மகளிர்மணி

யூ டியூப்பில் பொம்மலாட்டம்!

28th Oct 2020 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT

80 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகத்தில் கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் பிரபலமாக நடைபெற்று வந்தது பாகவத பொம்மலாட்டம்.

அப்போது உலகம் முழுவதும் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளு என்ற கொள்ளை நோய் இந்தியாவிலும் பரவியபோது ஏராளமானோர் இறந்து போனார்கள். அப்போது இந்த பொம்மலாட்டக் கலையும் நலிவடைந்தது. தற்போது பரவியுள்ள கரோனா காரணமாக மீண்டும் பொம்மலாட்டக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அதை புதுப்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த அனுபமா ஹொசகரே. பொம்மலாட்ட கலைஞரான இவர், அரசு சலுகை பெற்று பாகவத பொம்மலாட்டம் பற்றி ஆய்வு செய்து சங்கீத நாடக அகாதெமி விருது பெற்ற மூத்த கலைஞராவர்.

அன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரவிய கொடிய நோய் காரணமாக பாரம்பரிய பாகவத பொம்மலாட்டம் நலிவுற்றதைப் போல், மீண்டும் ஒரு நோய் தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பொம்மலாட்ட கலைக்குப் புத்துயிர் கொடுக்க முடியுமா என்ற சந்தேகமும் இவரது மனதில் தோன்றியதாம். இருந்தாலும் கிராமப்புறக் கலைஞர்களால் உருவான இந்தக் கலைக்கு என்றுமே அழிவில்லை என்ற எதிர்பார்ப்புடன் எடுத்த முயற்சியைத் தொடர்வதெனத் தீர்மானித்தாராம்.

""கடந்த நூறாண்டுகளில் எத்தனையோ கலைஞர்கள் மறைந்திருக்கலாம். புதிதாக உருவாகியிருக்கலாம். ஆனால் இந்தக் கலையின் அடிப்படை வடிவங்களில் மாற்றம் ஏதுமில்லை'' என்று கூறும் அனுபமா ஹொசகரே, "தாட்டூ பப்பட் தியேட்டர்' என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளார். இந்த அமைப்பு லாப நோக்கத்தோடு நடத்தப்படுவதில்லை என்றாலும், பொது முடக்கத்தின்போது பொம்மலாட்டம் கலையைப் பற்றி தெரிந்து கொண்டாராம்.

ADVERTISEMENT

பொதுமுடக்கம் காரணமாக பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த இயலாது என்பதால் இவரும், இவரது குழுவினரும் கடந்த ஜூன் மாதம் முதல் சனிக்கிழமைதோறும் யூடியூப் சேனல் மூலம் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளார். இதற்காக "பக்த பிரகலாதா', "குமார சம்பவம்' போன்ற இதிகாச கதைகளைத் தேர்வு செய்துள்ளனர், தொடக்கத்தில் ஏற்கெனவே விடியோவில் பதிவு செய்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியபோது எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகரித்தது. தற்போது நேரடியாக நிகழ்ச்சி நடத்துவதோடு, பிறமாநில கலைஞர்களின் வித்தியாசமான பொம்மலாட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து ஒளிபரப்புகிறார்.

கடந்த ஆகஸ்ட் சுதந்திரத் தினத்தன்று, 200 ஆண்டுகளாக பொம்மலாட்ட கலையை வழிவழியாக நடத்தி வரும் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரமண கவுடா குழுவினரின் நிகழ்ச்சியை யூடியூப்பில் ஒளிபரப்பினார்.

இதற்கு பார்வையாளர்களிடமிருந்து நம்பிக்கையான வரவேற்பு கிடைக்கவே, காலத்தால் அழியாத இக்கலையை நீண்ட கால அடிப்படையில் ஒளிபரப்ப அனுபமா திட்டமிட்டுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தங்கள் நாட்டு நேரப்படி ஒளிபரப்பும்படி கோரிக்கை அனுப்பியதால், இனி சனிக்கிழமைகளில் 24 மணி நேரமும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளார்.

இதுவரை தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அனுபமா, இது போன்ற பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்துபவர்களுக்கு நிதியுதவி அளிப்பதை கேள்விப்பட்டதும், ஜனவரியில் "தாட்டு சர்வதேச பப்பட் விழா'வை நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால் மிக குறுகிய காலமாக இருந்ததால் சரியான நேரத்தில் கிடைக்காத நிதியுதவி பொது முடக்கத்தின்போதுதான் கிடைத்துள்ளது.

தற்போது சில தனியார் நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க முன் வந்திருப்பதால், இந்த பொம்மலாட்டக் கலை குறித்த நிகழ்ச்சிகளையும், கலந்துரையாடல்களையும் நடத்துவதோடு, இணையதளம் மூலம் வெளியிடும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளதாகக் கூறும் அனுபமா, இதன் மூலம் கிடைக்கும் பணத்தை பொது முடக்கத்தால் நலிவடைந்துள்ள பொம்மலாட்ட கலைஞர்களுக்கு கொடுத்து உதவவும் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து பொம்மலாட்ட குழுவினர்களைச் சந்திக்கவும், எதிர்காலத்தில் இந்தக் கலையைப் பாதுகாப்பது எப்படி என்பது பற்றி விவாதிக்கவும் ஏற்பாடுகள் செய்வதாக அனுபமா கூறினார்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT