மகளிர்மணி

கதை சொல்லியின் கதை!

16th Sep 2020 12:00 AM | - ந.முத்துமணி

ADVERTISEMENT


கூட்டுக் குடும்பங்கள் வளமாக இருந்தபோது, பாட்டிகளின் கதகதப்பில் பேரக்குழந்தைகள் வளர்ந்தபோது, பாட்டி சொல்லும் கதைகளுக்காக இரவுப்பொழுதை எதிர்நோக்கிக் காத்திருந்த காலம் இருந்தது.  

பள்ளிகளில் பாடங்கள் நடத்தும்போது, குழந்தைகளுக்கு எளிதில் புரியவைக்க ஆசிரியர்கள்கூட கதை சொன்ன காலமும் இருந்தது. கோயில்களுக்குச் சென்றால், பக்திக் கதைகளை கதாகாலட்சேபமாக  சொன்ன காலம் இருந்தது. 

திரைப்படம், தொலைக்காட்சி, முகநூல், சுட்டுரை, கட்செவி போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கும்போது, கதை சொல்லும் கலைக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கீதா ராமானுஜம். 

பெங்களூரில் பல பள்ளியில் 20 ஆண்டுகள் ஆசிரியராகவும் நூலகராகவும் பணியாற்றிய கீதா, உலகின் தலைசிறந்த கதைசொல்லியாக புகழ்பெற்றிருக்கிறார். 

ADVERTISEMENT

கதை சொல்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, கதை சொல்லும் கலையை வளர்த்தெடுக்கும் எண்ணத்தில் 1998-ஆம் ஆண்டில் பெங்களூரில் "கதாலயா-கதை சொல்லும் கோயில்' என்ற பெயரில் அறக்கட்டளையை நிறுவி, 22 ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று கதை சொல்லும் கலையை விதைத்து 

வரும் கீதா தனது கதையை இங்கே விவரிக்கிறார்...

""ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் நமது கலாசாரத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்காகச் சொல்லப்பட்டன. இந்தக் கதை சொல்லும் கலையைப் பட்டுப்போகாமல் காப்பது நம் அனைவரின் கடமை. 

பொழுதுபோக்காக அல்ல, கற்பித்தல் - கற்றலுக்காகவே கதை சொல்லும் வழக்கம் இந்தியாவில் காணப்பட்டது. குருகுலக் கல்வி முறையில் ஒரு கருத்தியல் அல்லது மாண்புகளைப் போதிப்பதற்கு கதைகளைத்தான் கருவிகளாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கதைகள் வழியாகவே மரபுகள், வாய்மொழிச் சட்டங்கள், ஒழுக்க நெறிகள், பண்பாடு, இணக்கம், புரிதல் போன்றவை மனித மனங்களில் விதைக்கப்பட்டு வந்துள்ளன. 

அந்த வகையில், கதைகள் வழியே எனக்கு தமிழையும், நல்ல பண்பியல்புகளையும் கற்றுத் தந்தவர் என் அம்மா. தஞ்சாவூரைச் சேர்ந்த என் அம்மா, மும்பையில் குடியிருந்தார். 1956-இல் நான் பிறந்தேன். ஆங்கில
வழிக் கல்வியில் பயின்றதால், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி மொழிகளைக் கற்றுவந்தேன். 

அம்மாவுக்கு நான் தமிழ் கற்க வேண்டும் என்று ஆர்வம். அதனால் வீட்டில் தமிழில்தான் பேசுவார். மேலும், கதைகள் மூலம் பழமொழிகளை அறிமுகம் செய்து, தமிழைக் கற்றுத் தந்தார். 

வீட்டில் நிறைய பேர் இருந்ததால், என்னை துவையல் அரைக்கச் சொல்வார்கள். ""வேகமாக அரைக்காதே, மெதுவாக அரை'' என்று சொல்லிவிட்டு, "ஈ' மாதிரி மறக்காதே என்று கூறுவார். "ஈ' ஏன் தன் பெயரை மறந்தது என்பதற்கும் ஒரு கதை சொல்வார். "தனது பெயரை அறிந்துகொள்வதற்காக பலரிடம் சென்று, "கொழுகொழு கன்றே, கன்றின் தாயே, தாய் மேய்க்கும் இடையா, இடையன் கைக் கோலே, கோல் வளரும் கொடி மரமே, கொடி மரத்தின் கொக்கே, கொக்கு தின்னும் மீனே, மீன் பிடிக்கும் வலையா, வலையன் கைக் கலயமே, கலயம் செய்யும் குயவா, குயவன் கையின் மண்ணே, மண்ணில் வளரும்  புல்லே, புல்லைத் தின்னும் குதிரையே... என்  பெயர் என்ன?' என்று கேட்டதாகச் சொல்வார். 

அது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. கதையின் நடுவில் அந்த "ஈ' யாரிடம் போய்க் கேட்டது என்பதுபோல சில கேள்விகளையும் கேட்டு என் கவனத்தைச் சிதறாமல் பார்த்துக்கொள்வார்கள். இப்படி பேசிப் பழகியதால் நான் தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டேன். 

அதேபோல, அப்பாவுக்கு நான் ஆங்கிலம் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆவல். அதற்காக இரவு நேரங்களில் வரலாற்று நாயகர்கள் பற்றிய கதைகளை ஆங்கிலத்தில் கூறுவார். ரோமாபுரி மன்னர்களில் தொடங்கி  ஹிட்லர், நெப்போலியன், ஜூலியஸ் சீசர், ராஜாக்கள், ராணிகள், இதிகாசக் கதைகளை எல்லாம் ஆங்கிலத்தில் கூறி வந்ததால், என் ஆங்கில அறிவும் வளர்ந்தது. 

அப்பா, அம்மாவிடம் கதைகளைக் கேட்டுக் கேட்டுத்தான்  மொழி உச்சரிப்பையும், எப்படிப் பேசுவது என்ற பக்குவத்தையும் பெற்றேன். 

அம்மா, முகபாவங்களோடு கதை சொன்னால், அப்பா, மொழி உச்சரிப்பு, ஏற்ற இறக்கத்தோடு கதை சொல்வார். இந்த இரண்டுமே என் மனதில் பதிந்துவிட்டது. கதை சொல்லும் அனைவருக்கும் கேட்கும் ஆர்வம் இருக்க வேண்டும். வெறுமனே செவிவழிக் கேட்பதல்ல கதை. கதையின் உட்பொருளாக இருக்கும் மணத்தை நுகர வேண்டும். அப்படிக் கேட்டால், கேட்டது எதையும் மறக்க மாட்டோம். 

39ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது, ஒரு பொருளை மனதில் பதியும்படி குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லித் தருவது என்று யோசித்தபோது, அதற்கு கைகொடுப்பது கதைகள் என்பதை உணர்ந்தேன். 1982-ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறேன். 

குழந்தைகளின் பெயர்களை வைத்து மிட்டாய்க் கதைகளை சொல்வேன். நான் வேலை செய்த பள்ளி 100 ஏக்கர் பரப்பில் அமைந்திருந்ததால், வகுப்பறைக்கு வெளியே சென்று குளங்கள், மரங்களிடம் கூட்டிச் சென்று வரலாற்றுக் கதைகளைச் சித்தரித்து கதைகளைச் சொல்வேன். 

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதே பள்ளியில் நூலகராகப் பணி அமர்த்தப்பட்டேன். அங்கு நிறைய நூல்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நூலகத்தில் நூல்களை வாங்கும் குழந்தைகள் இரண்டொரு நாட்களில் அவற்றைத் திருப்பி தருவார்கள். அந்த நூலில் இருந்த கதையைக் கேட்டால் திகைப்பார்கள். அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் நூலைப் படிக்கவில்லை என்று. 

அந்தக் குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக, அந்த நூல்களின் கதைகளைச் சொல்லி கடைசிப் பகுதியை மட்டும் சொல்லாமல் விட்டுவிடுவேன். விட்டுப்போனப் பகுதியை வீட்டில் படித்துவிட்டு வந்து சொல்லும்படிக் கூறுவேன். அது நல்ல பலனைத் தந்தது. அப்போதுதான், கதை சொல்லும்போது குரல் ஏற்ற இறக்கங்கள், குரல் மாற்றிப் பேசுவதைச் சேர்த்தேன். அதைக் கேட்டுக் கொண்டிருந்த தந்தை ஒருவர், கதை சொல்வது குறித்து பயிலரங்கம் நடத்துமாறு கேட்டுக் கொண்டார். 

1996-இல் நடத்திய அந்தப் பயிலரங்கத்தை கேட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர், அதை பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டார். அந்தச் செய்தி வெளியானதும்,  ஏராளமானோர் என்னைத் தொடர்புகொண்டு கதை சொல்லும்படிக் கேட்டுக் கொண்டனர். 

பாடங்களை கதைகளால் சொல்லித் தருவது என்று சில நண்பர்கள் கூடி முடிவு செய்து, 1998-ஆம் ஆண்டு "கதாலயா' என்ற கதை சொல்லும் கோயிலைத் தொடங்கினோம். முதலில் 6 பள்ளிகளில், குறிப்பாக ஊரகப் பகுதிகளில் கதைசொல்லி பாடங்களைப் போதிக்கும் முறையைக் கையாண்டோம். "ஒரு கதை- ஒரு கருத்து' என்ற அடிப்படையில் செயல்பட்ட எங்கள் முயற்சி விரைவில் பிரபலமானது. எங்கள் திட்டத்துக்கு பலர் நிதியுதவி அளித்தார்கள். 
2002-இல் ஜப்பானில் கதை சொல்வது குறித்துப் பேச அழைத்தார்கள். 2003-இல் தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் என்று தொடங்கி, அடுத்தடுத்து உலகின் பல நாடுகளுக்குச் சென்று கதை சொல்லும் கலையைக் கற்றுத் தந்து வருகிறேன். இதுவரை 43 நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். கதை சொல்லிகள் யாரும் இத்தனை நாடுகளுக்குச் சென்று கதைசொல்லும் கலை குறித்துப் பேசியதில்லை என நினைக்கிறேன்.

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்றுள்ளேன். "கதாலயா' வாயிலாக இதுவரை 85 ஆயிரம் பேரை கதைசொல்லிகளாக உருவாக்கியுள்ளேன். அன்றைக்கு சிறு விதையாக ஊன்றப்பட்ட கதை சொல்லும் கலை, இன்றைக்கு ஆலமரமாக விரிந்து பரந்துள்ளது. கதை சொல்வதில் இந்தியர்கள் தலைசிறந்தவர்களாக இருக்கிறார்கள். 

கதாலயாவின் துணை அமைப்பான பன்னாட்டுக் கதை சொல்லும் அகாதெமி வாயிலாக, சான்றிதழ் பயிற்சி தவிர பட்டயப் பயிற்சியையும் தொடங்கியிருக்கிறோம். நாட்டுப்புறக் கலைகள், கதகளி, நாடகம், நாட்டியம் வாயிலாக  கதைகளை 50 வகைகளில் எப்படிச் சொல்லலாம் என்பதை பட்டயப் பயிற்சியில் கற்றுத் தருகிறோம். 

குழந்தைப் பருவத்தில் இருந்தே கதைகளைச் சொல்லித் தர வேண்டும். குழந்தைகள் மட்டுமல்லாது, பெரியவர்களை நெறிப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் கதைகள் பயன்படுகின்றன. அதனால் என்னை பெருநிறுவனங்களும் அழைத்து பேசவைக்கிறார்கள்.

இயற்கை, விலங்குகள் சார்ந்த கதைகள் எப்போதும் நன்றாக இருக்கும். கதையின் முடிவில் அறிவுரைகளைக் கூற வேண்டியதில்லை. அது குழந்தைகளை வெறுப்பாக்கிவிடும். கதைகளை மட்டும் சொன்னாலே குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். 

-அவர் சொல்லி முடிக்கையில் நல்ல உண்மைக் கதை ஒன்றைக் கேட்ட திருப்தி நமக்கும் ஏற்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT