மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!

23rd Sep 2020 06:00 AM | - ஸ்ரீ

ADVERTISEMENT

 

சின்னத்திரையில் மக்கள் மனதை ஈர்த்த பல தொடர்களில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் " உயிரே' தொடரும் ஒன்று. நடிகை நிரோஷா தயாரிக்கும் முதல் தொடர் இது. இதில் நாயகியாக நடித்து வருபவர் மனிஷாஜித். பொதுமுடக்கத்திற்கு பிறகு தொடர்களின் படப்பிடிப்பு தொடங்கிய போது, இவர், கரோனா பயத்தினால் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக தயாரிப்பு குழுவிடம் தெரிவித்துவிட்டு விலகிக் கொண்டார். ஆனால், ரசிகர்கள் இவருக்கு அளித்த ஆதரவைக் கண்டு, தயாரிப்புக் குழு மீண்டும் இவரையே நடிக்க அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று மீண்டும் நாயகியாக நடிக்கிறார் மனிஷாஜித். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""சிறுவயதில் எதிர்பாராத விதமாக கிடைத்த வாய்ப்புதான் நான் திரைத்துறைக்குள்வந்த கதை. மற்றபடி என் குடும்பத்திற்கும் திரைத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பி.ஏ. வரை படித்திருக்கிறேன். மேற் கொண்டு படிப்பதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறேன். எனது தாய்மொழி தெலுங்கு. ஆனால் பிறந்து, வளர்ந்த தெல்லாம் சென்னையில்தான் அதனால் தமிழ்தான் தெரியும்.

முதல் படம் "கம்பீரம்', சரத்குமாருக்கு மகளாக நடித்திருந்தேன். அதையடுத்து, "செல்லமே', "ஜித்தன்' என குழந்தை நட்சத்திரமாக 40 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அந்த சமயத்தில் தொலைக்காட்சியில் சுகன்யா மேடம் நடித்த "ஆனந்தம்' தொடரில் அவருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. அதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதும் கிடைத்தது. அதன்பின் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டேன்.

ADVERTISEMENT

பின்னர், 14-15 வயதில் பெரியத்திரையில் "ராஜாராணி' சஞ்சீவுடன் "நண்பர்கள் கவனத்திற்கு' என்ற படத்தில் நாயகியாக நடித்தேன். அதைத் தொடர்ந்து "கமரகட்', "விந்தை', "ஐ.டி' போன்ற படங்களில் நடித்தேன். இதற்கிடையில் தொடர்களுக்காக நிறைய வாய்ப்புகள் வந்தன. திரைப்படங்களில் தொடர் வாய்ப்புகள் இருந்ததால், தொடருக்கான நேரத்தை ஒதுக்கமுடியாமல் இருந்தது. அந்த சமயத்தில்தான் "உயிரே' தொடரின் வாய்ப்பு வந்தது. வித்தியாசமான கதையாக இருந்ததால், கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அப்போது, ரசிகர்களிடம் என் கேரக்டருக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

"உயிரே' நான் நாயகியாக நடிக்கும் முதல் தொடர். பெற்றோரால் கொல்லப்பட்ட காதலனின் கருவை வயிற்றில் சுமந்து கொண்டு வேறு ஒருவருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்படும் கதை. புகுந்தவீட்டில் இருக்கும் குழந்தை அம்மா அம்மா என்று பாசமாக இருக்கும். எனவே, வயிற்றில் ஒரு குழந்தையும், மனதில் ஒரு குழந்தையையும் சுமக்கும் பாசப்போராட்டம் தான் "உயிரே'.

கரோனா இடைவெளிக்கு பிறகு ஜூன் மாதத்தில் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு விலக்கு அளித்து, ஒருசில நாள் சூட்டிங் வைத்த போது யாராவது அருகில் வந்தாலே கரோனா பயம் பற்றிக் கொள்ளும். இதனாலேயே, தொடரில் இருந்து விலக நினைத்தேன். எனது அறிவிப்பை கண்டு ரசிகர்கள் தெரிவித்த வருத்தமும், ஆதரவும் என்னை பிரமிக்க வைத்துவிட்டது. இந்த சமயத்தில்தான் தயாரிப்பு குழுவில் இருந்து மீண்டும் அழைத்தார்கள், அதனால் ஒப்புக் கொண்டேன். இப்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் டெம்ப்ரெச்சர் பார்ப்பது, குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு ஒருமுறை சானிடைசர் கொடுப்பது, மாஸ்க் அணிந்து கொள்வது என்று எல்லாம் முறையாக இருப்பதால் இப்போது அவ்வளவாக பயம் தெரியவில்லை. இன்னொரு விஷயம் நாம் இனி கரோனாவுடன்தான் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவதாலும், மீண்டும் நடிக்க வந்துவிட்டேன். ஒரு தொடரிலிருந்து வெளியே வந்துவிட்டு மீண்டும் அதே தொடருக்கு திரும்பி வந்த நாயகி நான்மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

திரைப்படங்களைப் பொருத்தவரை, குறுகிய காலஅளவு மட்டுமே எடுத்துக் கொள்கிறோம். அதில் வெற்றி கிடைத்தால் சந்தோஷம். இல்லை என்றால் அடுத்த புரொஜக்ட் நோக்கி நகர்ந்து விட வேண்டும்.

தொடர்கள் அப்படியில்லை, வருடக்கணக்கில் செல்கிறது. தினம் தினம் நாம் ரசிகர்களின் வீட்டிற்கே செல்கிறோம். நமது முகம் அவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது. இதனால் சின்னத்திரை மக்கள் மனதில் நல்ல ரீச் கொடுக்கிறது'' என்றார்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT