மகளிர்மணி

லட்சத்தீவின் முதல் பெண் மருத்துவர்!

16th Sep 2020 12:00 AM

ADVERTISEMENT


கேரள கடற்கரையிலிருந்து 192 முதல் 320 கி.மீ. தூரத்தில் அரபிக்கடலில் சிதறிக்கிடக்கும் 27 லட்சத்தீவுகளின் கூட்டம் நீண்ட காலம் தாய் நிலத்துடன் தொடர்பின்றிக் கிடந்தது. அங்குள்ள மக்களுக்கு 1947 ஆகஸ்டு 15 -இல் இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தி அந்த ஆண்டு நவம்பர் மாதம் கள்ளிக்கோட்டையிலிருந்து ஒரு கப்பல் வந்து சேர்ந்த பிறகே எட்டியது. நாடு விடுதலை அடைந்த பின்னரும் சமூக நலப்பணிகள் அங்கு வெகுநாள் கழித்தே தொடங்கப்பட்டன. பேய் அலைகளின் நடுவே சிக்கக் கிடக்கும் அத்தீவுகளுக்குச் சரியான போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்ததே காரணமாகும்.

லட்சத்தீவில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதலே இஸ்லாம் மதம் பரவத் தொடங்கியது. அங்குள்ள பெரும்பான்மை மக்கள் பழங்குடியினர் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவர்களாவர். இருபதாம் நூற்றாண்டின் நாகரிக வளர்ச்சி இன்னதென்று அறியாத, கல்வியறிவு அற்ற அத்தீவு வாசிகளில் ஒரு பெண் உதயநிலவென வெளிவந்தாள். அவர் பெயர் ரஹ்மத் ஆம், அவர் ஒரு முஸ்லீம் பெண். அந்தத்தித்தீவில் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த அப்பெண்ணுக்குக் கல்வியில் இருந்த ஆர்வம் அளவிடற்கரியது.

1954 - செப்டம்பர் மாதம் ஒரு நாள் அந்தத்தித் தீவுக்கு வந்திருந்த ஒரு பாய்மரக் கப்பல் மங்களூருக்குத் தேங்காய் கொப்பரை ஏற்றிக் கொண்டு செல்லவிருந்தது. அதன் கேப்டனிடம் ரஹ்மத் தன்னையும் அக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்குப் பள்ளியில் சேர்ந்து, ஒரு நர்ஸ் ஆக வரவேண்டும் என்று அடம்பிடித்தாள். அவளது ஆர்வத்தை கண்ட அந்த கேப்டனும் அவளைக் கப்பலில் ஏற்றிக் கொண்டார். சாமர்த்தியமாகத் தன் சகோதரனையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்.

கப்பல் பயணமாகியது. ஆறாம் நாள் மாலை மங்களூரை நெருங்கும் சமயம் பெரும் சூறாவளியில் சிக்கிக் கப்பல் இரண்டாக உடைந்தது. அதிலிருந்த அனைவரும் கடலில் குதித்துத் தப்ப முயன்றனர். அதில் ரஹ்மத்தும் ஒருவர்.

ADVERTISEMENT

மீன்குஞ்சுக்கு நீந்தக்கற்றுக் கொடுக்கணுமா என்பது போல, லட்சத்தீவு வாசிகளுக்குக் கடல் ஒரு கண்ணாமூச்சித்திடலாகும். ரஹ்மத் நன்றாக நீந்துவார், அன்று இரவு முழுவதும் உடைந்த கப்பல் மரத்துண்டு ஒன்றைப் பற்றிக் கொண்டு மிதந்து கொண்டிருந்தார். மறுநாள் காலை சுயநினைவு அற்ற நிலையில் அவர் கரையோரம் ஒதுக்கப்பட்டார். இன்னொரு பக்கம் அவரின் சகோதரன் கிடந்தார். மங்களூர் துறைமுக அதிகாரிகள் அவர்களைச் சில நாள் பாதுகாத்து வந்தனர். பின்னர் கள்ளிக் கோட்டைக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளிக்கோட்டையிலிருந்த லட்சத்தீவு நிர்வாக அலுவலகம் அவர்களை அங்கிருந்த பள்ளியில் சேர்த்தது. அவர்கள் இருவரும் ஆச்சரியமான வகையில் படிப்பில் ஆர்வம்காட்டி, முதன்மையாக வந்தார்கள், பழங்குடியினருக்குள்ள முழு கல்விச் சலுகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ரஹ்மத் வாரங்கல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, 1965- இல் டாக்டர் பட்டம் பெற்றார். அவர் சகோதரன் திருவனந்தபுரம் விவசாயக் கல்லூரியில் எம்.எஸ்.எஸி பட்டம் பெற்றார்.

அன்றிலிருந்து ரஹ்மத் லட்சத்தீவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமையுடன் கவரட்டியில் தம் மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வருகிறார். 1999-ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.

- கிளமெண்ட் ஈசுவர் எழுதிய "முதன்மைப் பெண்டிர்' நூலிலிருந்து.

ADVERTISEMENT
ADVERTISEMENT