மகளிர்மணி

இந்தியாவின் நீண்ட கால சுற்றுலா வழிகாட்டி!

பூா்ணிமா

இந்தியாவின் மேற்குப் பகுதியில் சுற்றுலா வழிகாட்டியாக 50 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 92-ஆவது வயதில் ஓய்வு பெற்றுள்ள ரமா கந்த்வாலா, இந்தியாவில் நீண்ட காலம் அரசு சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றியவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

தற்போது மும்பையில் வசித்து வரும் இவருக்கு, 94 வயதாகிறது. இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரரும் கூட. ரங்கூனிலிருந்தபோது, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) சேர்ந்து, கேப்டன் லட்சுமி சகாலுடன் பணியாற்றியபோது, நேதாஜியை சந்தித்தவர். தன்னுடைய கடந்த கால அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார் ரமா கந்த்வாலா:

""1943- ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது பர்மாவில் (இன்றைய மியான்மர்) உள்ள ரங்கூனில் ( இன்றைய யாங்கோன்) இந்திய விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அதிகாரியாக என்னுடைய தாயார் செயல்பட்டு வந்தார்.

கூடவே, ஆசாத் ஹிந்த் அமைப்புக்கு நன்கொடை வசூலித்து வந்தார். என்னையும் , என்னுடைய சகோதரியையும் ஐஎன்ஏவில் சேர்த்துவிட்டார். அப்போது என்னுடைய வயது 17. ராணுவ பயிற்சி மட்டுமின்றி கூடவே செவிலியர் பயிற்சியும் அளித்தனர்.

இருந்தாலும் ரங்கூனில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வாழ்க்கையை அனுபவித்து வந்த எனக்கு ராணுவ வாழ்க்கை சற்று கடினமாகவே தோன்றியது. நானும் என்னுடைய சகோதரியும் பயிற்சியின் போது பலமுறை அழுததுண்டு. நாளடைவில் பயிற்சியில் ஈடுபாடு ஏற்பட்டது.

வழக்கமான பணியுடன் சுழற்சி முறையில் இரவு நேரத்தில் ரோந்து பார்க்கும் கட்டாயமும் இருந்தது. அது போன்ற சந்தர்ப்பத்தில் ஒரு நாள் இரவு நான் தவறுதலாக ஒரு பள்ளத்தில் விழுந்துவிட்டேன். என்னைக் காப்பாற்றி மருத்துவமுகாமில் சேர்த்தனர். காயங்களுக்காக சிகிச்சைப் பெற்று உறங்கிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து கண் விழித்தபோது என் எதிரே நேதாஜி நின்றிருப்பதை பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவேளை கனவு காண்கிறேனா என்று நினைக்கத் தோன்றியது. விபத்து பற்றி கேள்விப்பட்ட அவர், என்னிடம் நலம் விசாரித்தார். முதல் முதலாக அவரை நேரில் பார்த்த அந்த சம்பவம் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தினமும் காயமடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவ முகாமுக்கு வருவது அதிகரித்தது. கூடவே, மலேரியா காய்ச்சல் பரவியிருந்தது. அப்போது என்னிடம், "யுத்த களத்தில் பணியாற்ற விரும்புகிறாயா? அல்லது மருத்துவமுகாமில் செவிலியராக பணியாற்ற விரும்புகிறாயா? என்று கேட்டனர். நான் யுத்த களத்தில் பணியாற்றவே விரும்புவதாக கூறினேன். கேப்டன் லட்சுமி சகாலின் கீழ் பணியாற்றிய எனக்கு வெகுவிரைவில் ஐஎன்ஏவில் இருந்த "ஜான்சிராணி ரெஜிமென்ட்' பிரிவுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை அளித்தனர்.

1942 முதல் 1945 வரை பர்மா, ஜப்பானியர் வசம் இருந்ததால், நிறைய ஜப்பானிய பள்ளிகள் திறக்கப்பட்டு ஜப்பானிய மொழி கற்றுத் தரப்பட்டது. ஐஎன்ஏ வில் சேருவதற்கு முன்பே எனக்கும் ஜப்பானிய மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஜப்பானிய ராணுவ வீரர்களுடன் உரையாட உதவியாக இருந்தது. யுத்தம் முடிவுக்கு வந்தபோது ஜப்பான் தோல்வியடைந்தது. ஐஎன்ஏ படையும் கலைக்கப்பட்டது.

நேதாஜி எங்களை வீட்டிற்கு அனுப்பியபோது, ரங்கூனில் நான் ஆறு மாத காலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டேன். அது ஒரு வித்தியாசமான அனுபவம். 1946- ஆம் ஆண்டு குடும்பத்துடன் நாங்கள் மும்பை வந்த பின்னர், அடுத்த ஆண்டிலேயே இந்தியா சுதந்திரமடைந்ததை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி, இந்த சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சியைப் பார்க்கும் வாய்ப்பின்றி போய்விட்டது. இந்தியா வந்த பின்னரும் என்னுடன் ஐஎன்ஏவில் பணியாற்றிய பலருடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்தேன்.

நேதாஜி அறிவுறுத்தி வந்த "முன்னேறு' என்ற வார்த்தை என்னுடைய மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஏற்கெனவே தட்டச்சு மற்றும் கருக்கெழுத்து பயிற்சிப் பெற்றிருந்ததால் தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைத்தது. எதிர்பாராத விதமாக சுற்றுலா வழிகாட்டி பணிக்கான அரசு விளம்பரமொன்றை பார்க்க நேர்ந்தது. ஏதேனும் ஒரு அயல்நாட்டு மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்ததால் ஜப்பானிய மொழி தெரிந்த நான் நம்பிக்கையுடன் விண்ணப்பித்தேன். நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருத்தியாக சுற்றுலாத் துறையில் மூன்று மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு சுற்றுலா வழிகாட்டி பணியில் சேர்ந்தேன்.

1950 -ஆம் ஆண்டு சத்யேந்திரா கந்த்வாலா என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னரும் பணியை தொடர்ந்தேன். பத்தாண்டுகள் கழித்து என் மகள் பிரசவத்தின்போது சில மாதங்கள் விடுப்பு எடுத்ததோடு சரி, தொடர்ந்து அரசு சுற்றுலா வழிகாட்டியாக 50 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், சில ஆண்டுகளுக்கு முன் 92-ஆவது வயதில் ஓய்வு பெற்றேன்.

எனக்கு ஜப்பானிய மொழி மட்டுமின்றி ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி மற்றும் பர்மிய மொழியும் தெரியும். பர்மிய மொழியைத் தொடர்ந்து பேசும் வாய்ப்பில்லாததால் சரளமாக பேச முடிவதில்லை. ஓய்வு பெற்றவுடன் மும்பையில் ஜப்பானிய மொழி பயில விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருவதால் வயதாவதைப் பற்றியோ, முதுமையைப் பற்றியோ கவலை படுவதில்லை'' என்கிறார் ரமாகந்த்வாலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT