மகளிர்மணி

ஏழை குழந்தைகளைத் தேடி நடமாடும் பள்ளி!

பூா்ணிமா


சிறப்பான வாழ்க்கைக்கு கல்விதான் முக்கியம். பணம் பின்னால் வரும். குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை சிறுவயதிலேயே அறிமுகப்படுத்துவது மிகவும் நல்லது. சமூகம் மற்றும் தீவிர உணர்வுகள் காரணமாக இன்றும் பல பிரச்னைகளை சந்தித்து வரும் ஏழை குழந்தைகள் நலனுக்காக பணியாற்றுகிறோம் என்று கூறும் சமூக ஆர்வலர் பீனா சேத் லஷ்கரி, மும்பையில் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் ஏழை குழந்தைகள் கல்வி கற்கும் பொருட்டு "டோர் ஸ்டெப் ஸ்கூல்' என்ற பெயரில் நடமாடும் பள்ளிகளை நடத்தி வருகிறார்.

குடிசைப் பகுதிகள், நடைபாதைகளில் வசிக்கும் குடும்பங்கள், கட்டுமானத் தொழிலாளர், புலம் பெயர்ந்தோர் குழந்தைகள் மட்டுமின்றி, பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளும் கல்வி கற்பது அவசியமென்பதை உணர்ந்த பீனா சேத் லஷ்கரி, "ஸ்கூல் ஆன் வீல்ஸ்' என்ற திட்டமொன்றை அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் துவங்க தீர்மானித்தார். ஏழை குழந்தைகள், வசதி படைத்த குடும்ப குழந்தைகள் போல் சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்று பழக்க வேண்டு மென்று கனவு காணுவதை நிறைவேற்ற வேண்டுமென்பதுதான் இவரது நோக்கமாக இருந்தது.

1988- ஆம் ஆண்டு சமூக சேவைத் துறையில் பட்டம் பெற்ற பீனாசேத், கல்லூரியில் படிக்கும்போது, ஒரு நகராட்சிப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்த போது, பல மாணவர்கள் மூன்று மற்றும் நான்காம் வகுப்பிலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றதை அறிந்தார். இதற்கு என்ன காரணம்? என்பதை விசாரித்தபோது, பெரும்பாலான குழந்தைகள் தினக்கூலி தொழிலாளர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதோடு பெற்றோர்களுடன் வேலைக்குப் போவது தெரிந்தது. அந்தக் குழந்தைகளிடம் சென்று, ""உங்களுக்கு கல்வி கற்க விருப்பமில்லையா?'' என்று கேட்ட போது, ""விருப்பம்தான் ஆனால் பள்ளிக் கூட நேரம்தான் ஒத்துவரவில்லை'' என்று கூறினார்களாம்.

அவர்களுடைய பெற்றோரும் தங்கள் பிள்ளைகள், ""எங்களைப் போன்று தினமும் வேலை செய்து சம்பாதிப்பதையே விரும்புகிறோம். அப்படியே படித்தாலும் நகரங்களில் நல்ல வேலை கிடைத்து அதில் வரும் வருமானம் குடும்பத்தை காப்பாற்றப் போதுமானதாக இருக்காது'' என்று கூறினார்களாம். அப்போது முதலே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்ற எண்ணம் பீனாசேத் மனதில் தோன்றியதாம்.

""கல்லூரியைவிட்டு வெளியே வந்ததும் இதே சிந்தனையில் இருந்த நான், ரயில் நிலையங்கள், கேட்வே ஆஃப் இந்தியா மற்றும் திறந்த வெளிகளில் ஏராளமான சிறுவர்கள் சுற்றித் திரிவதையும் பார்த்தேன். இவர்களுக்கும் முறையாக கல்வி கற்பித்தால் என்ன என்ற எண்ணம் மனதில் தோன்றியது. கூடவே திசை மாறியுள்ள இவர்களின் கவனத்தை கல்வியின் பக்கம் திருப்ப முடியுமா என்ற சந்தேகமும் எழுந்தது.

ஒரு பேருந்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் உள்ள அடிப்படை வசதிகளை அமைத்து, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே கொண்டு சென்றால், கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு ஏற்படலாம் அல்லவா? என்ற எண்ணமும் தோன்றியது. வகுப்பில் தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம், பொது அறிவியல் பாடங்களை கற்றுத் தருவதென்றும் தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வகுப்புகளை நடத்தினால் போதுமென்றும் நினைத்தேன். "ஸ்கூல் ஆன் வீல்ஸ்' திட்டம் தொடங்கியது.

நாங்கள் ஸ்கூல் ஆன் வீல்ஸ் திட்டத்தைத் தொடங்கினாலும், குழந்தைகளைச் சேர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. பல பெற்றோர், தங்கள் குழந்தைகளை படிக்க அனுப்ப விரும்பவில்லை. படிக்கப் போய்விட்டால் மீண்டும் குடும்பத்துக்கு உதவியாக வேலை செய்ய வரமாட்டார்கள் என்று நினைத்தார்கள். பகலில் வேலை செய்யட்டும் அவர்கள் வசதிக்கேற்ப மாலை நேர வகுப்புகள் நடத்துவதாக கூறினேன். இருப்பினும் பெண் குழந்தைகளை அனுப்பவும் அவர்கள் தயாராக இல்லை.

"உங்கள் குழந்தைகளை படிக்க வைக்க தொலைதூர பள்ளி
களுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. உங்கள் இருப்பிடங்களுக்கே வரும் வகையில் "டோர் ஸ்டெப் ஸ்கூல்' என்ற நடமாடும் பேருந்து பள்ளிகளை உருவாக்கியுள்ளோம். பெண் குழந்தைகளுக்கு காலை வகுப்புகள் நடத்துகிறோம். உங்களுடைய அடுத்த தலைமுறையினரை கல்வியறிவு உள்ளவர்களாக உருவாக்குங்கள். அவர்களுக்கு படிப்பது எழுதுவது மட்டுமின்றி அடிப்படை பாடங்களில் மட்டும் பயிற்சியளிக்கிறோம்' என்று கூறி குழந்தைகளை சேர்க்க தொடங்கினோம்.

ஒரு வகுப்பறைக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் ஒவ்வொரு பேருந்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று சுமார் ஏழு பேருந்துகள் "ஸ்கூல் ஆன் வீல்ஸ்' திட்டத்தில் பணியாற்றுகின்றன. குழந்தைகள் வசதியாக அமர்ந்து படிப்பதற்கும் எழுதுவதற்கும் டெஸ்க்குகள் உள்ளன. நீண்ட நேரம் அமர்ந்து படிப்பதை தவிர்த்து சற்று ஓய்வுடன் சுலபமாக பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. எங்கள் பயணத்தில் முதற்கட்டமாக 25 மாணவர்கள் வந்து சேர்ந்தனர். பின்னர் படிப்படியாக பெண் குழந்தைகள் உட்பட மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மூன்று முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே இந்த "டோர் ஸ்டெப் ஸ்கூல்' திட்டத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அவர்கள் படிப்பதற்கும், எழுதுவதற்கும் தேவையான புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் போல் சீருடை வழங்கியுள்ளோம். பாடப் புத்தகங்கள் வாங்க வசதியின்றி படிப்பை நிறுத்திவிட்ட குழந்தைகளும் இங்கு வந்து கல்வி பயிலுகின்றனர். படிப்பில் ஆர்வமில்லாத குழந்தைகளுக்கு தனி பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இங்கு படிக்கும் குழந்தைகள் மேற்கொண்டு அரசு பள்ளிகளில் நேரடியாக சேர்ந்து படிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், பல மாணவர்கள் தொடர்ந்து படித்து முன்னேறியுள்ளனர். மும்பையில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் ஒரே நேரத்தில் இந்த நடமாடும் பள்ளி பேருந்துகள் அனுப்பப்படுவதால், குழந்தைகள் ஆர்வத்துடன் காத்திருந்து பேருந்தில் ஏறி கல்வி கற்கின்றனர். ஒவ்வொரு பேருந்திலும் 100 குழந்தைகள் அமர்ந்து படிக்கும் வகையில் இடவசதி உள்ளது. ஷிப்ட் முறையில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் இத்திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 50 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

மும்பையில் தொடங்கிய இத்திட்டம் முப்பது ஆண்டுகளில் படிப்படியாக வளர்ச்சிப் பெற்று 1993- ஆம் ஆண்டு புணே நகரத்திற்கும் பரவியது. இன்று 500 ஆசிரியர்களுடன் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். வசதியற்ற குடும்பப் பெண்களே பெரும்பாலும் ஆசிரியைகளாக பணியாற்றுகின்றனர். "டோர் ஸ்டெப் ஸ்கூல்' முன்னாள் மாணவர்களில் சிலரும் ஆசிரியர்களாக உள்ளனர்.

2016-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ்- கேட்ட தம்பதியினர், அரசு சாரா தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வரும் எங்கள் "ஸ்கூல் ஆன் வீல்ஸ்' பற்றி கேள்விப்பட்டு நேரில் வந்து பார்த்து பாராட்டியது பெருமையாக இருந்தது.
தற்போது கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் "டோர் ஸ்டெப் ஸ்கூல்' நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்க அனுமதியளித்தவுடன் பழையபடி எங்கள் நடமாடும் பேருந்து பள்ளிகள் செயல்படும்'' என்கிறார் பீனா சேத் லஷ்கரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT