மகளிர்மணி

தமிழால்தான் நான் அறியப்படுகிறேன்!

21st Oct 2020 06:00 AM | - கண்ணம்மா பாரதி

ADVERTISEMENT

 

வாழ்நாளில் ஒரு நூலை எழுதி வெளியிடுவதே சாதனையாகக் கருதப்படும் போது இரு நூறு நூல்களை எழுதி முடித்து, முதல் நூறு நூல்களை வெளியிட்டு, அடுத்த ஐம்பது நூல்களை அச்சிட்டு முடித்து கடைசி ஐம்பது நூல்களை அச்சிட்டுக் கொண்டிருக்கும் அதிசயப் பெண்மணி முனைவர் மரியா தெரசா சென்னையில் திருமுல்லைவாயிலில் வசிக்கிறார்.
ஆசிரியையாக சேவையைத் தொடங்கி பேராசிரியையாக ஓய்வு பெற்றிருக்கும் மரியா தெரசா ஹிந்தியிலும் இரண்டு எம்.ஏ பட்டம் வாங்கி இருப்பதுடன் தமிழ் கவிதைகளையும் இந்தியில் மொழிபெயர்த்து ஏழு நூல்கள் வெளியிட்டுள்ளார்.
தமிழர் ஒருவர் இந்தியில் தமிழ்க் கவிதைகளை இந்த அளவுக்கு மொழி
பெயர்ப்பு செய்திருப்பது மரியா தெரசா மட்டுமே! தமிழில் மரபுக் கவிதை, கட்டுரை, சிறுகதை என 150- க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய மரியா, ஹைக்கூ கவிதைகளையும் செம்மையாகக் கையாண்டிருக்கிறார். "ஹைக்கூ' கவிதை நூல்கள் பல எழுதியிருக்கும் இவர் தமிழுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணம் செய்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.
"துளிப்பா எனப்படும் ஹைக்கூ கவிதை பிரிவில் பலருக்கும் தெரியாத விஷயம் உள்ளது. முரண் கூ, போதனைக் கூ, மோனைக் கூ , எதுகைக் கூ , குறில்
கூ , நெடில் கூ, சென்றியு கூ, மூன்றியோ கூ, லிமரைக் கூ, குறள் கூ, போன்ற வகைகள் தமிழ் ஹைக்கூவில் உள்ளன. இந்த வகைகள் அனைத்திலும் நான் கவிதைகள் எழுதி நூல்களாக வெளியிட்டிருக்கிறேன். இப்படி எல்லாவகை ஹைக்கூவில் கவிதை நூல்களை நான் மட்டுமே வெளியிட்டுள்ளேன்.
ஒரு வரி கவிதை .. இரண்டு வரிகள் கவிதை என்று எட்டு வரிகள் வரை தனித்தனி கவிதைகள் எழுதி நூல்களாக வெளியிட்டுள்ளேன். ஒரு "விஷயத்தை' எடுத்துக் கொண்டு மரபு, புதுக்கவிதை, ஹைக்கூ , வசனக் கவிதை என்று ஒன்பது வகை கவிதைகளை எழுதி நூலாக வெளியிட்டுள்ளேன். இவை கவிதை உலகில் நான் நடத்திய சோதனைகள் என்று சொல்லலாம். பல அறிஞர்கள் எனது சோதனை முயற்சிகளைப் பாராட்டியதுடன் பல இலக்கிய அமைப்புகள் நூற்றுக்கும் அதிகமான விருதுகள் வழங்கி என்னைக் கெüரவித்துள்ளன.
முதல் நாற்பது நூல்களை ஒரே மேடையில் ஒரே சமயத்தில் சென்ற ஆண்டு வெளியிட்டதால், "யுனிவர்சல் அச்சீவ்மென்ட் ஆஃப் ரெக்கார்டஸ்'ஸில் இடம் பிடித்துள்ளேன். இரண்டாவது நூறு நூல்களை ஒரே மேடையில் வெளியிடுவது கரோனா பாதிப்பு காரணமாகத் தள்ளிப் போயுள்ளது. வரும் டிசம்பரில் அல்லது புத்தாண்டின் துவக்கத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
விவரம் தெரிந்த காலத்திலிருந்து தமிழ் மேல் ஆர்வம் வந்த காரணத்தால்
தமிழில் முதுகலை முனைவர் பட்டம் பெற்று பல நூல்களை எழுத வாய்ப்பு கிடைத்ததை ஒரு வரமாகக் கருதுகிறேன். எனது கவிதைகள் கல்லூரிகளில் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கேரளத்தில் பிளஸ் டூ வகுப்பு ஆசிரியர்கள் பனுவல் நூலில் எனது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. கல்லூரி மாணவர்கள் தங்களது எம் ஃ பில், முனைவர் படத்திற்காக எனது கவிதை நூல்களை ஆய்வு செய்துள்ளார்கள். அவர்கள் என்னைச் சந்திக்க எனது இல்லத்திற்கு வந்து எனது கவிதைகள் குறித்து உரையாடும் போது மாணவர்களிடத்தில் எனது கவிதைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், இன்றைய கவிதைகளின் தரம் அதன் தாக்கம் குறித்தும் புதிய கவிஞர்கள் அறிமுகமாகியிருப்பது குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.
கரோனா காலத்தில் வீட்டில் இருக்கும் போது அவ்வப்போது கவிதைகள் எழுதுவதும், சக கவிஞர்கள் தமிழில் எழுதியிருக்கும் ஹைக்கூ கவிதைகளை இந்தியில் மொழிபெயர்ப்பதும்தான் மன அழுத்தத்தை மாற்றும் உபாயமாக அமைந்திருக்கின்றன.
தமிழால்தான் நான் உயர்ந்தேன்... தமிழால்தான் நான் அறியப்படுகிறேன்... இந்த கெüரவம்தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது'' என்கிறார் மரியா தெரசா.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT