மகளிர்மணி

கண்களில் பசியின் வலி...

28th Oct 2020 06:00 AM | - பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT


மதுரை அலங்காநல்லூருக்குப் பக்கத்தில் இருக்கும் ஊமைச்சிகுளம் பகுதியில் வாழும் மலர்விழி அழகுக் கலை படித்தவர். பெண்களுக்கு அழகு, அலங்காரம் செய்வதை தொழிலாகச் செய்து வந்தாலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெறும் ஏழை மாணவிகள் கல்லூரியில் சேர பண உதவி செய்து வருகிறார். அதற்காக "பிரைட் பப்ளிக் சாரிடபிள்' அறக்கட்டளை ஒன்றையும் பத்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இரண்டு ஆண்டுகளாக மலர்விழி தெரு நாய்களுக்கு உணவு, புகலிடம், முதலுதவி வழங்கி வருகிறார்.

தனது செயல்பாடுகள் குறித்து மலர்விழி சொல்வது :

"நான் ஊமைச்சிகுளத்தில் வசிக்கும் பகுதிக்கு "மாரணி' என்று பெயர். மதுரைக்குப் பக்கத்தில் இருந்தாலும் பக்கா கிராமம். பெண்கள் பள்ளி முடித்து கல்லூரி போவது என்பது இன்றைக்கும் சிரமமான விஷயமாக இருக்கிறது. வீடுகளில் படிக்கவிட மாட்டார்கள். அதனால் உயர்ந்த மதிப்பெண்கள் பெறும் மாணவிகளில் மேலும் படிக்க விருப்பப்படும் மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் பத்தாண்டுகளாக வழங்கி வருகிறேன். அப்பா இல்லாத அல்லது அம்மா இல்லாத மாணவிகளுக்கு முன்னுரிமை தருவேன்.

இந்த சமூகத் தொண்டு ஒருபுறம் நடக்க விபத்தில் அடிபடும் தெரு நாய்களுக்கு முதலுதவி வழங்க ஆரம்பித்தேன். தேவைப்பட்டால் மருத்துவரிடம் நாயைக் கொண்டு சென்று மருத்துவம் பார்ப்பேன். அடிபட்ட நாயை நாம் காப்பாற்றப் போனாலும் நாய் தன்னை துன்புறுத்த வருகிறார்கள் என்று நினைத்து கடித்துவிடும். இப்படி பல முறை நாய்கள் என்னைக் கடித்துள்ளன. நானும் உடனே ரேபிஸ் கிருமிகள் பரவாமல் இருக்க நோய் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வேன். பிறகு மாதாமாதம் டெட்டனஸ் ஊசி மாதிரி தடுப்பு ஊசி போட்டுக் கொள்கிறேன். இந்த ஊசி போட்டுக் கொள்வதால் நாய் கடித்தாலும் எந்த பாதிப்பும் கடிபட்டவருக்கு ஏற்படாது.

ADVERTISEMENT

கரோனா காலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால் யாரும் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. ஹோட்டல்கள் மார்க்கெட் எதுவும் திறக்கப்படவில்லை. அதனால் தெரு நாய்களுக்கு உணவு கிடைக்க வில்லை. பசியால் சுருண்டு படுத்திருக்கும் நாய்கள்.. ஏதாவது சத்தம் கேட்டால் யாராவது உணவு கொண்டு வருகிறார்களா என்று பசி வேதனையில் அங்கும் இங்கும் திரும்பிப் பார்க்கும். கண்களில் பசியின் வலி தெரியும். அழுகிற நிலையில் இருக்கும். மனம் நொந்து போன நான் எனது பகுதி நாய்களுக்கு உணவளிக்க ஆரம்பித்தேன்.

தெருநாய்களை பலரும் பலவிதத்தில் துன்புறுத்துகிறார்கள். அலங்கார மீன்களை வர்த்தகரீதியாக பண்ணையில் வளர்ப்பவர்கள் தெரு நாய்களைப் பிடித்து கொன்று மீன்களுக்கு உணவாகப் போடுகிறார்கள். இந்தக் கொடுமை குறித்து பல முறை புகார் செய்தாலும் தொடர்ந்து இந்த அராஜகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வீடுகளுக்கு வரும் தெரு நாய்களை அடிப்பார்கள். நாய்கள் மீது தண்ணீர் ஊற்றுவார்கள். ஏன்.. வெந்நீரைக் கூட நாய் மேல் ஊற்றுவார்கள். நான் உணவளிப்பதால் என் வீட்டைச் சுற்றி நாய்கள் எப்போதும் இருக்கும். சுற்றப் போனாலும் உணவு தரப்படும் நேரத்திற்கு வந்துவிடும். எனது பகுதியில் இப்போது நாய்கள் அதிகம் இருப்பதால் பகல் நேரத்தில் இருந்த திருட்டு பயம் இல்லாமல் போய் இரவு நேரங்களில் கூட திருடர்கள் வருவதில்லை. எங்கள் பகுதியில் இருக்கும் ஐநூறு வீட்டுவாசிகளுக்கும் நிம்மதியாக இரவில் தூங்க முடிகிறது.

எனது சுற்றுவட்டாரத்தில் அடிபட்ட நாய்களுக்கு உதவ என்னை அழைப்பார்கள். எனது இரு சக்கர வாகனத்தில் சென்று விலங்கு மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை கிடைக்கச் செய்வேன். இரண்டு மூன்று நாய்கள் என்றால் ஆட்டோ பிடித்து மருத்துவரிடம் அழைத்துப் போவேன். விலங்கு மருத்துவர்கள் இரவு எட்டு மணி வரை மட்டுமே இருப்பார்கள். அதனால் இரவில் நாய்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் திண்டாட்டம்தான்.

இரண்டு வீட்டு சண்டையில் ஒரு வீட்டுக்காரர் அண்டை வீட்டைச் சேர்ந்த நாயின் இரண்டு கால்களையும் அரிவாளால் வெட்டிவிட்டார். முன் கால் பாதி துண்டாகிப் போனது. பின்னங்கால் முழுவதுமாக துண்டானது. அக்கம்பக்கத்தவர் என்னை அழைக்க நான் நாயை மருத்துவரிடம் காண்பித்து கட்டுப் போட்டேன். வீட்டில் வைத்துப் பார்த்துக் கொண்டேன். இடது பக்கத்தில் இருக்கும் முன், பின் கால்களால் அந்த நாய் அருமையாக நடக்கிறது. வலது பக்க முன்கால் பாதி இருந்தாலும் நடக்கும் போது மற்ற இரண்டு கால்களை விட நீளம் குறைவாக இருப்பதால் நடக்க அந்தக் காலை நாய் பயன்படுத்துவதில்லை. ஒரு பக்க முன், பின் கால்களைக் கொண்டு நாய் நடப்பதை பார்த்து மருத்துவரே ஆச்சரியப்பட்டார்.


தெரு நாய்களுக்கு ரேபிஸ் ஊசி மருத்துவர் மூலமாக தவறாமல் போட்டு வருகிறோம். தற்சமயம் வீட்டில் ஆறு நாய்களை வளர்த்து வருகிறேன். நாய்களுக்காக மருத்துவருடன் கூடிய ஒரு காப்பகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். நாய்களைப் பராமரிப்பதில் எனக்கு உதவுவது பாலிடெக்னிக்கில் படிக்கும் என் மகன்தான்..' என்கிறார் மலர்விழி.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT