெற்றோருடன் பேசவில்லை.

கிராமப்புறப் பெண் என்பதால் கங்கனாவுக்கு அப்போது ஆங்கிலம் சரிவரப் பேச வராது. "ஆங்கிலம் தெரியலைன்னா ஹிந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்காது' என்று கங்கனாவை பயமுறுத்த... சிறிது சிறிதாக ஆங்கிலம் அருமையாகப் பேசக் கற்றுக் கொண்டார்.

பட வாய்ப்புகளுக்காக அலைந்ததில், ஒரு வழியாக , "கேங்ஸ்டர்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், பார்க்க ரொம்பவும் சின்னப் பெண்ணாக இருப்பதால் நாயகி வேடத்திற்குப் பொருந்த மாட்டார் என்று விலக்கப்பட்டார்.

கங்கனாவுக்குப் பதிலாக ஒப்பந்தமான இன்னொரு நடிகை, படத்தில் நடிக்க வராததால், கங்கனாவையே மீண்டும் நாயகியாக நடிக்க வைத்தார்கள். "கேங்ஸ்டர்' படம் வெற்றி பெற்றது. கங்கனாவுக்கு பாராட்டுகள் விருதுகளை பெற்றுத் தந்த படம் "ஃபேஷன்'. தமிழில் "தாம் தூம்' படத்திலும் நடித்தார்.

அதற்குப் பிறகு நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், திரைக்கதை, வசனம் எழுத பயிற்சி வகுப்பில் சேர கங்கனா நியூயார்க் பயணமானார். கங்கனாவுக்காக "குயின்' படம் தயாரானது. "குயின்' கங்கனாவை புகழின் உச்சத்திற்கு கொண்டு போனது.

கங்கனாவிற்கு 2015-ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது "தணு வெட்ஸ் மனு - ரிட்டர்ன்ஸ்' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்ததற்காகக் கிடைத்தது. கங்கனா பிரபலம் ஆனதும், குடும்ப உறவுகள் துளிர்த்தன.

கரோனா தொற்று தொடங்கும் முன், கங்கனா நடித்து இயக்கிய "மணிகர்ணிகா' பல மொழிகளில் வெளியானது. "இப்படத்தை நான் இயக்கியிருந்தாலும் அதற்கான மரியாதை எனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் உண்டு' என்றார்.

"தலைவி' என்ற பெயரில் உருவாக்கப்படும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்தின் கதையைக் கேட்டபோது, "அவரது வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையும் பல விஷயங்களில் ஒன்றாகவே இருக்கிறது' என்கிறார் கங்கனா.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT