மகளிர்மணி

கீல்வாதத்தைப் போக்கும் உணவுமுறை!

21st Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

 

எந்த ஒரு நோயும் தொடக்க நிலையிலேயே துல்லியமான அறிகுறிகள் மற்றும் சரியான பரிசோதனைகள் மூலமாக தெரிந்துகொள்ளப்படும்போது, சிகிச்சையும், குணமும் எளிதாகி விடுகிறது. முறையான உணவு, கூடுதலாக பலனைக் கொடுத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவ்வாறு, எளிதாகக் கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை மற்றும் உணவு முறைகளாலேயே முழுவதும் சரி செய்துகொள்ளக் கூடிய ஒரு நோய்தான் கவுட் (GOUT) என்னும் கீல் வாதம். இந்நோய் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் பியூரின் என்ற பொருள் பற்றி முதலில் தெரிந்துகொள்வோம்.

கார்பன் மற்றும் நைட்ரஜன் அணுக்களால் உருவாக்கப்பட்டு, செல்களின் ஈNA மற்றும் RNA மரபணுக்களில் அடங்கியுள்ள மூலக்கூறுகளே இந்த பியூரின் என்னும் பொருட்கள். மனித உடலைப் பொருத்தவரையில், இவை இரண்டு வகைகளில் அமைந்துள்ளன. முதல் வகையானது, மனித உடலால் உற்பத்தி செய்யப்பட்டு, செல்களில் சேமிக்கப்பட்டு, வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் மூலமாக வெளியேற்றப்பட வேண்டிய உள்ளார்ந்த பியூரின் (endogenous purine) . இரண்டாம் வகையானது, வெளியீட்டு பியூரின் (exogenous purine) என்னும் உணவுப்பொருட்கள் மூலமாக உடலுக்குள் சென்று, செரிமானத்திற்குள்ளாகி, வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படும் பொருட்கள். இவை இரண்டுமே, பல்வேறு கட்ட மாற்றங்களுக்கு பின், யூரிக் அமிலம் என்ற துணைப் பொருளைக் கொடுக்கின்றன. சாதாரணமாகவே 90 சதவிகித யூரிக் அமிலம் உடலுக்குள்ளேயே மறுசுழற்சியில் உறிஞ்சப்பட்டு, மீதம் உள்ளவையே சிறுநீரிலும், மலத்திலும் வெளியேற்றப்படுகிறது.

பெரும்பாலும், 35 வயதிற்கு மேல், கை கால் பெருவிரல் மூட்டுகள் சிவந்து, சிறிதளவும் அசைக்க இயலாமல், வலியுடன் கூடிய வீக்கத்தின் வழியாகவே கீல்வாதத்தின் அறிகுறிகளைத் தெரிந்துகொள்ள முடியும். இந்நிலை தீவிரமாகும்போது, காது மடல்களில் சிறுசிறு கட்டிகள், முட்டுக்கட்டினாற்போன்று ஏற்படுவதுண்டு. இதனுடன் சேர்ந்து, சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு, அதன் அறிகுறிகள் வாயிலாக, யூரிக் அமிலம் மற்றும் பியூரின் ஆகிய இரண்டின் அளவுகளும் அதிகரித்து இருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரியவருகிறது. சாதாரணமாக, யூரிக் அமிலமானது, ஆண்களுக்கு 2.5 முதல் 7.0 mg/dl அளவிலும், பெண்களுக்கு 1.5 முதல் 6.0 mg/dl அளவிலும் இருக்க வேண்டும். கீல்வாதம் இருப்பின் இந்த அளவு அதிகரித்திருக்கும்.

ADVERTISEMENT

தாவர வகை மற்றும் மாமிச வகை என்று இரண்டு உணவுகளிலுமே, இயற்கையாகவே பியூரின் பொருள் இருப்பதால், அதை தவிர்ப்பது அரிதான ஒன்று என்றாலும், மாமிச உணவுகளில் சற்று அதிகமாகவே இருக்கும் நிலையில், அளவுக்கு அதிகமான இறைச்சியுணவுகளை உண்பவர்களும், பியூரின் வெளியேற்றத்தை ஆல்கஹால் சார்ந்த மதுபானங்கள் குறைத்து விடுவதால், மது அருந்துபவர்களும், அதிக இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்பவர்களும் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

கீல்வாதத்திற்கான காரணிகளும், அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்கள், பெண்கள் என்ற பாலினத்தைப் பொருத்தவரையில், இயற்கையாகவே, பெண்களைவிட ஆண்களுக்கு யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதால், பாதிப்பு ஆண்களுக்கே அதிகம். ஆனாலும், மாதவிடாய் நின்றுவிட்ட நிலையில், ஏறக்குறைய இருவரின் யூரிக் அமிலத்தின் அளவும் ஒரே மாதிரியாக இருப்பதால், அப்போது, கீல்வாதத்தின் அறிகுறிகள் வருமென்பதால், உணவு முறையையும், உடற்பயிற்சியையும் சரியாகக் கடைப்பிடித்தால், இந்நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

உணவு முறையை மாற்றியமைத்துக் கொள்வதே இந்நிலை ஏற்படுவதைத் தவிர்க்கக்கூடிய முக்கிய காரணியாக இருக்கிறது. செயற்கை இனிப்புகள் மற்றும் பதப்படுத்துவதற்காக சேர்க்கும் வேதிப்பொருட்கள் கலந்த ஜாம், ஜெல்லி, கெட்சப், குளிர் பானங்கள், டின்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் போன்ற உணவுகளும், இறைச்சி, கால்நடைகளின் உள்ளுறுப்புகள் மற்றும் கடல் உணவுகளும், மதுபானங்களும் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்துபவை என்பதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அதிக உடல்பருமன் உள்ளவர்களின் உடலில் யூரிக் அமிலத்தின் அளவும் அதிகமாக இருக்குமென்பதால், அதை வெளியேற்றும் செயல்பாட்டில் சிறுநீரகமும் பாதிப்படையும் என்பதாலும், வயதுக்கேற்ற உடல் எடையை சரியான அளவில் பராமரித்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் இதற்கு உதவிசெய்யும்.

இதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் சிலவகை மருந்துகளான க்ண்ன்ழ்ங்ற்ண்ஸ்ரீள் எனப்படும் உடலின் அதிகப்படியான சோடியத்தைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் யூரிக் அமிலத்தை மீண்டும் உடலுக்கு உறிஞ்சுவதை அதிகரிப்பதோடு நிற்காமல், சிறுநீரில் வெளியேற்றுவதையும் குறைத்துவிடுகிறது. மேலும், ஆஸ்பிரின், “பி” குடும்ப வைட்டமின்கள், சில மருத்துவக் காரணங்களுக்காக எதிர்ப்புச்சக்தியைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சைக்ளோஸ்போரைன், சிக்கலான அறுவை சிகிச்சைகள் மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகியவையும் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்துவிடுமென்பதால், உணவில் தீவிர கவனம் செலுத்தினால் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறை, சிறுநீரகத்தில் யூரிக் அமிலத்தின் படிமானங்களை ஏற்படுத்திவிடுமென்பதால், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், வியர்வை வெளியேறுமளவிற்கு உடற்பயிற்சி செய்வதும், இந்நோயினால் ஏற்படும் அழற்சி மற்றும் வலிக்கான காரணிகளை குறைப்பதற்கும், உடலையும் குடலையும் சுத்தப்படுத்துவதற்கும், எலுமிச்சைச் சாறு, இஞ்சிச்சாறு, சீரகம், மஞ்சள் கலந்த நீர், புதினா மற்றும் இஞ்சி கலந்த நீர்த்த பழச்சாறுகள், நெல்லிக்காய் சாறு போன்றவை உதவியாக இருக்கும். இந்தப் பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது. புளிப்புத் தன்மை கொண்ட பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய் போன்ற உணவுகளிலுள்ள சிட்ரிக் அமிலமானது, கால்சியத்துடன் இணைவதால், சிறுநீரகத்தில் கால்சியம் படிமானம் ஏற்படுவது குறைக்கப்படு வதுடன், சிறுநீரில் உள்ள சிட்ரேட் வெளியேற்றப்பட்டு, யூரிக் அமிலத்தால் ஏற்படும் படிமானங்ளும் தவிர்க்கப்படுகின்றன.

கீல் வாத நோயில் குடும்பப் பாரம்பரிய காரணிகளும் இருப்பதால், குடும்பத்தில் எவரேனும் பாதிப்படைந்து இருக்கும் நிலையில், இந்நோய் வருவதற்கான சூழலில் இருப்பவர்கள், அனைத்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.

சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருக்கும் நீடித்த நோய்கள், உயர் ரத்த அழுத்தம், பிற இதய நோய்கள், நீரிழிவு, சிறுநீரக நோய்கள் போன்றவை கீல் வாதம் வருவதற்கான காரணிகளை அதிகரிக்கும் என்பதால், சிகிச்சையும் கட்டுப்பாடும் அவசியம்.
உணவுப்பொருட்களில் பியூரின் அளவு

பியூரின் அதிகம் உள்ள உணவுகள் (100 கிராம் உணவுக்கு 100 முதல் 1000 மி.கிராம்) - மீன் வகைகளில் நெத்திலி, கானாங்கெளுத்தி, மத்தி, கால்நடைகளின் மாமிசம், கடல் மெல்லுடலிகள், இதயம், மூளை, சிறுநீரகம், வாத்துக்கறி, ஈஸ்ட் போன்ற உணவுகளை கீல்வாதத்தால் அவதிப்படும் நிலையில் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பியூரின் மிதமான அளவில் உள்ள உணவுகள் (9 கிராம் உணவுக்கு 100 முதல் 100 மி.கிராம்) - பிற மீன்கள், கோழி இறைச்சி, மட்டி வகைகள், பீன்ஸ், காளான்கள், பட்டாணி போன்ற உணவுகளை குறைவான அளவில், நோயிலிருந்து மீண்ட பின் அவ்வப்போது தேவையெனில் சேர்த்துக்கொள்ளலாம்.

பியூரின் மிக குறைந்த அளவில் உள்ள உணவுகள் - ரொட்டி, தானிய வகைக் கஞ்சி வகைகள், மசாலா மற்றும் வாசனைப் பொருட்கள், முட்டை, பால் சார்ந்த உணவுகள், பழங்கள், தண்ணீர் போன்றவை யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்காத நிலையில், வெளியேற்றவும் துணைபுரிகின்றன. எனவே, இந்த வகைப்பாட்டில் உள்ள உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

-முனைவர். ப. வண்டார்குழலி  இராஜசேகர்
உதவி பேராசிரியர், மனையியல் துறை,
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி,
காரைக்கால்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT