மகளிர்மணி

நோபல் பரிசு: தாயைப் போல மகள்!

DIN


ஐரின் கியூரி , மேரி - பியாரி கியூரி இணையருக்கு 1897-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 -ஆம் நாள் மூத்த மகளாகப் பிறந்தார்.

மேரியும் பியாரி கியூரியும் ஆய்வுக் கூடத்திலேயே பெரும்பொழுதைக் கழித்தமையால் ஐரினைக் கவனித்துக் கொள்ள ஒரு வேலைக்காரியை நியமித்திருந்தனர். பின்னர், பியாரியின் தந்தை மருத்துவர் எமேன் கியூரியின் பராமரிப்பில் வளர்ந்தார்.

தாத்தாவே ஐரினின் முதல் ஆசிரியராக இருந்து பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார். மேரியையும் பியாரியையும் சந்திக்க அவர்கள் வீட்டிற்கு அறிஞர்கள் பலர் வந்து செல்வது வழக்கமாக இருந்தது. எனவே, இயற்கையாகவே ஐரினுக்கு அறிவியலில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது.

இவருக்கு ஒன்பது வயது நிரம்பிய நிலையில் பியாரி கியூரி இறந்துவிட, மேரியின் கண்காணிப்பில் ஐரின் வளர்ந்தார்.

1914-ஆம் ஆண்டு தொடங்கிய முதல் உலகப் போரின்போது ஜெர்மனியின் படைகள் பிரான்சைத் தாக்கின. அச்சமயத்தில் கல்லூரிப் படிப்பையும் விட்டுவிட்டு தமது தாயுடன் போர் நடக்கும் இடங்களுக்குச் சென்றார்.

மேரி கியூரி 20 நடமாடும் மருத்துவமனைகளுடன் போரில் காயம்பட்ட, எலும்பு முறிவு கண்ட வீரர்களுக்குச் சேவை செய்தார். எக்ஸ்ரே கதிரியக்கக் கருவிகள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனத்தில் செவிலியர், ஆண் பெண் தொண்டர்களை ஏற்றிக் கொண்டு சென்று அடிப்பட்ட வீரர்களுக்கு மருத்துவ சேவை புரிந்தார். ஐரினுக்கு ரேடியம் கதிர்வீச்சைப் பயன்படுத்தி காயங்களை ஆற்றக் கற்றுக் கொடுத்தார்.

போர் முடிந்ததும் பிரெஞ்சு அரசாங்கம் ஐரினுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தது. கல்லூரி படிப்பு முடிந்ததும். பாரீசில் தமது பெற்றோரால் அமைக்கப்பட்ட ரேடியம் நிறுவனத்தில் 1918-ஆம் ஆண்டு முதல் பணியாற்றத் தொடங்கினார்.

கதிரியக்கம் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐரின் தனிமங்கள் வெளியிடும் கதிர்களை ஆராய்ந்து வந்தார். மேரி கியூரி கண்டுபிடித்த பொலோனியம் தனிமத்தை ஆராய்ந்தார். இந்தத் தனிமம் வெளியிட்ட ஆல்பா கதிர்கள் பற்றி அழமாக ஆராய்ந்தார். இதற்காக முனைவர் பட்டமும் பெற்றார்.

1926-ஆம் ஆண்டு மேரி கியூரியின் உதவியாளராக இருந்த ஜோலியட்டைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஜோலியட், ஜூலியட் கியூரி என்று தமது பெயரை மாற்றிக் கொண்டார்.

ஐரின் நடத்தி வந்த கதிரியக்க ஆய்வில் அவரது கணவரும் இணைந்தார். தனிமங்களின் உட்கருவில் உள்ளஅணு துகள்கள் குறித்து இவர்கள் ஆராய்ச்சி செய்தனர். நியூட்ரான், பாஸிட்ரான் ஆகியவற்றைக் கண்டறிந்தனர். தொடர்ந்து இவர்கள் தங்களது ஆராய்ச்சியின் மூலம் செயற்கையான கதிரியக்கம்  (artificial radioactivity) என்பதைக் கண்டுபிடித்தனர்.

ஐரின் இணையர் கண்டுபிடித்த செயற்கை கதிரியக்கம் அறிவியலில் புதிய சகாப்தத்தையே உருவாக்கியது. நவீன அணு ஆராய்ச்சிக்கு அடித்தளம் இட்டது.

1932-ஆம் ஆண்டு ஐரின் கல்லூரி ஆசிரியராகத் தமது பணியைத் தொடங்கினார். 1937-இல், பாரீசில் சார்போன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பதவி கிடைத்தது. பின்னர், 1946- ஆண்டு ரேடியம் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பதவியேற்றார்.

ஐரின் கியூரி சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்டவராக விளங்கினார். பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், பெண்களும் அறிவியலை கற்று அறிஞர்களாக வளர வேண்டும் என்றும் பேசி வந்தார்.

ஐரின் கியூரியும், ஜோலியட்டும் 1934-இல் சோசலிசக் கட்சியின் உறுப்பினர் ஆயினர். பின்னர், பொதுவுடைமைக் கொள்கையை ஆதரித்து பேசி வந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்சின் அணுசக்தி கமிஷன் தலைவராக ஐரின் நியமிக்கப்பட்டார். பிரெஞ்சு அரசாங்கத்தில் பங்கு பெற்ற மூன்று முக்கியப் பெண்மணிகளில் ஐரின் கியூரியும் ஒருவர்.

தாயார் மேரி கியூரிக்கு ஏற்பட்டது போலவே கதிரியக்கத்தால் இவரது உடல் நலம் கெட்டது. இவரது கதிரியக்க ஆய்வே இவருக்குக் கேடாக அமைந்தது. தமது 58-ஆவது வயதில் 1956-இல் இவர் பாரீசில் உயிரிழந்தார்.

இவரது தாயார் மேரி கியூரிக்குப் பிறகு 24 ஆண்டுகளாக வேதியியல் துறையில் பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. 1935-ஆம் ஆண்டு ஐரின் கியூரிக்கும், அவரது கணவர் ஜோலியட் கியூரிக்கும் வழங்கப்பட்டது.

அணு உட்கருவின் துகள்களைக் கண்டறிந்தது மட்டுமின்றி, அணு பிளவு (Nuclear fission) என்பதையும் கண்டறிந்தவர். இதுவே, அணுகுண்டு மற்றும் அணுமின்சாரம் ஆகியவற்றிற்கு அடித்தளமாக அமைந்தது.

(பானுமதி தருமராசன் எழுதிய "வரலாறு படைத்த வைர மங்கைகள்'

- நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT