மகளிர்மணி

உலகின்  முதல்  பெண் பத்திரிகையாளர்!

28th Oct 2020 06:00 AM | - டி.எம்.ரத்தினவேல்

ADVERTISEMENT

கி.பி. 1804- ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மாத பத்திரிகைகளின் வரவு நூறைத்தாண்டிவிட்டது. புற்றீசல்கள் போல விதவிதமான தலைப்புகளில் வார, மாத பத்திரிகைகள் தோன்றிய வண்ணமிருந்தன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் என்று பல பத்திரிகைகள். தனித்துவம் பெற்றுத் திகழ்ந்தன. பரபரப்பாகத் தோன்றிய பல பத்திரிகைகள் தோன்றிய சில மாதங்களிலேயே வீழ்ச்சியுமடைந்தன. நின்று போயின.

அநேகமாக ஆரம்ப காலத்து அமெரிக்கப் பத்திரிகைகள் எல்லாம் சந்தாதாரர்களுக்கே அனுப்பப்பட்டன. இப்போது போல ஊருக்கு ஊர் விநியோக ஏஜெண்டுகள் கிடையாது. அக்காலத்தில் பத்திரிகைத் தொழிலை லாபகரமான தொழிலாகக் கருதவில்லை.

அமெரிக்க மாத இதழ்கள் உலகில் கீர்த்தியும் மேதமையும் மிக்க பல ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த முன்னோடியும் கிடையாது. ஆனால், அவர்களே இன்று உலகிற்கு முன்னோடியாக இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸாரா ஜோசப் ஹேல் என்கிற பெண்மணி. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர்.

40- ஆவது வயதில் ஒரு பத்திரிகை ஆசிரியராக வெளிப்பட்டவர் இவர்.

ADVERTISEMENT

காசநோய் ஏற்பட்டு சாகக் கிடந்தார். இவர் கணவர் ஹேல் தனது சொத்து சுகம் அத்தனையும் விற்று திராட்சைப் பழங்களாகவே வாங்கிக் கொடுத்து அவரது உயிரை மீட்டார்.

ஆனால், கணவன் ஹேல் அதே காச நோய்க்குப் பலியாகிவிட்டார். தான் பெற்ற ஐந்து குழந்தைகளைக் காக்க அவர் பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தார். அதில் தமது திறமை முழுவதையும் வெளிப்படுத்தினார்.

கி.பி. 1828-ஆம் ஆண்டில் சின்னஞ்சிறு பெண்கள் இதழுக்கு ஆசிரியரானார். அமெரிக்க ஆண்களுடன் அவர்களுடைய மனைவிகள் சார்பாக போர் தொடுக்கிற இதழாகவே அது எடுத்த எடுப்பில் தோன்றியதாக உலகிற்குச் சொல்லிவிட்டது.

இதழுக்கு இதழ் அவர் அமெரிக்க பெண்களின் கல்வி, படிப்பு, தொழில், சொந்தமாகப் பணம் வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் எல்லாவற்றையும் வற்புறுத்தி எழுத ஆரம்பித்தார். ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு சிறு தொழிலை ஓய்வு நேரத்தில் செய்ய வேண்டும். அதைவிற்று காசாக்கி தனது இடுப்பில் முடிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

மேலும் அவர், பெண்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிப்பதை ஆண்கள் பிடுங்கிக் கொள்ளக் கூடாது என்று பெரிய கிளர்ச்சியைச் செய்தார். வீட்டு வேலைகளையெல்லாம் ஆண்களும் பகிர்ந்து கொண்டு செய்ய வேண்டும். நீங்கள் மட்டும் என்ன உசத்தி என்று அமெரிக்க ஆண்களைக் கண்டித்தார்.

பெண்கள் சமையலறையிலேயே கிடப்பது அவர்களுக்குப் பெரிதும் ஆரோக்கியக் கேடாக இருக்கிறது என்று சொல்லி இனிமேல் வசதியாகக் கட்டுவதற்காக வீடுகளின் மாடலைப் போட்டுக் காட்டினார். அப்படி வீடு கட்டிக் கொடுக்கும்படி கணவன்மார்களை வற்புறுத்தினார். தானே கட்டிக் கொடுக்கவும் முன் வந்தார்.

1825- இல் ஜெனரல் ஸாபெய் உருவாக்கிய "பங்கர் ஹில்' என்பது. அச்சமயம் அமெரிக்காவில் ஒரு கீர்த்தி மிக்க நினைவு சின்னம், அரைகுறையாக நின்றது. ஸாரா ஹேல் அதை ஒரு சவாலாக ஏற்று தன் பத்திரிகையில் கட்டுரையாக வடித்தார்.

அமெரிக்காவில் பெண்களிடம் ஏதாவது ஒரு பொருளை வித்தியாசமாகச் செய்து தரச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார். ஏராளமானோர் விதவிதமாக பல பொருள்களைத் தயாரித்து அனுப்பி வைத்தார்கள். அவற்றைக் கண்காட்சியாக வைத்து விற்று, காசாக்கி, பெரிய நிதியாக்கி, அதைக் கொண்டு அந்த நினைவுச் சின்னத்தையே கட்டி முடித்தார்.

அவர் பத்திரிகையை ஏராளமானோர் விரும்பிப் படித்தார்கள். அமெரிக்கப் பெண்களுக்கு அவர் அருமந்த தோழியாக விளங்கினார். அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை வாரி வழங்கினார். அவர்களுக்காக வாதாடி ஒரு பல்கலைக்கழகமே திறக்கச் செய்தார்.

அக்காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே வியாபார ஸ்தலங்களில் வேலை தரப்பட்டு வந்தது. பெண்கள் என்ன மட்டமா? உங்களை விட அவர்கள் கெட்டிக்காரர்கள். சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்கள். எந்தப் பொருளையும் அவர்களால் உங்களை விட சிறப்பாக விற்பனை செய்ய முடியும் என்று எடுத்துக் கூறி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்ளுமாறு சிபாரிசு செய்தார் ஸாரா ஹேல்.

அவர் சொன்னபடியே வியாபார ஸ்தலங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தினார்கள். அங்கெல்லாம் வியாபாரம் மேலோங்கி விளங்கியதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் சேவை மனப்பான்மையும் திறமையும் உள்ள பெண்களை டாக்டருக்குப் படிக்கச் சொன்னார். அதை ஆண்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

ஏன் எதிர்க்கிறீர்கள்?: உங்களால் பெண்களைச் சகித்துக் கொள்ள முடியாது என்றால் மருத்துவத் துறையைவிட்டு வெளியேறுங்கள். மருத்துவ நிபுணர்களாகவும் செவிலியர்களாகவும் பணி மேற்கொள்ளும் பெண்கள் உங்களைவிட சிறப்பாகப் பார்த்துக் கொள்வார்கள் என்று தன் பத்திரிகையில் காரசாரமாக எழுதினார்.

ஏராளமான பெண் மருத்துவர்கள் உருவானார்கள். அமெரிக்கப் பத்திரிகை சரித்திரத்தில் கட்டுரை எழுதும் ஆசிரியர்களுக்கு உரிய சன்மானம் அளிக்கத் தொடங்கிய பத்திரிகையாளர்களில், ஸாரா ஹேல்தான் முதன்மையானவர்.

லாங் பெல்லோ, ஹர்ல்பஸ், ஒயிட்டியர், ஹவாதான், மெர்கன் போன்றவர்களின் புகழ் பெற்ற இலக்கியப் படைப்புகளை எல்லாம் அவர் வெளியிட்டிருக்கிறார். எட்கர் ஆலன் போவின் கட்டுரைகளைப் பல ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார்.

ஸாரா ஹேல் இருபத்திநான்கு நாவல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கது "ஹாரி', "விதவையின் மகன்', "மூன்று மணி' அல்லது "காதலின் பிரார்த்தனை' ஆகியவை புகழ்பெற்றவை. அவருடைய மிகவும் பிரபலமான புத்தகம் "உமன்ஸ் ரெக்கார்ட்' அல்லது "உலகத் தொடக்கத்திலிருந்து 1854- ஆம் ஆண்டு வரை பிரபலமான பெண்களின் வாழ்க்கை வரலாறு' என்பதாகும்.

இந்தப் புத்தகத்தில் இரண்டாயிரம் முக்கிய பெண்களின் பெயர்களும் அவர்களுடைய அரிய பணிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

பெண்களின் மதிப்பை உயர்த்த ஸாரா ஹேல் மேற்கொண்ட முயற்சிகளில் இதுவும் ஒன்று.

கூடீ என்ற செல்வந்தர், "கூடீஸ்'," லேடீஸ் புக்' என்ற பெண்கள் இதழை நடத்தி வந்தார். ஸாரா ஹேலின் திறமையைக் கண்டறிந்த அவர் தம் பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டு தொடர்ந்து நடத்துமாறு கேட்டுக் கொண்டார். வீட்டிலிருந்தேதான் நான் பத்திரிகையை எடிட் செய்வேன். என்ற அவரது நிபந்தனையை ஏற்றுக் கொண்ட கூடீ தன் பெண்கள் இதழில் ஆசிரியராகப் பணியமர்த்தினர்.

ஸாரா ஹேல் தமது கடுமையான உழைப்பினால் அப்பத்திரிகையின் தரத்தை மேலும் உயர்த்தி நிகரற்றதாகவே செய்துவிட்டார். பத்திரிகைக்கு விளம்பரங்கள் நிறையக் கிடைத்தன. அதிலே அவர் எந்த ஒரு பொருளையும் நல்லது என்று எழுதினால்தான் பெண்கள் அதை வாங்குவார்கள் என்கிற அளவுக்கு அது அமெரிக்கப் பெண்களிடம் செல்வாக்கு பெற்றது.

கி.பி. 1879 - ஆம் ஆண்டு வரை - அதாவது அவரது 90- ஆவது வயது வரை வாழ்ந்தார். இரண்டு தலைமுறை பெண்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
என் பணி முடிந்தது. எனக்கு அழைப்பு வந்துவிட்டது. இதுவரை நான் சொன்னதை எல்லாம் மறந்து விடாதீர்கள். போய் வருகிறேன். என்று கடைசியாகத் தன் பத்திரிகையில் எழுதித்தன் லட்சக்கணக்கான வாசக சகோதரிகளிடமிருந்து பிரியா விடை பெற்றுக் கொண்டார் ஸாராஹேல்.

அமெரிக்கக் குழந்தைகளுக்காக அவர் எழுதிய கவிதைகள் சாகாவரம் பெற்றவை. உலகப் புகழ் பெற்றவை.

உங்களுக்கு நினைவிருக்கிறதா ஸாராஹேல் இயற்றிய ஒரு பாடலை நீங்களும் படித்திருப்பீர்கள். உங்கள் பெற்றோரும் படித்திருப்பார்கள். உங்கள் பிள்ளைகளும் படித்திருப்பார்கள். ஏன்? உங்கள் பேரன் பேத்திகளும் இன்று படித்துக் கொண்டிருப்பார்கள்.

என்ன பாடல் அது என்று யோசிக்கிறீர்களா? அதுதான் உலகப் பிரசித்தி பெற்ற அழகிய குழந்தைப் பாடல்"மேரி ஹாட் ஏ லிட்டில் லாம்ப்'. ஆம், அதை எழுதிய பெண்மணிதான் இந்த ஸாரா ஹேல் உலகின் முதல் பெண் பத்திரிகையாளர்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT