மகளிர்மணி

சமையல்   சமையல்

23rd Sep 2020 06:00 AM | - ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

ADVERTISEMENT

பூசணிக்காய் தோசை

 

தேவையானவை:
அரிசி - 500 கிராம்
பூசணிக்காய் - 1 கீற்று
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை: அரிசியை முக்கால் மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து களைந்து கிரைண்டரிலிட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அரிசி பாதி மசிந்தவுடன் நறுக்கி வைத்திருக்கின்ற பூசணிக்காய்த் துண்டுகளையும் சேர்த்து மைபோல அரைத்து, பாத்திரத்தில் எடுத்து உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவுப் பதத்தில் கரைத்து கொள்ளவும். பின்னர், அடுப்பில் தோசைக் கல்லை வைத்து காய்ந்தவுடன் தோசையாக ஊற்றி பொன்னிறமாக வந்ததும் எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஸ்வீட் தோசை


தேவையானவை:
கோதுமை மாவு - 250 கிராம்
வெல்லம் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
ஏலக்காய் - 5
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானவை


செய்முறை: வெல்லத்தைத் தூள் செய்து நீர்விட்டுக் கரைத்து சுத்தமாக வடிகட்டிக் கொண்டு ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்க்கவும். முந்திரிப் பருப்புகளை மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். மாவில் வெல்லக் கரைசல், முந்திரிப் பருப்பு தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து தோசைமாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து காய்ந்ததும் எண்ணெய்த் தடவிவிட்டு முறுகலாக வருவதற்கு மாவை மெல்லியதாக இழுக்க வேண்டும். மொறுமொறுவென தோசை வரும்.

மசால் தோசை

 

தேவையானவை:
புழுங்கல் அரிசி - 300 கிராம்
பச்சரிசி - 200 கிராம்
உளுந்து - 150 கிராம்
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கோதுமைமாவு - 100 கிராம்
உருளைக் கிழங்கு - அரைகிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - சிறுதுண்டு
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 100கிராம்
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி


செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து இவற்றை ஊற வைத்து தோசைமாவாக அரைக்கும்போது வெந்தயத்தையும் சேர்த்து அரைத்து வைத்து - மறுநாள் காலை கோதுமை மாவை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். உருளைக் கிழங்குகளை வேக வைத்து தோலுரித்து பிசைந்து உதிர்த்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்ததும் முந்திரிப் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து இறுகி வரும் நிலையில் கீழே இறக்க வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நெய்யைத் தடவி தோசையாக வார்த்து, மூடியால் தோசையை மூடி வேகவிட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து உருளைக் கிழங்கு கலவையை ஒரு கரண்டி எடுத்து தோசை நடுவில் வைத்து பாதியாக மடித்து வேக வைத்து எடுக்க வேண்டும்.
 

அவல் தோசை:

 

தேவையானவை:
பச்சரிசி - 100 கிராம்
புழுங்கல் அரிசி - 100 கிராம்
அவல் - 100 கிராம்
புளித்த தயிர் - 100 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை: மேலே சொன்ன இரண்டு அரிசியையும் ஒன்றாக மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு களைந்து கிரைண்டரில் நைசாக அரைத்து எடுக்க வேண்டும். அவலைத் தனியாக நைசாக அரைத்து அதனுடன் புளித்த தயிரில் உப்பு சேர்த்து கலந்து அதை தோசைமாவுடன் கலந்து தோசை மாவுப் பக்குவத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை நைசாக லேசாக தோசையாக இழுத்து மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

 

கேரட் தேங்காய் தோசை

 

தேவையானவை :
பச்சரிசி - 200 கிராம்
கேரட் - 100 கிராம்
தேங்காய் - 1 மூடி
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப


செய்முறை: பச்சரிசியை இரண்டு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். கேரட்டையும், தேங்காயையும் துருவி கொண்டு அரிசியுடன் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். அதில் உப்பு சேர்த்து தோசை மாவுப் பதத்தில் கரைத்துக் கொண்டு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய்த் தடவி மாவை ஒரு கரண்டி எடுத்து நைசாக விட்டு மேலே எண்ணெய்விட்டு சிவக்க வேக வைத்து எடுக்க வேண்டும்.

 

கேப்பை தோசை

 

தேவையானவை:
கேப்பை - 100 கிராம்
கோதுமை - 100 கிராம்
உளுந்தம் பருப்பு - 50 கிராம்
புளித்தத் தயிர் - கால் கிண்ணம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை: கேப்பை, கோதுமை, உளுந்தம் பருப்பை மிஷினில் மாவாக்கி புளித்த தயிர் உப்பு போட்டு தண்ணீர் விட்டு கரைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து மாவு தயாரித்து அடுப்பில் தோசை கல் காய்ந்ததும் எண்ணெய் தடவி மாவை ஒரு கரண்டி விட்டு எண்ணெய்விட்டு சிவக்க விட்டு எடுக்க வேண்டும். (மாவு நீர்க்க கரைக்க வேண்டும்.)

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT