மகளிர்மணி

பதினேழாயிரம் பெண்களுக்கு வேலைத் தேடித் தந்தவர்!

23rd Sep 2020 06:00 AM | - சரவணா

ADVERTISEMENT


சென்னையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தில் 18-60 வயதுக்குட்பட்ட மகளிர் ஏராளமானோர் கூடியிருந்தனர். ஏதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்தவர்கள் என்பதை இவர்கள் முகத்தில் காணமுடிந்தது. கணவனால் கைவிடப்பட்டவர்கள் முதல் சொத்துகளைப் பற்றிக் கொண்டு பிள்ளைகளால் ஏமாற்றப்பட்டவர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் அங்கு குழுமியிருந்தனர். அப்படி அவர்கள் குழுமியது அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வேண்டி. நெல்லையை பூர்வீகமாக கொண்ட எலிசபெத் வீட்டு வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்யும் அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு உருவானது எப்படி எலிசபெத் சொல்கிறார்:

திருமணமாகி சென்னைக்கு வந்த புதிதில் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் வேலை வாய்ப்பு கேட்டுப் பதிவு செய்ய சென்றபோது இவ்வாறு ஓர் அமைப்பை நாம் ஏன் தொடங்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது . கல்வியறிவு இல்லாதவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் வரை எந்த வித பெண்களுக்கும் வேலைத் தேடி தர முடியுமே என்ற சிந்தனையில் உதித்ததுதான் இவ்வமைப்பு. கடந்த 2002-லிருந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.

சமையல் செய்ய.. வீட்டோடு தங்கி வேலை செய்ய.. முதியோரை பராமரிக்க நர்ஸ் எனப் பல பிரிவுகளில் ஆட்கள் இருக்கிறார்கள்.

சென்னை மட்டுமின்றி தில்லி, மதுரை, ஹைதராபாத் போன்ற வெளியூர்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் வீட்டு வேலை பணிகளுக்காக பெண்கள் போகிறார்கள். வெளியூரில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு கட்டாயம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சில நாட்கள் விடுமுறை தரவேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் ஒப்பந்தம் செய்கிறோம். வேலைக்கு அனுப்பியதுடன் எங்களது வேலை முடிந்துவிட்டது என்று நினைப்பதில்லை.

ADVERTISEMENT

அதுபோன்று எங்கள் நிறுவனத்தின் மூலம் செல்லும் பெண்களைத் தவறாக பயன்படுத்த முயற்சிப்பதாக புகார் வந்தால் காவல் துறை உதவியுடன் அவர்களை கண்காணிக்கவும், மீட்கவும் ஏற்பாடு செய்கிறோம். இங்கிருந்து வேலைக்குச் செல்லும் பெண்களும் வேலை பார்க்கும் இடத்தில் எந்தவித தவறான பெயரையும் எடுக்கக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம்.
வேலை கேட்டு வரும் பெண்களை உடனே பணிக்கு அனுப்பமாட்டோம். அவர்களுக்கு வீட்டு வேலை தெரியுமா, சமையல் தெரியுமா, மருத்துவம் தொடர்பான அனுபவம் உள்ளதா என முதலில் ஆய்வு செய்வோம். இதற்காக நர்ஸ் பணிக்காக வரும் நபர்களின் அனுபவ சான்றிதழை ஆய்வு செய்வோம். சமையல் செய்ய தெரியாத நபர்களுக்கு சமையல் கற்று கொடுத்து, வீட்டு வேலை செய்ய பயிற்சி அளித்து பின்தான் வேலைக்கு அவர்களை அனுப்பி வைப்போம்.

கணவனால் கைவிடப்பட்ட ஒரு சில பெண்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள வருகிறார்கள். அப்படி வரும் பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து வேலை கேட்கிறார்கள். அப்படி வரும் பெண்களின் குழந்தைகளை காப்பதும் எங்களது முக்கிய பணியாகிறது. அதன்படி அந்த குழந்தையை விடுதியில் சேர்த்து பராமரிப்போம். இதுபோன்று பல குழந்தைகளை பள்ளியில் சேர்த்து எங்கள் நிறுவனத்தின் செலவிலேயே படிக்க வைத்து வருகிறோம்.

குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே வீட்டை விட்டு வரும் பெண்களுக்கு நாங்கள் கவுன்சிலிங் செய்து அனுப்பிவிடுவோம். 18 வயதுக்கு கீழ் உள்ள எவரையும் நாங்கள் வேலைக்கு அமர்த்துவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றார் எலிசபெத்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT