மகளிர்மணி

புற்றுநோயை  வென்றிடுவோம்!

23rd Sep 2020 06:00 AM | -ஜி.அசோக்

ADVERTISEMENT

 

உலகம் முழுவதும் இதயநோயாளிகளைவிட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நோயின் பிடியில் 7 ஆண்டு காலம் சிக்கி, பின் அதிலிருந்து மீண்டு கரை சேர்ந்திருக்கிறார் நடிகை மம்தா மோகன்தாஸ். நோய்க்குப் பின் தளராத பயணம், தேர்வு செய்து நடித்த படங்கள் என எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.  புற்றுநோயின் தாக்கத்திலிருந்து தப்பிப்பது எப்படி? எதிர்த்துப் போராடுவது எவ்வாறு ? என்கிற கருத்தை வலியுறுத்தி, உலக நாடுகளில் சுற்றுபயணம் செய்துவருகிறார் மம்தா.

பொதுவாக,  நடிகைகள் தங்கள் மேனிஅழகைப் பேணி காப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை. தமிழ், மலையாள சினிமாக்களில் பிரபலமாக திகழ்ந்த தருணத்தில் ஒரு நாள் உருக்குலைந்து போனார் மம்தா மோகன்தாஸ். தனிமனிதத் தன்னம்பிக்கையையும் துணிச்சலையையும் துணையாகக் கொண்டு புற்றுநோயை எதிர்த்துப் போராடி வென்ற வீராங்கனை மம்தாவுடன் பேசினோம்....

 ""எனக்கு புற்றுநோய் வந்ததும் ஏழு வருடங்கள் கஷ்டப்பட்டேன்.  எனக்கு வந்த புற்றுநோயை நானாகத்தான் கண்டு பிடித்தேன். முதலில், என் உடலில் கட்டி தோன்றியபோது "இது கேன்சர் கட்டிதானா?' என்கிற சந்தேகம் எழுந்தது. டாக்டரிடம் சென்று பரிசோதித்தபோது நான் நினைத்தது உண்மை என்று நிரூபணமானது. நான் அடிக்கடி டென்ஷனாகும் இயல்பு கொண்டவள். அதனால்கூட எனக்கு புற்றுநோய் வந்திருக்கலாம்.  புற்றுநோயை எதிர்த்துப் போராடி, நான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று எனக்கு நானே உறுதி செய்துகொண்டேன். எல்லா கஷ்டங்களையும் அனுபவித்தேன். 

ADVERTISEMENT

இதுபோல வேறு ஒரு பெண்ணுக்கு நேரவே கூடாது  என்றுதான் நான் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறேன். சிலருக்கு சூழ்நிலை காரணமாக புற்றுநோய் வந்துவிட்டால், அதற்காக அவர்கள் கலங்கிப் போய், பயந்துவிடக் கூடாது. துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும் என்பதைச் சாதாரணமான ஒருவர் எடுத்துச் சொல்வதைவிட, ஏற்கெனவே பாதிக்கப்பட்டு அந்த நோயிலிருந்து மீண்டுவந்த நான் சொல்வதைக் கேட்பது அவர்களுக்கு தைரியத்தை கண்டிப்பாக தரும் என்று நம்புகிறேன்.

உடலில் உருவாகும் செல்களுக்கு பிறப்பு, இறப்பு என வளர்ச்சியின் காலகட்டங்கள் இருக்கின்றன. அது தவறும்போது நோய் ஏற்படுகிறது. அதிலும் பல ஆண்டுகளாக மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது புற்றுநோய் . புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல. ஆரம்பக்கால நோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்கின்றனர் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்.

 மாறிவரும் ரசாயன உலகில் புதிது புதிதாக நோய்கள் வரத்தான் செய்கின்றன. அதேநேரத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வும், அடிப்படைத் தெளிவும், தற்காப்பு அக்கறையும் இல்லாமல் அதிலிருந்து தப்பிக்க முடியாது.  குறைந்த பட்சம் கேன்சர் எனப்படும் புற்றுநோய் என்றால் என்ன? என்பதையாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். 

"நம் எல்லோருடைய உடலிலும் புற்றுநோய் செல்கள் இருக்கின்றன' என்று சொல்கிறது விஞ்ஞானம். வழக்கமாக உடலில் தூங்கிக்கொண்டிருக்கும் செல்கள், நாம் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கும் வரை எந்தவிதத் தொல்லையும் தராமல் நம்மோடு வாழ்ந்து, நம்மோடு இறந்து போகும். சிலருக்கு பரம்பரை பரம்பரையாக வருவது தெரியாது. திடீரென ஒரு தலைமுறையில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். புதிதாகச் சிலருக்கு புற்றுநோய் வருவது என்பது அவர்கள் தானாக வரவழைத்துக் கொள்வது. அது பாட்டுக்கு தூங்கிக்கொண்டிருக்கிற செல்களை நாமே தூண்டிவிட்டு வரச்செய்வதும் ஒரு காரணம். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, தவறான உணவு வகைகளை பயன்படுத்துவது, பொதுவாக வாழ்க்கை நெறிமுறைகளை மீறி செயல்படுவது ஆகியவை முக்கியக் காரணங்களாகும். 

உணவில் கவனம் தேவை: 

உண்ணும் உணவில் உப்பை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது, அதிக எண்ணெய்யைப் பயன்படுத்துவது, கண்ட நேரத்துக்கு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது. ஏனென்றால், நாம் உண்ணும் உணவு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் தன்மை கொண்டது. அது மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், தலைக்குப் பயன்படுத்தும் ஷாம்பூ போன்ற பெரும்பாலானவற்றில் புற்றுநோயைப் பரப்பக்கூடிய கெமிக்கல்கள் கலந்திருக் கின்றன என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இவையெல்லாம் தெரிந்திருந்தும், அவற்றையே நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறோம். நிறுவனங்கள் இவற்றை உற்பத்தி செய்து, நம் தலையில் கட்டுகின்றன. இப்போது இருப்பவர்கள் நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவையே விரும்புவதில்லை. குறிப்பாக, இளம் தலைமுறையினர் விரும்பிச் சாப்பிடும் பீட்சா, பர்கரில் நிச்சயம் ஆபத்து இருக்கிறது. முதலில் பீட்சா என்பது ஒரு ரொட்டி. அதன் மேல் சீஸ், அதன் மேல் ரொட்டி வைப்பார்கள். அதில் வெறும் மைதா மற்றும் எண்ணெய் மட்டும் கலந்திருக்கவில்லை. மெல்லியதாக இருக்கிற பீட்சா, தடிமனாகத் தெரிவதற்காக ஒரு கெமிக்கலையும், இன்னும் பல பொருள்களையும் சேர்க்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு கிளைகளுக்கும் அனுப்புவார்கள். கிளையிலிருப்பவர்கள், பீட்சாவை ஃப்ரீஸரில் வைப்பார்கள் அதற்காக ஃப்ரீஸருக்குள் கெமிக்கலைப் போடுவார்கள் அதைப் பல வாரங்கள் கழித்து எடுத்து, ஃப்ரெஷ்ஷாக இருப்பதற்காக மீண்டுமொரு கெமிக்கலைச் சேர்த்துப் பயன்படுத்தி விற்பனை செய்வார்கள். இங்கேதான் நமக்கு பல பிரச்னைகள் ஆரம்பமாகிறது என்பதை உணர்ந்து தவிர்க்க வேண்டும்.

கட்டி வந்தால் கவனிக்கவும்:

 மார்பகப் புற்றுநோயினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 43 சதவிகிதம் பெண்களுக்கு இந்நோயின் தாக்கம் உள்ளது. இந்தியாவில், குறிப்பாக பெங்களூரில் அதிகமாக 36.6 சதவிகிதம் பெண்கள் அவதிப்படுகின்றனர். கேன்சர் மருத்துவமனைகளும் நோயாளிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த காலம் போய், சாதாரணக் காய்ச்சல்போல தற்பொழுது எல்லா தரப்பிலும் புற்றுநோய் பரவிவிட்டது. அதன் பின்விளைவுகள் தான் கிரகிக்க முடியாத நிலையில் உள்ளன. குக்கிராமங்களில் இந்நோய் பற்றிய தெளிவு இல்லை. ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார நிலையங்களில் முகாம்கள், வசதி வாய்ப்புகள் வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கல்வி அறிவு குன்றிய ஏழைப் பெண்களிடம் நோய் குறித்த புரிதலுக்கு வகை செய்ய வேண்டும். 

 குடும்பம், வேலை என பெண்கள் தங்கள் உடல் நலனில் எப்போதுமே அக்கறை செலுத்துவதில்லை. மார்பகத்தில் ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா அல்லது அக்குளில் நெறி கட்டியிருக்கிறதா என சுய பரிசோதனை செய்ய வேண்டும். மார்பகத்தில் ஏற்படும் வலி, ரத்தம் கலந்த திரவக் கசிவு, முலைக்காம்பில் வலி, எரிச்சல், தோல் சிவந்து போதல், செதில் செதிலாக உரிதல், உள்பக்கமாக திரும்பியிருத்தல், மச்சம் அல்லது மருவில் மாற்றங்கள் ஏற்பட்டால் உதாசீனப்படுத்தாமல் முறையாக சோதனை செய்து சிகிச்சை எடுப்பது நல்லது. மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது அரிது. 

எனவேதான், இந்த அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேமோகிராபி, ஸ்கேன் போன்ற முறைகளால் மார்பகப் புற்று இருப்பதை கண்டுபிடிக்க இயலும்.

உணவில் தொடங்கும் பாரம்பரியம்:

ஆரம்பத்தில் இருந்தே மருந்துகள் தெளிக்கப்படாத காய்கறிகள், மரபணு மாற்றம் இல்லாத பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கோதுமைப்புல் சாறு, வில்வத் துவையல், முள் சீதாப்பழம் , கறுப்பு திராட்சையின் விதைகள், புரோக்கோலி போன்றவற்றில் புற்றுச் செல்களை அழிக்கும் பலம் இருப்பதாக இயற்கை வைத்திய ஆர்வலர்கள் கூறுகிறார்கள். பக்க விளைவு இல்லாத நம் உணவுகளை எடுத்துக் கொண்டு நோய் சீற்றத்தை தவிர்க்கலாம். 

 நம் பாரம்பர்யம் என்பது பட்டு வேட்டி சட்டையிலும் புடவையிலும் மட்டுமல்ல உணவில்தான் தொடங்குகிறது. கிராமத்து வீடுகளின் மேல்தளத்திலும் செல்போன் கோபுரங்கள் முளைத்து விட்டன. 24 மணிநேரமும் புற்றுநோய் பரப்பும் மொபைலின் கதிர்வீச்சில் வாழப்பழகி வரும் மக்களுக்குத் தேவையானது, விழிப்புணர்வும் இயற்கை சார்ந்த வாழ்க்கையும்தான். 

மன அமைதி, நல்ல எண்ணங்கள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, தியானம், மருத்துவ தொடர் ஆலோசனைகள் மற்றும் அன்பு வழியில் மனதை பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்துக்கான நம்பிக்கையை நண்பர்களும் உறவுகளும் உருவாக்கினால் மட்டுமே அவர்களால் மீண்டு வர முடியும். நோய்களை வென்று தன்னம்பிக்கையோடு பயணப்படுவதுதான் முன்மாதிரியான வாழ்க்கை. புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது வெறும் உடல் வலி அல்ல. ஃபீனிக்ஸ் பறவைபோல  தீ கங்குகளை உதறி, உயிர்த்தெழும் வேலை. காலத்தின் மீதான விரக்தியின் வலி. ஆனபோதும் புற்றுநோயை வென்றிடுவோம்'' உதடுகள்  பிரியாமல் சிரிக்கிறார் மம்தா மோகன்தாஸ்.   

உணவு...உஷார்...

பொதுவாக புற்றுநோய்க்கு என்னதான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகளை உற்றுநோக்கினால்  இதுதான் என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், ஒருசிலவற்றை கண்டு பிடித்திருக்கிறார்கள். முதலாவதாகப் பரம்பரை. அதாவது மரபு வழி.  உங்கள் குடும்பத்தில் தாய், தந்தை வழி இந்த நோய் இருந்தால் நிச்சயம் அலட்சியப்படுத்தாமல் சோதனை செய்துகொள்வது மிக அவசியம். புகையிலை, கூரையாக வேயப்படும் ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு  மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும்  இந்நோய் பரவுகிறது. உதாரணமாக, பெரிய எண்ணெய் சட்டிகளில் லிட்டர் கணக்கில் எண்ணெய் ஊற்றி, பாக்கெட் மசாலாக்களில் ஊற வைத்து சிவக்க, மணக்க பொரித்துத் தரப்படும் சிக்கனை ரசித்து சாப்பிடுகிறோமே, அது எந்த வகையான எண்ணெய் என்பதைவிட, புது எண்ணெய்யா என யோசிப்பதில்லை.   நாள்பட்ட பல்வேறு நோய்களுக்கு இதுவும் காரணம். இதன் வீரியத்தை குறைக்கும் சக்தி ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுக்கு உண்டு. அதற்குத்தான் சத்துள்ள இயற்கையான காய்கறிகளையும் பழவகைகளையும் உண்ணச் சொல்கிறார்கள். 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT