மகளிர்மணி

வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரிய வெற்றி!

பூா்ணிமா


இந்திய விளையாட்டு வீரர்களில் பிரபலமாகவும், மகளிர் ஹாக்கி வீராங்கனையாகவும் விளங்கும் ராணிராம்பால்(25) விளையாட்டுத் துறையில் உயர்ந்த விருதாக கருதப்படும் "ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருதைப் பெற்றுள்ளார். இந்திய மகளிர் ஹாக்கி அணியில் "கேல் ரத்னா' விருது பெற்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

ஹரியானா மாநிலம் குருசேஷத்திர மாவட்டத்தில் சஹாபாத் என்ற சிறு கிராமமொன்றில் பிறந்து வளர்ந்து, பல தடைகளை கடந்து ஹாக்கி பயிற்சிப் பெற்று இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்று கேப்டனாகவும் உயர்ந்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் இவர் பங்கேற்று விளையாடிய 241 போட்டிகளில் 118 கோல்கள் போட்ட பெருமையும் இவரைச் சேரும். தன்னுடைய பயணத்தில்  வெற்றியை மட்டுமே சந்தித்து வரும் ராணி ராம்பால், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸில் பங்கேற்க தீவிர பயிற்சிப் பெற்று வருகிறார். கடந்த ஜனவரி மாதம் "பத்மஸ்ரீ' விருது பெற்றதைத் தொடர்ந்து, "கேல் ரத்னா' விருது பெற்ற ராணி ராம்பால், விருது பெற்றவுடன் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனுபவத்தை விவரிக்கிறார்:

""இந்த விருது தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த விருதாக நான் கருதவில்லை. இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். இந்த விருது கிடைத்த தகவலை ஊருக்குச் சென்று என் தந்தையிடம் கூறியபோது, அவருக்கு இந்த விருது பற்றிய முக்கியத்துவம் ஏதும் புரியவில்லை. என்னுடைய பெற்றோர் எதையும் புரிந்து கொள்ளுமளவுக்குப் படிப்பறிவு இல்லாதவர்கள். அதனால் இதுவரை நான் பெற்ற விருதுகளைப் பற்றி அவர்கள் தெரிந்திருக்கவில்லை. பின்னர் விரிவாக ஹாக்கி விளையாட்டில் கேல்ரத்னா விருது பெற்ற முதல் பெண் நான்தான் என்று கூறியபோது, அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர். இதுவே என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகும்.

முதன்முதலாக பயிற்சிப் பெற்று விளையாடத் தொடங்கியபோது, என்றாவது ஒருநாள் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு கேப்டனாக வருவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஹாக்கியின் மீது எனக்கிருந்த ஆர்வமே என்னை இந்த அளவுக்கு உயர்த்தியதாக கருதுகிறேன். ஏழ்மையான பின்னணியில் வளர்ந்தபோது, கடினமாக உழைத்தாலொழிய இலக்கை அடைய முடியாது என்பது எனக்குத் தெரிந்திருந்தது. அதனால் வாழ்க்கையில் கடினமாக முயற்சிப்பதை நான் என்றுமே தவறவிட்டதில்லை. நான் பெற்ற மெடல்களும், விருதுகளும் நான் மேலும் திறமையாக விளையாட வேண்டுமென்பதையே உணர்த்துகின்றன.

சமீபத்தில் பொதுமுடக்கம் தொடங்கியது முதல், குடும்பத்தினரை பிரிந்து பெங்களூரில் உள்ள ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா கேம்பஸில் தங்க வேண்டியதாகிவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் குடும்பத்தினரைவிட்டு நீண்ட காலம் பிரிந்திருந்தது இதுவே முதல் முறையாகும். விருது பெற்றவுடன் ஊருக்குச் சென்று குடும்பத்தினரை சந்தித்து விட்டு மீண்டும் பெங்களூரு திரும்பியவுடன், கரோனா பீதி காரணமாக தனிமையாக வைக்கப்பட்டேன். இது சிரமமாக இல்லையென்றாலும், விளையாட்டு வீரர்களைப் பொருத்தவரை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதென்னவோ உண்மை. இருந்தாலும் கேம்பஸில் எங்களுக்கு பாதுகாப்பு அதிகமாகவே இருந்தது'' என்கிறார் ராணி ராம்பால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT